இமயமலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்நில உலகிலேயே ஒப்பற்ற மிகப் பெரிய, மிக உயர்ந்த, மாபெரும் மலைத்தொடர் இவ் இமயமலைத் தொடர்தான். எப்பொழுதும் உறைபனி மூடி இருக்கும். இவ் இமயமலைத் தொடர் ஆசியாவிலுள்ளது. இந்திய துணைக்கண்டத்தின் வட எல்லையாக அமைந்துள்ளது. இம்மலைத்தொடருக்கு வடக்கே 4,300 மீட்டர் உயரத்திலே திபெத் உயர்ப் பீடபூமி உள்ளது.
உலகின் ஒப்பற்ற மிக உயர்ந்த கொடுமுடியாகிய எவரெஸ்ட் சிகரம் இவ் இமயமலையிலேயே உள்ளது. இவ்விமையமலைத் தொடர் எத்தனையும் பெரிய மலைத்தொடர் என்றால், இத்தொடரிலே 100க்கும் அதிகமான எண்ணிக்கையில் 7,000 மீட்டரையும் மீறியப் பேருயர் தனிமலைகள், கொடுமுடிகள் உள்ளன. ஆனால் இவ்விமய மலைத்தொடரைத் தவிர்த்து எஞ்சி உள்ள இப்பெருநில உலகில் ஒருமலையும் கூட 7,000 மீட்டர் உயரத்தை மீறி இல்லை. தென் அமெரிக்காவிலே அர்ஜெண்டைனாவிலே உள்ள அக்கோன்காகுவா பெருமலைதான் அடுத்த மிகப்பெரிய மலை (6,962 மீ உயரம்). இமயமலைத் தொடர் மிகப்பெரிய நிலப்பரப்பில் அடுக்கடுக்காக 2,400 கி.மீ தொலைவு நீண்டு விரிந்துள்ளது.