க்னூ/லினக்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
க்னூ/லினக்ஸ் (GNU/Linux) என்பது ஓர் இயங்குதளமாகும்.
இவ்வியங்குதளம் பொதுவாக லினக்ஸ் என்ற பெயரால் அறியப்படுகிறது. ஆனாலும், இதன் மிகச்சரியான உத்தியோகபூர்வமான பெயர் க்னூ/லினக்ஸ் என்பதேயாகும்.
லினக்ஸ் பரவலாக மஞ்சள்-கருப்பு-வெள்ளை பெங்குயின் சின்னத்தால் அடையாளப்படுத்தப்படுகிறது.
ஆப்பிள் மாக்கின்டோஷ், யுனிக்ஸ், சொலாரிஸ், பீ எஸ் டீ, மைக்ரோசொப்ட் விண்டோஸ் போலவே இதுவும் ஒரு இயங்குதளம் என்றபோதிலும் தத்துவ அடிப்படையில் இது மற்றவற்றிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது.
பொருளடக்கம் |
[தொகு] தத்துவம்
க்னூ/லினக்ஸ் இயங்குதளம் திறந்த மூல தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதோடு இதன் மென்பொருட் பகுதிகள் யாவும் திறந்த ஆணைமூலமாக, பொதுமக்கள் உரிமத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
இதன் ஆணைமூலத்தினை அனைவரும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். அவ்வாணை மூலத்தை கற்றுக்கொண்டு, அதனை மேம்படுத்துவதன் மூலம் இவ்வியங்குதளத்தின் பகுதிகளில் மாற்றங்களை மேம்பாடுகளை எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி மேற்கொள்ளலாம். இதனை எந்தக்கட்டுப்பாடுகளுமின்றி நகலெடுத்து பொதுமக்கள் உரிம அடிப்படையில் விநியோகிக்கலாம் அல்லது பொதுமக்கள் உரிம ஒப்பந்தத்தின்படி பணத்துக்கு விற்கலாம்.
இவ்வியங்குதளதளம், லினக்ஸ் கரு, க்னூ திட்ட மென்பொருட்கள், ஏனைய திறந்த ஆணைமூல மென்பொருட்கள் என்பவற்றின் தொகுப்பாகும்.
[தொகு] வழங்கல்கள்
தனிக் கட்டுரை: லினக்ஸ் வழங்கல்கள்
க்னூ/லினக்ஸ் பற்றி முதன்முதல் அறிந்துகொள்பவர்களுக்கு பெரும் விளக்கப் போதாமையை கொடுக்கும் எண்ணக்கரு வழங்கல்கள் என்பதாகும்..
இவ்வியங்க்தளம் பொதுவாக பயனர்மட்டத்தில் வழங்கல்களாகவே விநியோகிக்கப்படுகிறது. வழங்கல்களை பெற்று க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தை நிறுவிக்கொள்வதே வசதியானதாகும். தேர்ந்த பயனர் ஒருவரே க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தை அடிப்டையிலிருந்து நிறுவிக்கொள்ள முடியும்.
[தொகு] வரலாறு
- 1983: ரிச்சாட் ஸ்டால்மன் அவர்களால் க்னூ திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது. இத்திட்டம் யுனிக்ஸ் இயங்குதளத்தை ஒத்த திறந்த ஆணைமூல இயங்குதளம் ஒன்றினை உருவாக்குதலை நோக்கமாக கொண்டிருந்தது.
- 1990: க்னூ செயற்றிட்டம் ஏறத்தாழ நிறைவடையும் நிலையை அண்மித்தது. ஓர் இயங்குதளத்துக்கு தேவையான செயலிகள், காம்பைலர்கள், உரைத்தொகுப்பிகள், யுனிக்சை ஒத்த ஆணைமுகப்பு (command shell) போன்றவை அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுவிட்டன. மிக அடிப்படை நிலையில் இருக்கும் கரு ( kernel) ஒன்றை உருவாக்கும் பணி மட்டுமே முற்றுப்பெறவில்லை. அப்போது GNU Hurd என்ற கரு வடிவமைக்கப்பட்டவண்ணமிருந்தாலும், அது போதாததாகவே உணரப்பட்டது.
- 1991: லினஸ் ஸ்டோவாட்ஸ் என்பவர், அக்காலத்தில் அவருக்கு பல்கலைக்கழகத்தில் கற்பித்த பேராசிரியர், இயங்குதளங்களை பற்றி கற்பிப்பதற்காக வடிவமைத்து வைத்திருந்த மினிக்ஸ் என்ற மென்பொருளை மேம்படுத்த முயன்றுகொண்டிருந்தார். இதற்கான அனுமதி மறுக்கப்படவே, மினிக்சை ஒத்த இயங்குதளம் ஒன்றை வடிவமைக்க ஆரம்பித்தார். இதன் பரிணாமம் நாளடைவில் ஒரு முழுமையான இயங்குதள கருவை தந்தளித்தது.
- 1991 செப்டெம்பர் 17: லினஸ் தனது இயங்குதத்தை இணையத்தில் கிடைக்கச்செய்கிறார். இதன் ஆணைமூலத்தை பெற்ற ஏராளமான நிரலாளர்கள் லினக்சை மேன்மேலும் வளர்த்தெடுக்கிறார்கள்.
அக்காலத்தில் லினக்சை செயற்படுத்த மினிக்ஸ் தொகுதி தேவைப்பட்டது. லினக்ஸ் கருவினை செயற்படுத்த ஒரு சிறந்த இயங்குதளத்தின் தேவை உணரப்பட்ட நிலையில் லினஸ்ஸும் அவருடன் பணியாற்றிய ஏனைய நிரலாளர்களும் க்னூ செயற்றிட்டத்தின் மென்பொருட்களுடன் லினக்சை ஒருங்கிணைப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.