சிங்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சிங்கம் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இவ்விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது. சிங்கத்தைத் தமிழில் அரிமா என்றும் ஆண் சிங்கத்தை ஏறு என்றும் கூறுவது வழக்கம். ஏறுகளின் கழுத்தில் பிடரி இருப்பது சிறப்பாகும். பிடரியை உளை என்றும் உளை மயிர் என்றும் கூறுவதுண்டு. அரிமா பூனைப் பேரினத்தைச் சேர்ந்தது. பூனை பேரினத்திலேயே, புலிக்கு (வரிப்புலிக்கு) அடுத்தாற்போல இருக்கும் பெரிய விலங்கு. ஆண் சிங்கம் 150-250 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். பெண் அரிமா 120-150 கிலோ கிராம் எடை கொண்டதாக இருக்கும். இவ்விலங்கு இன்று ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள காடுகளில் மட்டுமே காணப்படுகின்றது. இதன் வாழிடங்களை கீழே உள்ள படங்கள் காட்டுகின்றன.
சிங்கங்களின் வாழ்நாள் பொதுவாக பத்திலிருந்து பதிநான்கு ஆண்டுகள் வரை இருக்கும். 1990களில் அரிமாக்களின் எண்ணிக்கை 100,000 வாக்கில் இருந்தும் இன்று ஏறத்தாழ 16,000-30,000 வரை தான் உள்ளனவாகக் கணித்துள்ளார்கள்.