பெரு வெடிப்புக் கோட்பாடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெரு வெடிப்புக் கோட்பாடு (Big-Bang Theory) என்பது அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாடாகும். இதுவரை முன்வைக்கப்பட்ட அண்டத்தின் தோற்றம் பற்றிய கோட்பாடுகளில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது இதுவே.
[தொகு] அடிப்படைகள்
பெரு வெடிப்புக் கோட்பாடானது 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வெளியான இரண்டு முக்கிய கண்டுபிடிப்புக்களின் அடிப்படையில் உருவானது. ஒன்று ஐன்ஸ்டீனுடைய பொதுச் சார்புக் கோட்பாடு (General Theory of Relativity). மற்றது அண்டவியற் கொள்கை (Cosmological Principle). பொதுச் சார்புக் கோட்பாடு, அண்டவெளியில் உள்ள பொருட்களிடையே காணப்படும் ஈர்ப்புத் தோற்றப்பாடானது மேற்படி பொருட்களின் திணிவுகளினால் பாதிக்கப்பட்டு வெளியும் (space), காலமும் (time) திரிபடைந்த ஒரு நிலையே என்று கூறுகின்றது. அண்ட வெளியில் உள்ள பொருள்கள் வெளியில் ஒரே சீராகப் பரவியிருக்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டதே அண்டவியற் கொள்கை.
[தொகு] பெரு வெடிப்பு
பெரு வெடிப்புக் கொள்கையின்படி அண்ட வெளியில் உள்ள பொருட்கள் அனைத்தும் 12 தொடக்கம் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மிக அதிகமான அடர்த்தியுடன் கூடிய, சிறிய அளவினதான தீப்பிழம்பாக இருந்திருக்கிறது. இன்று எங்களால் அறியப்படுகின்ற அண்டத்திலுள்ள பொருட்கள் அனைத்தும் சில மில்லி மீட்டர்கள் அளவுக்குள் அடங்கியிருந்திருக்கும் எனக் கணிப்பிடப்படுகின்றது. இத் தீப்பிழம்பானது இன்று அறியப்படாத ஏதோ ஒரு காரணத்தினால் மிக வேகமாக விரிவடையத் தொடங்கிற்று. இதுவே பெரு வெடிப்பு (Big-Bang) எனப்படுகின்றது. ஒவ்வொரு விநாடியும் பல மடங்காக இவ் விரிவாக்கம் நடந்ததாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு விரிவடைந்தபோது வெப்பம் தணிந்த வாயுக்கள் ஆங்காங்கே நட்சத்திரக் கூட்டங்களாக உருவாகியிருக்ககூடும் என அவர்கள் கூறுகிறார்கள். பல பில்லியன் ஆண்டுகள் கழிந்த பின்னும் அண்டம் இன்னும் விரிவடைந்து கொண்டே செல்வதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்றும் அண்டவெளி முழுதும் ஒரே சீராகப் பரவிக் காணப்படும் நுண்ணலைக் கதிர் வீச்சானது மேற்குறிப்பிட்ட பெரு வெடிப்பின்போது வெளியான கதிர் வீச்சின் எச்சங்களே என்று கருதப் படுகின்றது.