இந்தியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்தியா (India), தெற்கு ஆசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்தியா, இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியை தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியா பாரதம் என்றும் அழைக்கப் படுகிறது. இந்தியா என்ற பெயர் சிந்து நதியின் பெயரிலிருந்து பெறப்பட்டது.
பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியாவின் கடற்கரை மொத்தம் 7000 கி.மீ. நீளம் கொண்டது. நிலப்பகுதியில், வங்காளதேசம், மியன்மார், சீனா, பூட்டான், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் என்பவற்றுடன் இந்தியா எல்லைகளைக் கொண்டுள்ளது. இலங்கையும், மாலத்தீவும் இந்தியக்கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் உள்ளன.
இந்தியா, ஒரு பில்லியன் மக்களை கொண்ட, உலகின் இரண்டாவது சனத்தொகை மிக்க நாடு. பொருளாதரத்தில் பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் நான்காவது இடத்தில் இருக்கின்றது. பண்டைய நாகரிகங்கள் பல இந்தியாவிலேயே தோன்றின. சிந்து சமவெளி நாகரிகம், ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகங்கள் போன்றவை இவற்றுள் அடங்கும். இந்து சமயம், புத்தம், சமணம், மற்றும் சீக்கியம் ஆகிய நான்கு முக்கிய மதங்கள் இந்தியாவிலேயே தோன்றின.
இந்தியக் குடியரசு भारत गणराज्य Bhārat Ganarājya |
|
குறிக்கோள்: சத்யமேவ ஜெயதே (சமஸ்கிருதம்: வாய்மையே வெல்லும்) |
|
நாட்டு வணக்கம்: ஜன கண மன ( இசைக்கோப்பு) | |
தலைநகரம் | புது தில்லி |
பெரிய நகரம் | மும்பை (பம்பாய்) |
ஆட்சி மொழி(கள்) | இந்தி, ஆங்கிலம், மற்றும் 21 ஏணைய மொழிகள் |
அரசு | கூட்டாட்சி குடியரசு |
குடியரசுத் தலைவர் பிரதமர் |
ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மன்மோகன் சிங் |
விடுதலை - அறிவிக்கப்பட்டது - குடியரசானது |
ஐக்கிய இராச்சியத்திடமிருந்து 1947-08-15 1950-01-26 |
பரப்பளவு | |
- மொத்தம் | 3,287,590 கி.மீ.² (7ஆவது) |
1,269,346 சதுர மைல் | |
- நீர் (%) | 9.56 |
மக்கள்தொகை | |
- 2005 மதிப்பீடு | 1,080,264,388 (2ஆவது) |
- 2001 கணிப்பீடு | 1,027,015,247 |
- அடர்த்தி | 329/கிமி² (31ஆவது) 852/சதுர மைல் |
மொ.தே.உ (கொ.ச.வே) | 2005 மதிப்பீடு |
- மொத்தம் | $3.602 டிரில்லியன் (4ஆவது) |
- ஆள்வீதம் | $3262 (125ஆவது) |
ம.வ.சு (2003) | 0.602 (127வது) – மத்திம |
நாணயம் | ரூபாய் 1 (INR ) |
நேர வலயம் | இந்திய சீர்தர நேரம் (ஒ.ச.நே.+5:30) |
- கோடை (ப.சே.நே.) | நடைமுறையில்லை (ஒ.ச.நே.+5:30) |
இணைய குறி | .in |
தொலைபேசி | +91 |
மின்சாரம் | |
- மின்னழுத்தம் | 230 V |
- அலையெண் | 50 Hz |
1 ஒருமைக்கு Re. (ஒரு ரூபாய்) |
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
தனிக் கட்டுரை: இந்தியாவின் வரலாறு
கி.மு.300ல் அசோகரால் கட்டப்பட்டு, மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாஞ்சி ஸ்தூபம் போன்று 40,000 வருடங்களுக்கு முந்திய, பழைய கற்காலத்தைச் சேர்ந்த பாறை ஓவிய மரபு, மத்திய இந்தியாவிலுள்ள பிம்பேடகா என்னுமிடத்திலும் வேறு இடங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது. தெற்காசியாவின், முதல் நிரந்தரக் குடியிருப்புகள் சுமார் 9000 வருடங்களுக்கு முன் தோன்றின. இப் பகுதி சார் பண்பாடு, உலகின் மிகப் பழைய நாகரிகங்களுள் ஒன்றாக, கி.மு 600 தொடக்கம் கி.மு 1900 வரை உச்ச நிலையிலிரூந்த, சிந்துவெளி நாகரீகமாக வளர்ச்சியடைந்தது.
கி.மு 1500 அளவில், இந்தியாவின் வடமேற்கிலிருந்து ஏற்பட்ட ஆரிய இனக்குழுக்களின் உள்வரவாலும், ஓரளவுக்கு உள்ளூர் வாசிகளுடனான கலப்பினாலும் வேதகாலப் பண்பாடு உருவானதாக ஒரு கருத்து உண்டு. காலப்போக்கில் ஆரியரின் பண்பாடு, மொழி மற்றும் சமயம் என்பன இப்பிரதேசத்தில் மிக முக்கியத்துவம் பெற்றவையாகின என்று இக்கருத்து கூறகிறது. முந்தைய, பரவலாகப் பரிச்சயமான நோக்கில், இவ்வுள்வரவானது, திடீரென ஏற்பட்ட வன்முறை ஆக்கிரமிப்பாகும். எனினும், அண்மைக்காலச் சிந்தனைகள், இது ஒரு படிப்படியான உள்வரவாக இருந்திருக்கக் கூடும் என்ற கருத்துக்கு ஆதரவாக இருப்பது போல் தெரிகிறது. (ஆரிய ஆக்கிரமிப்புக் கோட்பாட்டைப் பார்க்கவும்). வடமேற்கிலிருந்து எந்த பிரிவினரும் வரவில்லை என்றும், சிந்து சமவெளி நாகரிகமும் வேத நாகரிகமும் ஒன்று என்றும், சிந்து சமவெளி நாகரித்தினரும், தமிழ் சங்க இலக்கியங்களில் கூறப்படும் மூழ்கிய குமரிக் கண்டத்தைச் சேர்ந்த தென்னகத்தாரும் இன்றைய இந்தியரின் முன்னோர்கள் என்றும் மற்றொரு கருத்து உண்டு. எனினும் இதில் எந்த கருத்தும் முழுமையாகவும் திட்டவட்டமாக நிரூபிக்கப் படவில்லை. இது பற்றி ஆராய்ச்சியாளர்களிடையே பல கருத்து வேறுபாடுகள் உண்டு.
மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கிய குப்தர்களின் ஆட்சிக்காலமானது பண்டைய இந்தியாவின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. சேர, சோழ, பாண்டிய, பல்லவ, சாளுக்கிய, கடம்பப் பேரரசுகள் தென்னிந்தியாவை பல்வேறு காலகட்டங்களில் ஆண்டன.
அராபியர் வருகை எட்டாம் நூற்றாண்டில் தொடங்கியது. துருக்கியர் 12ஆம் நூற்றாண்டில் வரத்தொடங்கினர். இவர்களை தொடர்ந்து ஐரோப்பிய வர்த்தகர்கள் 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் வரத்தொடங்கினர்.
முகலாயப் பேரரசை அடிபணிய வைத்ததன் மூலம், 19ஆம் நூற்றாண்டில், கிட்டத்தட்ட முழு இந்தியாவினதும் அரசியல் கட்டுப்பாடு ஆங்கிலேயப் பேரரசிடம் போய்ச் சேர்ந்தது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி தலைமையேற்று நடத்திய வன்முறையற்ற அகிம்சைப் போராட்டம் 1947-இல் கிடைத்த இந்திய விடுதலைக்கு வித்திட்டது. இந்திய துணைக்கண்டம் மதச்சார்பற்ற இந்தியாவாகவும் இஸ்லாமிய நாடான பாக்கிஸ்தானாகவும் பிரிந்தது. பின்னர் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி இந்தியா குடியரசு ஆனது. தொடர்ச்சியற்ற நிலப் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கு பாக்கிஸ்தானிடையே 1971-இல் உள்நாட்டுப் போர் மூண்டதற்குப் பிறகு இந்தியத் தலையீட்டின் பேரில் கிழக்கு பாக்கிஸ்தான் பங்களாதேஷ் என்ற தன்னாட்சி பெற்ற நாடாகப் பிரிந்தது. 1991-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட தாராளமயமாக்கலுக்குப் பிறகு இந்தியப்பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி பெறத்தொடங்கியது.
இயற்கை வளம், மனித வளம் மற்றும் பாதுகாப்பிற்கு உகந்த நில அமைப்பு ஆகியவை இந்தியாவின் முக்கிய பலங்களில் சிலவாகும். பாக்கிஸ்தானுடனான காஷ்மீர் பிரச்சினை, கவலை தரும் மக்கள் தொகை பெருக்கம், சுற்றுச் சூழல் சீர் கேடு, ஊழல் ஆகியவை இந்தியா எதிர் நோக்கும் சவால்களில் சிலவாகும்.
இவற்றையும் பார்க்க: இந்திய வரலாற்று காலக் கோடு
[தொகு] அரசியல் அமைப்பு
இந்தியா 28 மாநிலங்களையும் ஆறு ஒருங்கிணைந்த பிரதேசங்களையும் கொண்ட ஒரு கூட்டமைப்பு ஆகும். இக்கூட்டமைப்பு அதிகார பூர்வமாக இந்திய சுதந்திர சமூகவுடமை சமய சார்பற்ற மக்களாட்சிக் குடியரசு என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரச நிர்வாகம் சட்டப் பேரவை, செயலாற்றுப் பேரவை, சுதந்திர நீதியமைப்பு ஆகிய மூன்று கூறுகளால் பேணப்படுகின்றது. இவை கூட்டாகவும், அதேவேளை ஒவ்வொரு கூறும் மற்றதன் நடவடிக்கைகளை, தவறான அதிகாரப் பயன்பாடுகளை , ஊழலை கண்காணிக்ககூடிய வகையில் ஆங்கிலேய நிர்வாக அமைப்புகளை பின்பற்றி கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்திய நாட்டின் தலைவராக குடியரசுத் தலைவர் இருக்கின்றார் எனினும் இவரது கடமைகள் பெரும்பாலும் மரபுவழிச்சடங்குகள் அடிப்படையிலேயே அமைகின்றன. குடியரசுத் தலைவரும் குடியரசுத் துணைத்தலைவரும் பாராளுமன்ற மற்றும் மாநில, பிரதேச சட்டமன்றங்களின் (ஈரவை அமைப்பாயின் கீழவை) உறுப்பினர்களால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
செயல் அதிகாரம் பிரதமரிடமும் அவரின் தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சரவையிடமும் இருக்கின்றது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரை குடியரசுத் தலைவர் பிரதமாராக நியமிப்பார். பிரதமரின் ஆலோசனைக்கேற்ப பிற அமைச்சர்களை குடியரசுத் தலைவர் அங்கீகரிப்பார்.
இந்திய பாராளுமன்றம் இரு சட்ட அவைகளை கொண்டு உள்ளது. அவை மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகும். இவை இரண்டும் இந்திய கட்டமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை. அமைச்சரவை பாராளுமன்றத்திற்கு, அதிலும் குறிப்பாக மக்களவைக்கு, கடமையுற்றது.
மாநிலங்களவையின் 233 உறுப்பினர்கள் மாநில-பிரதேச சட்டப்பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு வருடங்களுக்கு பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தலுக்கு செல்ல வேண்டியிருக்கும். மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 542 உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.
இந்திய சட்ட கட்டமைப்பின் மிக உயர் அதிகாரம் இந்திய உச்ச நீதிமன்றத்திடம் உள்ளது. உச்ச நீதிமன்றம் மாநிலங்களுக்கும் மத்திய அரசிற்கும் இடையான பிரச்சினைகள் தொடர்பாக ஆள் வரை உண்டு. மேலும் மேன் முறையீடு ஆள் வரையும் உயர் நீதிமன்றங்கள் மீது உண்டு. பெரிய மாநிலங்களுக்கு ஒன்றும் சிறிய மாநிலங்களுக்கு பொதுவாகவும் 18 உயர் நீதி மன்றங்கள் இயங்குகின்றன. அதற்கு அடுத்த நிலைகளில் மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளன. இவை அனைத்திலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது.
[தொகு] அரசியல்
இந்தியாவில் பல கட்சி ஆட்சி முறை பின்பற்றப்படுவதால் எண்ணற்ற கட்சிகள் உள்ளன. இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு பெரும்பாலும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியே ஆண்டு வந்திருக்கிறது. மற்ற பெரிய தேசிய கட்சிகள் பாரதிய ஜனதா கட்சி, ஜனதா தளம் ஆகியவை ஆகும்.
[தொகு] மாநிலங்களும் பிரதேசங்களும்
தனிக் கட்டுரை: இந்தியாவின் மாநிலங்களும் பிரதேசங்களும்
இந்திய நாடு 28 மாநிலங்களாகவும், ஆறு ஒருங்கிணைந்த பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. தில்லி, நாட்டின் தலைநகரப் பிரதேசம் ஆகும்.
- ஆந்திரப் பிரதேசம்
- அருணாச்சல் பிரதேசம்
- அஸ்ஸாம்
- பிஹார்
- சத்தீஸ்கர்
- கோவா
- குஜராத்
- ஹரியானா
- இமாசலப் பிரதேசம்
- ஜம்மு காஷ்மீர்
- ஜார்க்கண்ட்
- கர்நாடகம்
- கேரளம்
- மத்தியப் பிரதேசம்
- மகாராஷ்டிரம்
- மணிப்பூர்
- மேகாலயா
- மிசோரம்
- நாகாலாந்து
- ஒரிஸா
- பஞ்சாப்
- ராஜஸ்தான்
- சிக்கிம்
- தமிழ் நாடு
- திரிபுரா
- உத்தராஞ்சல்
- உத்தரப் பிரதேசம்
- மேற்கு வங்காளம்
- அந்தமான் நிக்கோபார் தீவுகள்
- சண்டிகர்
- தாத்ரா நாகர் ஹவேலி
- தாமன், தியு
- லட்சத்தீவுகள்
- புதுச்சேரி
- தில்லி
[தொகு] புவியியல்
தனிக் கட்டுரை:இந்தியாவின் புவியியல்
பரப்பளவில் இந்தியா உலகில் ஏழாவது பெரிய நாடாகும்.இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு பகுதியான இந்தியாவில் புவியியல் அடிப்படையில் மூன்று உட்பகுதிகள் உள்ளன. அவை, வடக்கே இமாலய மலைத்தொடர்கள் (உயரமான சிகரம் கஞ்சண்சுங்கா 8,598 மீ), இந்து-கங்கை சமவெளி (மேற்கில் தார் பாலைவனம்) மற்றும் தக்கான் பீடபூமி. தக்கான் பீடபூமி மூன்று திசைகளில் முறையே கிழக்கே வங்காள விரிகுடாக் கடல், தெற்கே இந்துமாக்கடல் மற்றும் மேற்கே அரபுக்கடல் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.
இந்தியாவில் பாயும் பெரிய ஆறுகள் கங்கை, கோதாவரி, பிரம்மபுத்ரா, யமுனா, சிந்து நதி மற்றும் கிருஷ்ணா ஆகியவை. இந்தியா என்ற பெயர் ஏற்படக் காரணமாக இருந்தது சிந்து நதியாகும்.
இந்தியாவின் தட்ப வெட்பம் தெற்கே வெப்பம் மிகுந்த பருவ மழை சார்ந்ததாகவும், வடக்கே மட்டான தட்பவெப்பமுள்ள காலநிலை ஆகவும் ஏனைய பகுதிகளில் பல்வேறு இடைப்பட்ட தட்ப வெட்ப நிலைகளாகவும் நிலவுகிறது.
[தொகு] பொருளாதாரம்
தனிக் கட்டுரை:இந்தியாவின் பொருளாதாரம்
இந்தியப் பொருளாதாரம் மரபுவழி வேளாண்மை, தற்கால வேளாண்மை, கைவினைப் பொருள் தயாரிப்பு, பல தரப்பட்ட புதிய தொழில்கள் மற்றும் மென்பொருள் உட்பட்ட பல துணைச் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. 2003-ஆம் ஆண்டு நிலவரத்தின் படி மென்பொருள் ஏற்றுமதி மட்டும் சுமார் 1000 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது. இருப்பினும் மக்கள் தொகையில் கால் பங்கு வகிப்பவர்கள் சரியான உணவின்றி வறுமையில் வாழ்கின்றனர்.
இந்தியாவின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு மற்றும் நாணய மதிப்பு 2001 மற்றும் பின் வரும் ஆண்டுகளில் மிகவும் நல்ல நிலையில் இருந்தன. இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தி $481 பில்லியன் (48,100 கோடி டாலர்) அளவை எட்டியதன் மூலம் உலக நாடுகளில் 12-ம் இடத்திற்கு முன்னேறியது. 2002-ல் பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் $2.66 டிரில்லியன் (2,66,000 கோடி டாலர்) அளவுடன் உலகில் நான்காவது இடத்தில் இருந்தது.
இந்தியா வளர்ச்சியடைந்து வரும் ஒரு நாடு. ஆயினும், 350 - 400 மில்லியன்[1] மக்கள் வறுமை கோட்டின் கீழேயே வாழ்கின்றார்கள். இவர்களுக்குரிய அடிப்படை உணவு, உறைவிட, கல்வி, மருத்துவ வசதிகள் மிகவும் குறைவு. மேலும், 40%[2] மக்களுக்கு எழுதவோ வாசிக்கவோ தெரியாது. இந்தியாவின் பொருளாதர பகிர்வு மிகவும் சமனற்றது. குறிப்பாக, தலித்துக்கள், ஒடுக்கப்பட்டோருக்கும் மற்றவருக்கும், நகர வாசிகளுக்கும், கிராம வாசிகளுக்குமான பொருளாதார நிலை வேறுபாடுகள் மிகவும் பெரிது.
[தொகு] மக்கள்தொகை பரம்பல்
தனிக் கட்டுரை: இந்தியாவின் மக்கள்தொகை பரம்பல்
உலக நாடுகளில், இந்தியா மக்கள் தொகையில் இரண்டாமிடம் வகிக்கிறது. சீனா மட்டுமே இந்தியாவை விட அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும். பலதரப்பட்ட மக்களைக் கொண்டுள்ள இந்தியாவில் சாதி, சமயம், மற்றும் மொழி ஆகியவை சமுதாய மற்றும் அரசியல் குழு நிறுவுதலில் முக்கியக் காரணிகளாக உள்ளன.
[தொகு] மொழி
இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் பெரும்பாலானவை இரண்டு பெரிய மொழிக்குடும்பங்களுள் அடங்கும். அவை இந்திய-இரானிய மற்றும் திராவிட மொழிக்குடும்பங்கள். தேவநாகரி எழுத்துருவில் வழங்கப்படும் இந்தி, இந்தியாவின் தேசிய மொழியாகும். எனினும், பல மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களில் பரவலாக பேசப்படும் மொழி அதிகாரப்பூர்வ மொழியாக உள்ளது. அவை கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு, வங்காள மொழி, மராத்தி, உருது, குஜராத்தி, ஒரியா, பஞ்சாபி, அசாமிய மொழி, காஷ்மீரி, சிந்தி, நேபாளி, கொங்கனி, சமஸ்கிருதம் முதலியன. நாடு முழுவதும் பேசப்படும் ஆங்கிலம், ஒர் இணைப்பு மொழியாக செயல்படுகிறது. தமிழும் சமஸ்கிருதமும் செம்மொழித் தகுதி பெற்ற இந்திய மொழிகளாகும். இந்தியாவில் பேசப்படும் தாய்மொழிகளின் மொத்த எண்ணிக்கை 1652 ஆகும்.
[தொகு] சமயம்
இந்தியாவில் 83% மக்கள் இந்து சமயத்தில் பிறந்தவர்கள். உலகிலேயே இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுவோர் அதிகம் வாழும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. கிறித்தவம், சீக்கியம், சமணம், அய்யாவழி, பௌத்தம், யூதம், Zoroastrianism ஆகியவை இந்தியாவில் பின்பற்றப்படும் மற்ற சமயங்கள்.
[தொகு] சமூக அமைப்பு
சாதிய அமைப்பே இந்திய சமூக கட்டமைப்பின் சமூக அதிகாரப் படிநிலை முறைமையின் அடித்தளம். சாதிய கட்டமைப்பு பிறப்பு, தொழில், பொருளாதாரம் மற்றும் சமயம் சார்ந்த கூறுகளால் ஆனது. இவ்வமைப்பின் தோற்றத்தை வேதங்களில் வலியுறுத்தப்படும் "நான்கு வர்ண" சாதி பெரும் பிரிவுகளில் காணலாம். இவற்றுள் பல்லாயிரக் கணக்கான உட்பிரிவுகளும் இருக்கின்றன. அவற்றிற்கு இடையேயான ஏற்றத்தாழ்வு நிலை ஒவ்வொறு பகுதியிலும் வெவ்வேறாக இருக்கின்றது. வேதங்களில் கூறப்படும் சாதி நெறிகளை தவறாக புரிந்து கொண்ட காரணத்தால் மத்திய காலங்களில் சமூகத்தில் சாதி அடிப்படையில் பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் ஏற்பட்டன. தற்போது சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு எதிரான பல சட்டங்கள் உள்ளன. இது தவிர தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடும் உள்ளது. இருப்பினும் இந்நாட்டின் அரசியல் வாழ்விலும் திருமணம் உட்பட்ட பல சமூக வழக்கங்களிலும் சாதி ஒரு முக்கிய இடம் வகிக்கிறது.
இந்தியாவில் பெண்களின் சமூக நிலை என்றும் சம நிலமையுடையதாக இருக்கவில்லை. அரசியலில், தொழில் வாய்ப்பில், கல்வியில், பொருளாதார பங்கில் பெண்கள் புறக்கணிகப்பட்டோ தடுக்கப்பட்டோ வந்துள்ளார்கள். பெண் சிசுக் கொலை, சிறுவர் திருமணம், சீதனம், உடன்கட்டையேறுதல், மறுமண மறுப்பு, மணவிலக்கு மறுப்பு, உடமை மறுப்பு, கொத்தடிமையாக்கல், கோயிலுக்கு அடிமையாக்கல் (தாசிகள்) என பெண்களின் மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன. சட்ட ரீதியாக பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என கூட சொல்ல இயலாது ஏனெனில் இந்தியாவில் சமய அடிப்படையிலான குடியியல் சட்டம் நடப்பில் இருக்கின்றது. எனினும், இந்திய வரலாற்றில் மற்ற நாடுகள் போல் அல்லாத ஒரு முரண்பாடும் உண்டு. அதாவது, பெண்கள் தெய்வங்களாக வழிபடப்படல், பெண்களை சிவனுடைய சரி பாதியாக, சக்தியாக அங்கீகரித்தல் போன்றவையாம். மேலும், நவீன இந்தியாவின் ஆளுமை படைத்த தலைவர்களாக பெண்களும் இடம் பெறுகின்றார்கள். இந்திரா காந்தி, சோனியா காந்தி, ஜெயலலிதா ஆகியோர் சிறந்த எடுத்துக்காட்டுக்கள். இந்தியாவின் அனைத்து பாகங்களிலும் பெண்களின் நிலை ஒரே ரீதியில் அமைந்திருக்கின்றது என்றும் கூற முடியாது. குறிப்பாக கேரள மாநிலத்தில் பெண்களின் உரிமைகள் நன்கு பேணப்படுகின்றன.
[தொகு] பண்பாடு
தனிக் கட்டுரை: இந்தியாவின் பண்பாடு
இந்திய பண்பாடு உலகின் முக்கிய பண்பாட்டு ஊற்றுக்களில் ஒன்று. பல இன, மொழி, சமய, பண்பாட்டு தாக்கங்களை உள்வாங்கி இந்திய பண்பாடு வெளிப்பட்டு நிற்கின்றது. இப்பண்பாடு உயரிய, பலக்கிய (complex), பன்முக இசை, நடனம், இலக்கியம் என பல கூறுகளை கொண்டது. இந்திய பண்பாட்டின் தன்மை, வெளிப்பாடு, ஆழம் பல நிலைகளை கொண்டது. பின் வருவன ஒரு சுருக்கமே:
கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை இரு முக்கிய செந்நெறி இசை மரபுகள் ஆகும். கர்நாடக இசை தெற்கிலும், இந்துஸ்தானி இசை வடக்கிலும் தோற்றம் கொண்டன. இந்துஸ்தானி இசை, இஸ்லாமிய இசையின் தாக்கங்களை உள்வாங்கிய ஒரு மரபு. இவை தவிர நாட்டார் இசை, தமிழ் இசை என பல வேறு இசை மரபுகளும் வெளிப்பாடுகளும் உண்டு. இந்திய நடனக்கலையில் பரத நாட்டியம், ஒடிசி, குச்சிப்புடி, கதக், கதகளி போன்று பல நடன வெளிப்பாடுகள் உண்டு. நடனம் மூலம் கதைகளும் சொல்லப்படுகின்றன. இவை தவிர நாட்டுபுற நடனங்களும், பொம்மை நடனங்களும் உண்டு.
உலகின் மிக முக்கிய இலக்கிய உருவாக்கங்களை இந்தியா கொண்டுள்ளது. சமஸ்கிருதம், தமிழ், வங்காள மொழி, உருது போன்ற பல முக்கிய உலக மொழிகளின் இலக்கிய வெளிப்பாடுகள் இந்தியாவின் பண்பாட்டு கலவையில் வெளிப்பட்டு நிற்கின்றன. வேதம், வேதாந்தம், ஆகமங்கள், புத்தசமய படைப்புக்கள், காப்பியங்கள் (இராமாயணம், மகாபாரதம்), தமிழ் சங்க இலக்கியங்கள், ஐம்பெரும் தமிழ் காப்பியங்கள் என பல கோணங்களில் இந்திய இலக்கியம் வெளிப்படுகின்றது.
கொண்டாட்டங்கள் இந்திய பண்பாட்டின், வாழ்வியலின் இணை பிரியா கூறுகள் ஆகும். பொங்கல், தீபாவளி, நவராத்திரி என கொண்டாட்டங்கள் பல உண்டு. இந்திய சுதந்திர தினம், மகாத்மா காந்தி பிறந்த தினம் போன்றவையும் முக்கியத்துவம் வாய்ந்த தேசியக் கொண்டாட்டங்கள் ஆகும். மேலும், தனி மனித வாழ்வியல் நிகழ்வுகளை மையமாக வைத்தும் பல கொண்டாட்டங்கள் உண்டு.
பண்டைய இந்தியாவானது அறிவியலில் சிறந்து விளங்கியது. ஆரியபட்டர், பாஸ்கரர் ஆகியோர் கோள்களின் இயக்கங்களின் பற்றி ஆராய்ந்த அறிஞர்களில் முக்கியமானவர்களாவர். இன்று பொதுவாக பாவிக்கப்படும் கணித எண்கள், இந்து-அரேபிக் எண்கள் ஆகும். இந்தியாவிலேயே பூச்சியம் என்ற எண்ணக்கரு முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது என்பர்.
சேலை, வேட்டி, குர்தா, சல்வார் கமீஸ் போன்றவை, இந்தியாவில் தொன்று தொட்டு இருந்து வரும் உடைகளாகும். அரிசியும் கோதுமையும் இந்திய உணவு வகைகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தாளி, இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவை இந்தியர்கள் வழக்கமாக உட்கொள்ளும் உணவுகளில் சிலவாகும்.
இந்தியர்களின் முக்கியப் பொழுதுபோக்குகளில் ஒன்றாக திரைப்படங்கள் விளங்குகின்றன. இந்தி, தமிழ், தெலுங்குத் திரைப்படங்கள் அவற்றின் பொழுதுபோக்கு கூறுகளுக்காகவும் வங்காள மொழி மற்றும் மலையாளத் திரைப்படங்கள் அவற்றின் கலை நேர்த்திக்காகவும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன.
இந்தியாவின் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் குறிப்பிடத்தக்க சில பண்பாட்டு வேறுபாடுகளை காண முடியும் என்றாலும் மாநில மற்றும் மொழி எல்லைகளைக் கடந்து பண்பாட்டுச் கூடல் நிகழும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்நிகழ்வுக்கான முக்கிய காரணிகளில் ஒன்று, பெருகி வரும் மக்கள் தொடர்பு சாதனங்கள் ஆகும். 1990களுக்குப் பிறகு நிகழ்ந்த உலக மயமாக்கலும், பொருளாதார தாராளமயமாக்கலும் இந்தியப் பண்பாட்டை குறிப்பிடத்தக்க அளவு மேல் நாட்டு பண்பாட்டின் ஆதிக்கத்திற்கு உட்படுத்தியுள்ளன. நவீன இந்திய இசை, திரைப்படங்கள், நாடகங்கள், ஊடகங்கள், மொழிகள், வர்த்தக முறைகள், அன்றாட வாழ்க்கை முறை, பணியிட நடத்தை முறைகள், ஆண்-பெண் நட்பு / உறவு ஆகியவற்றில் ஆங்கிலச் சொற்கள், மேல் நாட்டு சிந்தனைகள், மனப்போக்குகள் இடம் பெறத் தொடங்கியுள்ளன.
பல்வேறு காலக்கட்டங்களில் பலவாறு மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தாலும், இந்திய பண்பாட்டின் முக்கியக் கூறுகளான சகிப்புத்தன்மை, விருந்தோம்பல், குடும்ப உறவுகளுக்கான மதிப்பு, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவை இன்னும் நீர்த்துப் போகாமல் இருப்பது அதன் சிறப்பாகும்.
இவற்றையும் பார்க்கவும்:
- இந்தியத் திரைப்படங்கள்
- இந்திய இசை
- இந்திய சாஸ்திரீய இசை
- இந்திய விழாக்கள்
- இந்திய இலக்கியம்
- இந்திய சாஸ்திரீய நடனம்
- இந்தியக் கிராமிய இசையும் நடனமும்
- இந்திய உணவு வகை
- இந்தியக் கட்டிடக்கலை
[தொகு] விளையாட்டு
ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டு எனினும் கிரிக்கெட் விளையாட்டே மிகப் பிரபலமாக உள்ளது.டென்னிஸ், செஸ், கால்பந்து (குறிப்பாக கேரளா, வங்காளம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில்) ஆகியவை பிரபலமான பிற விளையாட்டுகளாகும். கபடி ( சடுகுடு ), மல்யுத்தம், கில்லி தண்டா ஆகியவை இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுக்களாகும். ஒலிம்பிக் போட்டிகளில், தனி நபர் மற்றும் தடகள விளையாட்டுகளில் இந்தியாவின் சாதனைகள் பெரிய அளவில் இல்லை. ஹாக்கியில் மட்டும் சில முறைகள் தங்கப் பதக்கம் வென்றுள்ளது. டென்னிஸ் விளையாட்டைப் பொறுத்த வரையில் உலக அளவிலான இரட்டையர் போட்டிகளில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
சதுரங்கம், கேரம், போலோ, ஸ்னூக்கர், பாட்மிண்டன் ஆகிய விளையாட்டுகள் இந்தியாவிலிருந்து தோன்றியதாக கூறப்படுகிறது.
[தொகு] விடுமுறை நாட்கள்
இந்தியாவில் மூன்று நாட்கள் தேசிய விடுமுறை நாட்களாகும். அவையாவன:
- சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15)
- குடியரசு தினம் (ஜனவரி 26)
- காந்தி பிறந்த நாள் (அக்டோபர் 2)
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- இந்தியாவில் தொடர்புத் துறை
- இந்தியாவில் போக்குவரத்து, இந்திய இரயில்வே
- இந்தியாவிலுள்ள பெருநகரங்கள்
- இந்தியாவின் ஆயுதப்படை
- இந்தியாவின் வெளிநாட்டுத் தொடர்புகள்
- செல்வாக்குள்ள இந்திய வர்த்தகர்கள்
- பிரபல இந்தியர்களின் பட்டியல்
- இந்தியா தொடர்பான தலைப்புக்களின் பட்டியல்
- இந்தியாவில் மக்கள் தொடர்புச் சாதனங்கள்
- இந்திய அரசியல் கட்சிகள்
- குடிமக்களுக்கான கௌரவம்
- பாரத ரத்னா
- பத்ம விபூஷண்
- பத்ம பூஷண்
- பத்ம ஸ்ரீ
[தொகு] துணை நூல்கள்
- ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் உடன் ய.சு.ராஜன். நெல்லை சு. முத்து (தமிழாக்கம்). (2002). இந்தியா 2020. சென்னை: நியூ செஞ்சரி புக் ஹவுஸ் (பி) லிட்.
- மு. அப்பாஸ் மந்திரி. (2001). உலக நாடுகளும் விவரங்களும். சென்னை: குட்புக்ஸ் பதிப்பகம்.
[தொகு] வெளி இணைப்புகள்
[தொகு] அதிகாரப்பூர்வமானவை
- இந்திய அரசு இணையத்தளங்களின் பட்டியல்
- இந்தியப் பிரதமரின் இணையத்தளம்
- இந்தியக் குடியரசுத் தலைவரின் இணையத்தளம்
- இந்திய நாடாளுமன்றத்தின் இணையத்தளம்