ஸ்ரீ ராமகிருஷ்ணர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (பிப்ரவரி 18, 1836 - ஆகஸ்ட் 16, 1886) என பரவலாக அறியப்படும் கதாதர் சாட்டர்ஜி 19ஆம் நூற்றாண்டு இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிளுள் ஒருவர். இவர் விவேகானந்தரின் குருவாவார். அனைத்து மதங்களும் ஒரே இறைவளை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்து அதையே வலியுறுத்தியவர்.
பொருளடக்கம் |
[தொகு] வாழ்க்கை
[தொகு] இளமை
கதாதர், குதிராம் - சந்திரமணி தம்பதியினருக்கு நான்காவது குழந்தையாக மேற்கு வங்காளத்திலுள்ள கமார்புகூர் எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். சிறு வயதில் ஆடல் பாடல்களிலும், தெய்வங்களின் படங்கள் வரைவதிலும், களிமன்னில் சிலைகள் செய்வதிலும் ஆர்வமாயிருந்த கதாதருக்கு கணிதம் பிடிக்காத பாடமாய் இருந்தது. கிராமத்தின் செல்லப்பிள்ளையாக அவர் விளங்கினார். சற்று வளர்ந்தவுடன் பள்ளிப்படிப்பு பொருள் ஈட்டுவதையே நோக்கமாக கொண்டிருப்பதாக கருதிய அவர் பள்ளி செல்ல மறுத்தார். இயற்கையை ரசிப்பதிலும், பக்திப் பாடல்கள் பாடுவதிலும், புராணக் கதைகள் கேட்பதிலும், நன்பர்களுடன் விளையாடுவதிலும் பொழுதைக் கழித்தார். சிறு வயதிலேயே ஆன்மீக விஷயங்களில் ஆழ்ந்த ஞானம் உடையவராயிருந்தார்.
[தொகு] தட்சினேஸ்வரத்தில்
ராமகிருஷ்ணர் பதினேழு வயதை அடைந்தபோது அவர் குடும்பத்தின் பொருளாதார நிலை மோசமானது. அப்போது அவர் அண்ணண் ராம்குமார் கல்கத்தாவில் சில வீடுகளிலும், கல்கத்தா அருகிலிருந்த தட்சினேஸ்வர் காளி கோயிலிலும் புரோகிதராக வேலை பார்த்து வந்தார். அவருடன் சென்று தங்கி பணியாற்றுவதற்காக ராமகிருஷ்ணர் கல்கத்தா சென்றார். ராம்குமார் இறந்தவுடன் ராமகிருஷ்ணர், காளி கோயிலின் பூசாரியானார். காளி கோயிலின் ஒரு மூலையில் கங்கைக் கரையின் அருகில் அவர் தங்குவதற்காக ஒரு அறை ஒதுக்கப்பட்டது. இங்கு தான் அவர் தம் வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்தார்.
தட்சினேஸ்வர் காளி கோயில் பவதாரினிக்கு தினந்தோறும் பூசை செய்து வந்த ராமகிருஷ்ணருக்கு தாம் கல்லைத்தான் பூசை செய்கிறோமா, அல்லது உயிருள்ள இறைவனையா என்று சிந்தனை எழுந்தது. தனக்கு காட்சி அளிக்குமாறு காளியிடம் மனமுருக பிரார்த்தனை செய்தார். தினமும், இரவு நேரங்களில் கோயிலின் அருகில் இருந்த பஞ்சவடி என்ற காட்டுப்பகுதியில் காளியை நினைத்து தியானம் செய்தார். எனினும் அவருடைய முயற்சிகளுக்கு பலனில்லை. ஒரு நாள் பொறுமையை இழந்த அவர், காளி சிலையின் கைகளில் இருந்த வாளினால் தன்னைத்தானே கொல்ல முயற்சித்தார். உடனே அவர் சுயநினைவு இழந்ததாகவும், ஒரு பேரானந்த ஒளி அவரை ஆட்கொண்டதாகவும் அவர் பின்னர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த காட்சிக்குப் பிறகு ராமகிருஷ்ணரின் நடவடிக்கைகள் அசாதாரணமாக இருந்தது. இதைக்கண்ட அவர் தாயார் அவருக்கு பித்தம் பிடித்து விட்டது என்றென்னி, அவருக்கு திருமணம் செய்து வைத்தால் சரியாகிவிடும் என நினைத்தார். ராமகிருஷ்ணரோ, இதற்கு மறுப்பளிக்கவில்லை. மாறாக, கமார்புகூரின் அருகில் இருந்த ஜெயராம்பாடி என்ற ஊரில் சாரதாமணி என்ற ஐந்து வயது பெண் இருப்பதாகவும், அப்பெண்ணே, தன்னை மணம் புரிய பிறந்தவள் என்று கூறினார். அதன்படியே அவர் திருமணம் நடந்தது. அனைத்துப் பெண்களையும் காளியின் வடிவங்களாக நோக்கும் ராமகிருஷ்ணருக்கு, அவர் மனைவியும் விதிவிலக்கில்லை. ஒருநாள் அவர் மனைவியை காளியாக நினைத்து அலங்கரித்து, பூசை செய்து, அவர் கால்களில் வீழ்ந்து வணங்கினார்.
பிறகு ஒருநாள் பைரவி பிராம்மணி என்ற தாந்தரிக பெண்மணி தட்சினேஸ்வரத்திற்கு வந்தார். ராமகிருஷ்ணர் அவரிடம் தாந்தரிக சாதனைகள் கற்றுத் தேர்ந்தார். பின்னர் தோதா புரி என்பவரிடம் அத்வைத வேதாந்தம் கற்ற ராமகிருஷ்ணர், ஆறு மாதங்கள் நிர்விகல்ப சமாதியில் திளைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு ராமர், கிருஷ்ணர், ஆகியோரைக் குறித்து பிரார்த்தித்து சீதை, ராதை ஆகியோரைக் கண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், கிறித்தவ, மற்றும் இஸ்லாமிய மார்க்கங்களிலும் சாதனை புரிந்து இயேசு, நபிகள் ஆகியோரின் காட்சிகளையும் ராமகிருஷ்ணர் கண்டதாக அவரே பின்னர் குறிப்பிட்டுள்ளார்.
[தொகு] இறுதி நாட்கள்
ராமகிருஷ்ணரின் இந்த சாதனைகள் பற்றி கேள்விப்பட்டு அப்போது கல்கத்தாவில் இருந்த பலர் அவரைப் பார்க்க வந்தனர். இவர்களுள் நரேந்திரநாத் தத்தா எனப்பட்ட சுவாமி விவேகானந்தர் குறிப்பிடத்தக்கவர். நாட்கள் செல்லச் செல்ல, அவரைப் பார்க்க வருவோரின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது. அவர் நாள் முழுவதும் அவர் சீடர்களுடன் ஆன்மீகம் பற்றிய விவாதங்கள் புரிவது சர்வசாதாரணமானது. அப்போது அவரை வந்து அடிக்கடி சந்தித்த மகேந்திரநாத் குப்தா, தினமும் அவர் கூறுபவற்றையும், அவர் புரிந்த விவாதங்களைப் பற்றியும் வீட்டுக்குச் சென்றவுடன் தன் டயரியில் குறிப்பெடுத்துக் கொண்டார். இந்த குறிப்புகளே, பின்னாட்களில் The Gospel of Sri Ramakrishna என்ற பெயரில் தொகுக்கப் பட்டது. இது தமிழில் ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ராமகிருஷ்ணரின் கடைசி நாட்களில் தொண்டைப் புற்றுநோய் அவரைத் தாக்கியது. அவருடைய சீடர்கள் அவரை கல்கத்தாவின் அருகில் உள்ள காசிப்பூர் என்ற இடத்தில் வைத்து வைத்தியம் செய்தனர். ராமகிருஷ்ணரின் உயிர், 1886 ஆகஸ்ட் 16 அன்று அவர் உடலை விட்டு பிரிந்தது.