இந்தியத் தமிழர் (இலங்கை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில், 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தேயிலை, இறப்பர், கோப்பி முதலிய பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைகள் ஆரம்பிக்கப்பட்டபோது, அத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தமிழ் நாட்டிலிருந்து இலட்சக் கணக்கில் தொழிலாளர்கள் குடும்பங்களோடு கூட்டிவரப்பட்டனர். ஒரு சிலர் தெலுங்கு மற்றும் மலையாள தொழிலாளரும் இலங்கை வந்தாலும் காலப்போக்கில் அவர்களது சொந்த மொழிகளைவிட்டு தமிழைப் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு இலங்கைக்கு வந்த இவர்களின் பரம்பரையினரே இலங்கையின் புள்ளிவிபர அறிக்கைகளில் இந்தியத் தமிழர் எனக் குறிப்பிடப்படுவோராவர்.
[தொகு] வரலாறு
இவர்கள் நாட்டின் மத்திய மலைப் பகுதிகளில் அமைந்திருந்த பெருந்தோட்டங்களிற் குடியேற்றப்பட்டனர். பிரித்தானிய முதலாளிகளின் கீழ் சுமார் 150 ஆண்டுகள் வரை கடுமையான சூழ்நிலைகளின் கீழ் உழைத்து இலங்கையின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களாக தேயிலை, இறப்பர் முதலியவற்றை உருவாக்கிக் கொடுத்தது இவர்களேயாவர். எனினும் 1948ல் இலங்கையிலிருந்து பிரித்தானியர் வெளியேறியதும், பல தமிழ்ப் பிரதிநிதிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டுவரப்பட்ட இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்துக்கு அமைவாக தங்களது குடியுரிமையை நிரூபிக்க முடியாமல் போனமையால் இவர்களில் மிகப்பெரும்பாலோர் இலங்கை அரசாங்கதால் நாடற்றவர் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதன் காரணமாக அவர்களது வாக்குரிமை அற்றுப்போனது.
பின்னர் இந்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் மூலம் ஏற்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் பெருமளவு மலையகத் தமிழரை இந்தியாவுக்குத் திருப்பியனுப்ப இலங்கை அரசு முயற்சித்தது. இவ்வாறான ஒப்பந்தங்களில் ஒன்றான சிறீமா - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் மேற்படி தமிழர்களில் அரைப் பகுதியினருக்கு இலங்கைப் குடியரிமை வழங்குவதெனவும், ஏனையோரை இந்தியா ஏற்றுக்கொள்வதெனவும் முடிவானது, பல காரணங்களால் இது திட்டமிட்டபடி நடைபெறாது போனது. மேலும் 1983 இல் இலங்கையில் ஏற்பட்ட பாதுகாப்பற்ற சூழ்நிலைக்காரணமாகவும் பலர் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தனர். 1979 புதிய யாப்பின் மூலம் அனைத்து இந்தியத் தமிழருக்கும் குடியரிமை கிடைத்தபோதும் பல நடைமுறை சிக்கல்களால் இவர்கள் தொடர்ந்தும் பெரும்பாலோர் நாடற்றவர்களாகவே இருக்கவேண்டியேற்பட்டது.