இந்திய தேசிய லீக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்திய தேசிய லீக் (Indian National League), பெரும்பாலும் இசுலாமியர்கள் பங்கு வகிக்கும் இந்திய அரசியல் கட்சியாகும். தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் அதிக முனைப்புடன் செயல்படுகிறது. இந்திய ஒன்றிய முஸ்லீம் லீக் கட்சியில் இருந்து இப்ராகிம் சுலைமான் சேட் வெளியேற்றப்பட்ட பின் அக்கட்சியில் இருந்து பிரிந்து ஏப்ரல் 23, 1993ல் இக்கட்சி உருவானது.
கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணியுடன் நெருங்கியத் தொடர்புகளை இக்கட்சி கொண்டுள்ளது. தமிழ்நாட்டில், 1996 சட்டமன்றத் தேர்தலில் தி. மு. க. உடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு ஐந்து இடங்களைப் பெற்றது. 2001 சட்டமன்றத்தேர்தலில் அ. இ. அ. தி. மு. க. உடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 2004 நாடாளுமன்றத் தேர்தல்களில் புதிய தமிழகம் கட்சித் தலைமையில் அமைந்த மூன்றாவது முன்னணியில் பங்கு கொண்டு போட்டியிட்டது. இதே தேர்தல்களில் மேற்கு வங்காளத்திலும் நான்கு தொகுதிகளில் போட்டியிட்டது.
இக்கட்சியின் இளைஞர் பிரிவு தேசிய இளைஞர் லீக் என்றும் மாணவர் பிரிவு தேசிய மாணவர் லீக் என்றும் அழைக்கப்படுகிறது.