இருக்கு வேதம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்து நூல்கள் (வடமொழி) |
ஸ்மிருதிகள் |
இருக்கு வேதம் (சமஸ்கிருதம்: ऋग्वेद - ரிக்வேத) இந்து சமயத்தின் அடிப்படையாகக் கொள்ளப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. இந் நான்கு வேதங்களில் மிகப் பழமையானதும் இதுவே. சமஸ்கிருத மொழியில் அமைந்த சுலோகங்களின் தொகுப்பான இது, எந்தவொரு இந்தோ ஐரோப்பிய மொழியிலும் எழுதப்பட்டு இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய நூலாகவும் திகழ்கிறது. இது ஆக்கப்பட்ட காலம் சரியாக நிறுவப்பட முடியாவிட்டாலும், பொதுவாக கி.மு 1500 க்கும், கி.மு 1200 க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இருக்கு வேதம், வேதகால சமஸ்கிருதத்தில் ஆக்கப்பட்ட 1,017 சுலோகங்களால் ஆனது. இச் சுலோகங்களுட் பல வேள்விக் கிரியைகளில் பயன்படுத்துவதற்காக உருவானவை. இவ்வேதம் பத்து மண்டலங்களாகப் (பகுதிகள்)பிரிக்கப்பட்டுள்ளது. இதில் அடங்கியுள்ள பெரும்பான்மையான சுலோகங்கள் கடவுள்களைப் போற்றும் நோக்கிலே அமைந்தவை. சில வரலாற்றுக் குறிப்புகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. முக்கியமாக ஆரியர்களுக்கும், அவர்களது எதிரிகளான தாசர் எனபடும் இனத்தாருக்கும் இடையிலான போர்கள் பற்றிய குறிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை.
இருக்கு வேதத்தில் முதன்மையாகக் குறிப்பிடப்படும் கடவுள்கள், தீக்கடவுளான அக்கினி, தேவர்கள் தலைவனும், வீரனுமான இந்திரன், சோமன் என்போராவர். இவர்களைவிட மித்திரன், வருணன், உஷாக்கள், அஸ்வின்கள் என்போரும், சவிதர், விஷ்ணு, உருத்திரன், பூஷண், பிருஹஸ்பதி, பிரமனஸ்பதி, தியாயுஸ் பிதா, பிரிதிவி, சூரியன், வாயு, பர்ஜான்யன், வசுக்கள், மாருத்கள், ஆதித்தர்கள், விஸ்வதேவர்கள் போன்ற கடவுளர்களும், இந் நூலில் போற்றப்படுகிறார்கள்.
இருக்கு வேதத்தில் காணப்படும் கடவுள்களின் பெயர்கள் சில, வேறு இந்தோ-ஆரிய மக்களினங்கள் மத்தியிலும் புழக்கத்தில் இருந்து வந்திருப்பதைக் காணலாம். கிரேக்கர்களின் ஸேயுஸ் (Zeus), லத்தீன் மொழியிலுள்ள ஜுபிட்டார் (Jupiter) (தேயுஸ் பேட்டர் (deus-pater)என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டது) என்பவை இருக்கு வேதக் கடவுட் பெயரான தியாயுஸ் பிதா என்பதுடன் பொருந்தி வருவதைக் காணலாம்.