நட்சத்திரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நட்சத்திரம் (Star, விண்மீன்) என்பது விண்வெளியில் காணப்படும், ஒரு பெரிய ஒளிரும் கோளமாகும். இரவுநேர வானத்தில் புள்ளிபோல் தெரியும் நட்சத்திரங்கள் கண்சிமிட்டுவதுபோல் தெரிவது பூமியின் வளிமண்டலத்தின் தாக்கத்தினாலாகும். சூரியன் இதற்கு விதிவிலக்கு. ஏனெனில், வட்டமான தட்டுப்போல் தெரிவதற்கும், பகலில் வெளிச்சம் தருவதற்கும் ஏற்றவகையில் பூமிக்குப் போதிய அளவு அண்மையிலுள்ள நட்சத்திரம் சூரியன் மட்டுமே.
சாதாரண மொழி வழக்கில் சூரியனை நட்சத்திரமாகக் கொள்ளுவதில்லை. அதேநேரம் சூரிய ஒளி பட்டு ஒளிரும் வெள்ளி, செவ்வாய் போன்ற கோள்களையும், எரிகற்களையும்கூட நட்சத்திரங்களாகக் கருதுவதுண்டு.
சூரிய மண்டலத்துக்கு வெளியே பூமிக்கு அண்மையிலுள்ள நட்சத்திரம் புரொக்சிமா செண்டோரி என்பதாகும். இது பூமியிலிருந்து 4.2 ஒளியாண்டுகள் (4 இலட்சம் கோடி கிலோமீட்டர்கள்) தொலைவில் உள்ளது. அதாவது இந்த நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளி பூமியை வந்தடைய 4.2 ஆண்டுகள் செல்லும். அறியப்பட்டுள்ள அண்டவெளியில் 70 கோடி கோடி கோடி (70,000,000,000,000,000,000,000) நட்சத்திரங்கள் இருக்கக்கூடுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
பெரும்பாலான நட்சத்திரங்கள் 100 கோடிக்கும், 1000 கோடிக்குமிடைப்பட்ட ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. சில அண்டத்தின் மதிப்பிடப்பட்ட வயதான 1370 கோடி ஆண்டுகளளவு தொன்மையானவை. மிகச் சிறிய நட்சத்திரங்களிலிருந்து, நமது சூரியனிலும் ஆயிரம் மடங்குகள் பெரிதான, அதாவது 160 கோடி கிலோமீற்றர் விட்டமுள்ள நட்சத்திரங்கள்வரை அண்டவெளியில் உள்ளன. தங்கள் சக்திமூலங்களை முற்றாக இழந்தபின், சொந்த ஈர்ப்பு விசையின் கீழ் ஒடுங்கி மிகச் சிறிய அளவினதாக மாறிவிடுகின்ற நட்சத்திரங்கள், வெண் குறுக்கங்கள் (White Dwarf) அல்லது நியூத்திரன் நட்சத்திரங்கள் எனப்படுகின்றன.