Privacy Policy Cookie Policy Terms and Conditions பேச்சு:மே தினம் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

பேச்சு:மே தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

விக்கியாக்கம் செய்வதை விட முழுக்க அழித்து விட்டு புதிதாக எழுதுவதே மேல், நேரத்தை மிச்சப்படுத்தும் என்பது போல் அமைந்திருக்கும் இக்கட்டுரையை துரித நீக்கம் செய்யலாமா? கட்டுரையை தளத்தில் இட்டவர் அடையாளம் காட்டாத பயனராய் இருக்க வேண்டும். அதை வெட்டி ஒட்டி இக்கட்டுரையை நான் துவக்கி வைத்திருக்ககூடும் என நினைவு--ரவி 21:38, 25 ஆகஸ்ட் 2006 (UTC)


18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த முதலாளித்துவ வர்க்கம், நவீன பாட்டாளிகளுக்கு புதிய அடிமை விலங்கை மாட்டியதோடு, ஈவிரக்கமற்ற சுரண்டலுக்கும் உள்ளாக்கியது. 24 மணி நேரமும் சுழலும் பெரும் ஆலைச் சக்கரங்களோடு தொழிலாளிகளை போட்டியிட வைத்தது. உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளிகள் சக்கையாய் பிழியப்பட்டனர்; அதுவும் இளம் தொழிலாளிகள் என்றால் முதலாளிகளுக்கு கொண்டாட்டமே! 24 மணி நேரத்தில் 20 மணிநேரம் கூட உழைக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். முதலாளித்துவ சமூகம் எவ்வாறு தொழிலாளிகளை - குழந்தைகளை சுரண்டியது என்பதை காரல் மார்க்° மூலதனத்தின் முதலாவது பாகத்தில் குறிபிட்டுள்ளவற்றை பார்ப்போம்! “... சிலர் 12க்கும் 15க்கும் இடைப்பட்ட வயதுள்ள 5 பையன்களை சாப்பாட்டு இடைவேளையும் நள்ளிரவில் உறக்கத்துக்காக ஒரு மணி நேரமும் தவிர, இடைவேளை எதுவும் விடாமல் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மறு நாள் சனிக்கிழமை மாலை 4 மணி வரை வேலை வாங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. கம்பளிக் கந்தல்களைப் பிரித்துப் பிய்க்கும் வேலை நடக்கும் இடத்தில், தூசியும்-பிசிறும் காற்றில் அடர்ந்திருக்கும்; வயது வந்த தொழிலாளியும் கூட நுரையீரலைப் பாதுகாத்துக் கொள்வதற்காகக் கைக்குட்டையால் வாயை மூடிக் கொள்ள வேண்டியிருக்கும். “புழுதிப் பொந்து” என்று அழைக்கப்படும் பொந்து போன்ற இந்த இடத்தில் இப்படி 30 மணி நேரம் இந்தக் குழந்தைகள் ஓயாமல் உழைக்க வேண்டியிருந்தது!...”* ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பார்கள் தமிழகத்தில்; முதலாளித்துவம் வளர்ந்த பிரிட்டன், பிரான்°, நெதர்லாந்து, அமெரிக்கா, ஆ°திரேலியா என உலகம் முழுமையிலும் இதுதான் தொழிலாளிகளின் நிலையாகவும் இருந்தது. தொழிலாளிகள் வர்க்கமாய் திரளாத சூழலில் முதலாளித்துவம் தனது கொடுங்கரங்களால் தொழிலாளிகளை மொத்தமாக சுரண்டி கொழுத்தது. உதாரணமாக, “அமெரிக்காவில் 1880 வாக்கில் தொழிலாளிகளின் ஆயுட் காலம் வெறும் 30 வருடம் மட்டுமே.”** இதிலிருந்தே தொழிலாளிகளை எந்த அளவுக்கு அட்டையாய் உறிஞ்சினர் என்பதை உணரலாம். உலகளாவிய போராட்டங்கள் உலகம் முழுவதும் முதலாளித்துவம் எட்டிப்பார்த்த நாடுகளி ளெல்லாம் தொழிலாளிகள் 14, 18, 20 மணி நேரம் என்று ஓய்வு ஒழிச்சலின்றி சுரண்டப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கமே.

பொருளடக்கம்

[தொகு] சாசன இயக்கம்

தொழிற்புரட்சி கண்ட இங்கிலாந்தில் தொழிலாளிகளின் நிலை மோசமானதாகவே இருந்தது. வயது வித்தியாசம், பால் வித்தியாசம் இல்லாமல் அனைவரும் 16, 18 மணி நேரம் உழைக்க வேண்டியிருந்தது. ஏன், “மூன்று வயது குழந்தைகள் கூட 12 மணி நேரம் உழைக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். சோர்ந்து தூங்கிவிடும் குழந்தைகளுக்கு சாட்டையடியே கூலியாக கிடைத்தது”.* தொழிலாளிகளின் இத்தகைய நிலையை எதிர்த்து 1836இல் உருவான இயக்கமே “சாசன இயக்கம்”. இந்த இயக்கமே உலகின் பெருந்திரள் தொழிலாளிகளை கொண்ட முதன்மையான அரசியல் இயக்கமாக உருவெடுத்தது. சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை, அனைவருக்கும் ஓட்டுரிமை, பாராளுமன்றத்தில் ஏழை - பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் பங்கேற்பு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து 10 லட்சம் கையெழுத்துக்களை பெற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. ஆனால் பிரிட்டிஷ் பாராளுமன்றம் எந்தவிதமான விவாதமும் இன்றி இதைத் தள்ளுபடி செய்து விட்டது. சாசன இயக்கத்தினர் சளைக்காமல் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இயக்கங்களை நடத்தி வந்தனர். இதையொட்டி இரண்டாவது முறையாக 30 லட்சம் கையெழுத்துக்களை பெற்று மீண்டும் சமர்ப்பித்தனர். இதற்கும் மௌனமே பதிலாய் இருந்தது. சாசன இயக்கத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி, 1842இல் பொது வேலை நிறுத்தத்திற்கும் அறைகூவல் விடுத்தனர். இவ்வியக்கம் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாகி தோல்வியில் முடிந்தது. தொழிலாளிகளின் ஒன்றுபட்ட போராட்டம் வளர்ந்து வருவதை கண்ட பிரிட்டன் முதலாளித்துவ வர்க்கம் பெயரளவுக்கு 1847இல் 10 மணிநேர சட்டத்தை கொண்டு வந்தது. இதுவும் கூட சிறுவர்களுக்கும், பெண்களுக்கும் மட்டுமே பொருந்தும் என்று கூறியதோடு நிறுத்திக் கொண்டது. பெயரளவுக்கு கொண்டு வரப்பட்ட சட்டமாக இருந்தாலும் இது தொழிலாளிகளின் தொடர்ச்சியான இயக்கத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றியாக அமைந்தது. 1848இல் மூன்றாவது முறையாக 60 லட்சம் கையெழுத்துக்- களை பெற்று பெரும் பகுதி தொழிலாளிகளை ஆகர்ஷிக்கும் இயக்கத்தை நடத்தியன் மூலம், தொழிலாளிகள் அனைவரும் ஓர் வர்க்கம் என்ற உணர்வை தோற்றுவித்த இயக்கமாக சாசன இயக்கம் விளங்கியது. இவ்வியக்கம் பிரிட்டனோடு மட்டும் நின்று விடாமல் அமெரிக்கா, ஆ°திரேலியா என பல பகுதிகளுக்கும் பரவியது. இலண்டனில் கட்டுமானத் தொழிலாளிகள் 9 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1860இல் பெரும் கிளர்ச்சிகளில் இறங்கியது தொழிலாளர் இயக்கத்திற்கு மேலும் வலுவூட்டியது.

[தொகு] சாசன இயக்கமும் மார்க்சி°ட்டுகளும்

1842ஆம் ஆண்டு ஏங்கெல்° இங்கிலாந்தில் உள்ள மான்செ°டரில் தனது தந்தையார் பங்குதாரராக இருந்த நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே, தொழிலாளர் நிலைமைகளை தீவிரமாக ஆராய்ந்தார். தொழிலாளர் குடியிருப்புகளுக்குச் சென்று, அவர்களது துயரங்களை நேரில் கண்டு அறிந்து கொண்டதோடு நிற்காமல், “இங்கிலாந்தில் தொழிலாளர் வர்க்கத்தின் நிலை” என்ற புகழ்பெற்ற புத்தகத்தை எழுதினார். இது தொழிலாளிகளை விழிப்படையச் செய்தது. 1850களில் மார்க்சும், ஏங்கெல்சும் இங்கிலாந்தில் இருந்தபோது, சாசன இயக்கத்தினருடன் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு வழிகாட்டி வந்தனர். அப்போது, சாசன இயக்கத்தில் முதலாளி வர்க்கத்தினருடன் சமரசம் செய்துக் கொண்டவர்களும், அதை எதிர்த்தவர்களுமாக இரண்டு பிரிவுகள் தோன்றின. மார்க்சும் - ஏங்கெல்சும் ஓ கொன்னர் என்பவரின் தலைமையில் உள்ள சந்தர்ப்பவாதிகளை எதிர்த்துப் போராடுமாறு இடதுசாரி சார்ட்டி°டுகளை வற்புறுத்தினர். இதையொட்டி மார்க்° - ஏங்கெல்° முயற்சியால், “கம்யூனி°ட் புரட்சிக்காரர்களின் சர்வதேசக் கழகம்” உருவாக்கப் பட்டது. இது இடதுசாரி சார்ட்டி°டுகளை உள்ளடக்கியதாக அமைந்தது. ஆனால், இக்கழகம் அடக்குமுறையால் செயல்படாமல் போய்விட்டது.

[தொகு] பிரான்ஸ் - ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் இயக்கம்

1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகளின் நிலைமை பரிதாபகரமாக இருந்தது. அவர்கள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து லியான் நூற்பவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டம் அடக்குமுறையால் தோல்வியில் முடிந்தது. அதே போல் 1834இல் லியான் நூற்பவர்கள் “ஜனநாயகம் அல்லது மரணம்” என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இப்போராட்டமும் அடக்குமுறைக்கு பலியானது. ஆ°திரேலியாவில் உள்ள மெல்போன் - விக்டோரியாவில் தான் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழி லாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக் கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது. தொழிலாளர் போராட்டங்கள் பல நேரங்களில் பின்னடை வுக்கு உள்ளானாலும், அவர்கள் ஒரு வர்க்கமாக திரண்டு போராடுவது, புதிய போராட்ட அனுப வத்தை கற்றுக் கொடுக் கிறது. இதன் மூலம் அவர்கள் புதிய எழுச்சிக்கு உள்ளாவ தோடு, கிளர்ச்சிகர போராட்ட உணர்வையும் பெறுகின்றனர்.

[தொகு] அமெரிக்காவில் வேலை நிறுத்தங்கள்

அமெரிக்காவில் 1832இல் பூ°டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க தொழிலாளிகளின் போராட்டங்கள் வலுப்பெற்ற பின்னணியில் தங்களது உரிமைகளுக்காக போராடுவதற்கு “உழைப்பாளர்களின் பாதுகாப்பு வீரர்கள் அமைப்பு” (நைட்° ஆப் லேபர்) என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டனர். இச்சங்கத்தில் மட்டும் 6,00,000 பேர் உறுப்பினர்களாக பதிவு செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு “மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது”. இவ்வியக்கமே ‘மே தினம்’ பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

[தொகு] கம்யூனி°ட் லீக் உதயம்

மார்க்சும் - ஏங்கெல்சும் இங்கிலாந்தில் இருந்தபோது சார்ட்டி°டு களுடனும், பிரான்°, ஜெர்மன் மற்றும் இதர நாட்டு தொழிலாளர் குழுக்களுடனும் தொடர்புகொண்டிருந்தனர். இந்நிலையில் 1847ஆம் ஆண்டு “நீதியாளர் கழகம்” என்ற பெயரில் செயல்பட்டு வந்த அமைப்பு, மார்க்° - ஏங்கெல் சுடன் தொடர்பு கொண்டு, அவர்களை தங்களது அமைப்பில் இணையும்படி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மார்க்சும் - ஏங்கெல்சும் இவ்வமைப்பில் இணைந்துக் கொண்டதோடு, நீதியாளர் கழகமாக இருந்த இவ்வமைப்பின் பெயரை “கம்யூனி°ட் லீக்” என்று மாற்றினர். அத்துடன் நீதியாளர் கழகத்தின் உறுப்பினர் அட்டைகளில் “அனைத்து மனிதர்களும் சகோதரர்களே” என்ற கோஷம் இடம் பெற்றிருந் ததை அகற்றி விட்டு, “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!” என்ற புரட்சிகரமான முழக்கத்தை முன்வைத்தனர். கம்யூனி°ட் லீக்கின் அறைகூவலுக்கு ஏற்ப உருவாக்கப் பட்டதே மார்க்° - ஏங்கெல்சின் “கம்யூனி°ட் கட்சி அறிக்கை” என்பது குறிப்பிடத்தக்கது. மார்க்சும், ஏங்கெல்சும் இத்துடன் நிற்காமல், உலகத் தொழிலாளர் களை ஒன்றினைக்கும் வகையில், 1864இல் முதல் அகிலம் என்று அழைக்கப்பட்ட, சர்வதேச தொழிலாளர் அமைப்பை ஏற்படுத்தினர். இவ் வமைப்பு பிரான்°, ஜெர்மன், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, இத்தாலி, போலந்து, ஹங்கேரி, டென்மார்க் என உலகின் பல நாடுகளில் உள்ள தொழிலாளர் இயக்க பிரதி நிதிகளை உள்ளடக்கியது. 1865இல் ஜெனிவாவில் நடை பெற்ற முதலாம் அகிலத்தின் மாநாட்டு பிரதிநிதிகளிடையே உரையாற்றிய மார்க்°, “...வேலை நிறுத்தங்கள் மற்றும் கதவடைப்புகளின் போது முதலாளிகள் வெளி நாட்டுத் தொழிலாளர்களை இறக்குமதி செய்யக்கூடாது; எட்டு மணிநேர வேலைதான் வேண்டும்; குழந்தைகளுக்கும் குறைந்த வயதினருக்கும் வேலை நேரத்தை குறைத்தல், அவர்களுடைய மன, உடல் வளர்ச்சிக்கும் தொழில்நுட்பப் பயிற்சிக்கும் வசதிகளை ஏற்படுத்துதல்...”* என்று தொழிலாளி வர்க்கத்தின் அக்கால நிலைமைக்கு எதிராக குரல் கொடுத்ததோடு, இக்கோரிக்கைகளை வென்றெடுக்க உலகத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து பாடுபடவும் அழைப்பு விடுத்தார். அத்துடன் “...சட்டப்பூர்வமான வேலை நேரம் என்பது அடிப்படையானது; இதில் முன்னேற்றம் இல்லாமல், வேறு சமூக முன்னேற்றம் காண்பது அரிது...” என்று 8 மணி நேர வேலைக்கான போராட்டத்தை உலகளவில், தொழிலாளர் இயக்கங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று முழங்கினார். மார்க்சீய மூலவர்களான மார்க்சும், ஏங்கெல்சும் தங்களது சமகாலத்தில் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்காக, ஓயாது பாடுபட்டனர். தொழிலாளி வர்க்கம் சமூகத்தை விடுவிக்கும் புரட்சிகர அரசியலில் ஈடுபடாமல், தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது என்பதையும் அறிவுறுத்தினர்.

[தொகு] ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்ட மே தினம்

ஜார் கொடுங்கோன்மை ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள், இவர்களின் வாழ்க்கை நிலைமையும் உலகத் தொழிலாளிகளின் நிலைமையோடு ஒத்திருந்தது. தொழிலாளிகள் 14 மணி நேரத்திற்கும் மேல் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. ரஷ்யத் தொழிலாளிகளின் இத்தகைய நிலைமையை எதிர்த்து 1895 - 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. இவ்வேலை நிறுத்தங்களில் 2 இலட்சத்து 21 ஆயிரம் பேர் கலந்துக் கொண்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் தோழர் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திடும் முத்தாக அமைந்தது என்றால் மிகையாகாது.

[தொகு] சிகாகோ பேரெழுச்சி

அமெரிக்காவின் வியத்தகு வளர்ச்சிக்குப் பின் பல லட்சக்கணக்கான கறுப்பின அடிமைகளின் இரத்தமும் - சதையும் பிணைந்துள்ளதை உலகம் அறியும். அது என்றும் கறுப்பு வரலாறாகவே இருக்கும். பெருந் தொழில் வளர்ச்சியுற்ற, நவீன அமெரிக்காவில் தொழிலாளர்களின் நிலை எப்படி இருந்தது என்பதை அமெரிக்க தொழிலாளர்களின் ஆன்மாவாக திகழ்ந்த மதர் ஜோன்° பதிவு செய்திருப்பதைப் பார்த்தாலே புரியும். “அமெரிக்காவின் அனைத்து தொழில் மையங்களிலும் தொழிலாளி வர்க்கம் போராட்ட குணமிக்கதாக இருந்தது. ஐரோப்பாவில் இருந்து இடம் பெயர்ந்து வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களால் குடிசைப் பகுதிகள் நெருக்கடியில் இருந்தன. புலம் பெயர்ந்த தொழிலாளிகளுக்கு வழங்கப்பட்ட ஊதியம் அமெரிக்க தொழிலாளிகளுக்கு வழங்கப்பட்டதை விட மிகவும் குறைவானதாக இருந்தது. இதை வைத்தே அமெரிக்க தொழிலாளிகளையும் கடுமையாக சுரண்டி வந்தனர். மொத்தத்தில் தொழிலாளிகளின் வாழ்க்கைத்தரம் மிகக் கீழ் நிலையில் இருந்தது. நாடு முழுவதும் வேலையின்மையும், பசியும் - பட்டினியுமாக இருந்தனர். அன்றைய தொழிலாளிகளின் பிரதான தேவையாக ரொட்டியும் - குறைந்த வேலை நேர கோரிக்கையுமே இருந்தது.”* இயந்திரத்தனமான வாழ்க்கையில் சுழன்றுக் கொண்டிருந்த தொழிலாளர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியைக் காண வேண்டும் என்றால், அவர்களுக்கு போதுமான ஓய்வும், உறக்கமும் அத்தியாவசியமானது. தொழிலாளிகளின் சிந்தனை வளத்திற்கும், கலாச்சாரப்பூர்வமான செயல்பாட்டிற்கும், ஆரோக்கியமான வாழ்விற்கும் நிபந்தனையாக அமைந்தது 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம். இவையே தொழிலாளிகளின் முதல் தேவையாக இருந்தது. அமெரிக்கத் தொழிலாளிகளிடையே ஓங்கி வளர்ந்த போராட்ட உணர்வை நெறிப்படுத்தி, ஒருங்கிணைத்தது ‘அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு.’ இவ்வமைப்பின் அறைகூவலை ஏற்று 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து நடைபெற்ற போராட்டங்களில், கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர் அமெரிக்கத் தொழிலாளிகள்.

[தொகு] மாபெரும் வேலை நிறுத்தம்

அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பின் வேண்டுகோளான 8 மணிநேர வேலை கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய முறையில் நாடு தழுவிய வேலை நிறுத்தங்கள் மே 1, 1886 அன்று பேரெழுச்சியோடு துவங்கியது. தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, லூயி°வேலி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ளதொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்களின் புகைபோக்கிகள் அன்றைய தினம் ஓய்வெடுத்தன. ஆலைகளின் பேரிரைச்சல் நின்று போனது; இரயில் போக்குவரத்து °தம்பித்தது. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்துக் கொண்டனர். பேரெழுச்சியோடு நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களிலும், கூட்டங்களிலும் தொழிலாளர் தலைவர்கள் ஆல்பர்ட் பார்சன்°, ஆக°ட் °பை°, சாமுவேல் பீல்டன், மைக்கேல் °க்வாப் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். இவர்களில் ஆல்பர்ட் பார்சன்° அமெரிக்க தொழிலாளிகளின் நம்பிக்கை மிகுந்த தலைவராக திகழ்ந்தார். சிகாகோவில் தொழிலாளர்களுக்காக பத்திரிகை ஒன்றை நடத்தி வந்த பார்சன்° “நைட்° ஆப் லேபர்” இயக்கத்தின் புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவராக இருந்தார். அதே போல் ஆக°ட் °பை° ஜெர்மனியில் இருந்து புலம் பெயர்ந்தவர். இவரும் தொழிலாளர் என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். 8 மணி நேர வேலைக்கான இயக்கம் அமெரிக்காவில் வீறு கொண்டு எழுந்தது அமெரிக்க முதலாளிகள் வயிற்றில் புளியைக் கரைத்தது. தொழிலாளர்களின் ஊர்வலம் - ஆர்ப்பாட்டங்களில் கலகங்கள் நடைபெறும், அவ்வாறு நடைபெற்றால் அதை வைத்தே, தொழிலாளர் இயக்கங்களை முடக்கலாம் என்று கனா கண்டனர். ஆனால் இவற்றையெல்லாம் தொழிலாளர்கள் முறியடித்து கட்டுக்கோப்பாகவும், மிக அமைதியாகவும் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.

[தொகு] கலகத்தை தூண்டிய போலீ°

மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வ°டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இந்த நிறுவனம் நீண்ட நேர வேலை நேரத்தை அமுலாக் கியதோடு 15 சதவீதம் அளவிற்கு சம்பளத்தையும் வெட்டியது. ஆனால், அதனுடைய லாபமோ 71 சதவீதம் அளவிற்கு உயர்ந்திருந்தது. அமைதியாக நடைபெற்ற தொழி லாளர் கூட்டத்தில் ஆக°ட் °பை° எழுச்சி மிகு உரையாற்றினார். கூட்டம் அமைதியாக நடை பெற்றுக் கொண்டிருந்த நிலையில், பெரும் போலீ°படை கூட்டத்தை முற்றுகையிட்டதோடு, கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டிலும் ஈடுபட்டது. இதையொட்டி 4 தொழிலாளர்கள் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாயினர், 50க்கும் மேற்பட்டோர் காயத்திற்கு உள்ளாயினர். இச்செய்தி நகரெங்கும் பரவியதையொட்டி, சிகாகோ மக்கள் பெரும் கோபாவேசத்திற்கு ஆளாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று கண்டன கூட்டம் நடத்திட மிகத் துரிதமாக தொழிலாளர்கள் திட்டமிட்டனர். ஹேமார்க்கெட் சிவந்தது மே 4, 1886 ஹேமார்க்கெட் சதுக்கத்தில் 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. மெக்கார்மிக்கில் நடைபெற்ற சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஆக°ட் °பை° உரையாற்றினார், இரவு 9.00 மணியளவில் ஆல்பர்ட் பார்சன்° தன்னுடைய இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியோடு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். இவரைத் தொடர்ந்து இறுதிப் பேச்சாளராக சாமுவேல் பீல்டன் பேசத் துவங்கும் போது, மழை தூற ஆரம்பித்தது; கூட்டத்தில் இருப்பவர்களும் கலைய ஆரம்பித்தனர். மிக குறைவான எண்ணிக்கையில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது போன்பீல்டு* தலைமையில் 180 பேர் கொண்ட போலீ° பட்டாளம் கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்தவுடனே அனைவரையும் கலைந்து செல்லுமாறு மிரட்டியது. இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது; அந்த இடத்திலேயே மேத்தீவ்° டிகேன் என்ற போலீ°காரர் பலியானார். உடனே போலீ° படை கூட்டத்தினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்பது இன்றைக்கும் வெளிவராத மர்மமாகவே இருக்கிறது. தொழிலாளர்களின் இரத்தத்தால் ஹேமார்க்கெட் சதுக்கமே செந்நிறமாகியது. இதைத் தொடர்ந்து போலீ° படை தொழிலாளர்கள் வசித்த பகுதிகளிலும், வீடுகளிலும் நுழைந்து கண்மூடித்தனமாக தொழிலாளர்களை தாக்கியது; அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து, அவர்கள் மீது “கொலை குற்றச்சாட்டு” சுமத்தியது. இதில் அமெரிக்க போலீசின் கையில் சிக்காத ஆல்பர்ட் பார்சன்° வழக்கு துவங்கியவுடன், தானே முன்வந்து கைதாகி வழக்கை சந்தித்தார்; அவருடன் ஆக°ட் °பை°, சாமுவேல் பீல்டன், ஆ°கர் நீப், மைக்கேல் °க்வாப், ஜார்ஜ் ஏங்கெல், அடால்ப் பி°சர், லூயி° லிங் ஆகிய எட்டு பேர் மீது காவல்துறை வழக்குத் தொடுத்தது. இந்த சதி வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. நூற்றுக்கணக்கானவர்களை சாட்சியம் என்ற பெயரால் பொய்யான சாட்சிகளை கொண்டு வந்து நிறுத்தியது. சாட்சியம் அளித்தவர்களில் பெரும்பாலோர் முதலாளிகளும் அவர்களது ஏஜென்டுகளுமே என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியிருந்தும் எந்தக் கட்டத்திலும் போலீஸால் வெடிகுண்டை வீசியது யார் என்று கண்டு பிடிக்கவே முடியவில்லை.

[தொகு] அநீதியான தீர்ப்பு

நீதிபதிகள் முன்பு உரையாற்றிய தொழிலாளர் தலைவர்கள் அனைவரும் சமூகத்தில் மிக முக்கியமான பணியாற்றி வந்தவர்கள். பத்திரிகையாளர்களாகவும், தொழிலாளர் தலைவர்களாகவும் நீண்ட நாட்களாக செயல்பட்டு வந்த பொறுப்புள்ளவர்கள். அதிலும் குறிப்பாக ஆல்பர்ட் பார்சன்° உரையாற்றும் போது, அமெரிக்க முதலாளி ஒருவரின் பெயரைக் கூறி அவரது நிறுவனத்தில் கறுப்பின அடிமைகளை வைத்து கடுமையாக வேலை வாங்குவதை தான் தொடர்ந்து எதிர்த்து வந்ததால், அவர் நீண்ட நாட்களாக தனக்கு எதிராகவே செயல்பட்டு வந்துள்ளார் என்று குற்றம் சாட்டியபோது கூட காவல்துறை அவர்களையெல்லாம் எந்தவிதமான விசாரணைக்கும் உட்படுத்தாமல், எப்படியாவது இவர்களுக்கு தண்டனைப் பெற்றுத்தர வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே செயல்பட்டது. இவ்வழக்கின் இறுதியில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, ”நம்முடைய நிறுவனங்களை காப்பாற்றுவதற்கு, இது போன்றவர்களை தூக்கி லேற்றுவதுதான் முன்னுதாரணமாக இருக்கும்” என்று கூறி 7 பேருக்கு தூக்குத் தண்டனையும், ஆ°கர் நீபுக்கு 15 வருட கடுங்காவல் தண்டனையும் வழங்கி தீர்ப்புக் கூறினார். இதை எதிர்த்து நாடு முழுவதும் கண்டனக் கணைகள் எழுந்தன. ஆல்பர்ட் பார்சன்ஸின் மனைவி லூசி பார்சன் தன்னுடைய இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இவர்களை தண்டனையில் இருந்து விடுவிக்குமாறு வேண்டினார். நூற்றுக்கணக்கான தொழிலாளர் கூட்டங்களை நடத்திட வலியுறுத்தினார். ஆனால் கல்நெஞ்சம் கொண்ட அமெரிக்க நீதித்துறையும், அரசும் மௌனம் சாதித்தது. பின்னர் கடுமையான எதிர்ப்புக்களுக்குப் பிறகு மேலும் சாமுவேல் பீல்டன், மைகேல் °க்வாப் ஆகியோருக்கு மட்டும் 15 வருட தண்டனை என்று மாற்றியது. இதில் குறிப்பிடப்பட வேண்டியது, சம்பவம் நடைபெற்ற மே 4 சிகாகோ நிகழ்ச்சியின் போது 8 பேரில் இரண்டு பேர் மட்டுமே இருந்தனர். மற்றவர்கள் தொழிலாளி வர்க்கத்தை ஆகர்ஷித்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் மீதும் வழக்குப் புனையப்பட்டது.

[தொகு] அமெரிக்காவின் கறுப்பு தினம்

நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆல்பர்ட் பார்சன்°, ஆக°ட் °பை°, ஜார்ஜ் ஏங்கல், அடால்ப் பி°சர் ஆகியே நால்வரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்கள் தூக்கிலிடப் படுவதற்கு ஒரு நாள் முன்னதாக 21 வயதேயான இளைஞர் லூயி° லிங், டைனமைட் என்ற வெடி பொருளை வாயில் கடித்து தற்கொலை செய்துக் கொண்டார். இந்நிகழ்ச்சி உலகையே குலுக்கியது. இத்தியாகிகளின் மௌனம் இன்றைக்கும், என்றைக்கும் அமெரிக்காவையும், முதலாளித்துவ உலகத்தையும் கலங்கடித்துக் கொண்டே இருக்கும். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.

[தொகு] கவர்னரின் கருணை

சிகாகோ தியாகிகளின் தியாகம் அமெரிக்க தொழி லாளிகளை மீண்டும் எழுச்சி கொள்ளச் செய்தது. எஞ்சி யிருந்த தொழிலாளர் தலைவர்களை காப்பாற்றிட அமெரிக்க தொழிலாளர் வர்க்கம் வீதியில் இறங்கியது; தொடர்ந்த கண்டன கூட்டங்களையும், ஊர்வலங்களையும் நடத்தி அரசை நிர்ப்பந்தித்து வந்தது. இந்நிலையில் இல்லியான° கவர்னராக பொறுப்பேற்ற ஜான் அல்ட்ஜெல்ட் இவ்வழக்கு குறித்து தீவிரமாக மறுபரிசீலனை செய்ததோடு, வழக்கின் முழுவிவரத்தை நிதானமாக பரிசீலனை செய்தார். இறுதியாக இவ்வழக்கில் இவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதை உணர்ந்த கவர்னர் அல்ட்ஜெட் எஞ்சியிருந்த தொழிலாளர் தலைவர்களான சாமுவேல் பீல்டன், ஆ°கர் நீப், மைக்கேல் °க்வாப் ஆகியோரை 6 வருடம் கழித்து 1893 ஜூன் 6 அன்று விடுதலை செய்தார். அவர்களை விடுதலை செய்யும் போது “இவ்வழக்கில் முற்றிலுமாக அநீதி இழைக்கப்பட்டுள்ளது; நான் என் மனசாட்சிப்படி செயல் படுகிறேன்...” என்று கூறினார். அமெரிக்க தொழிலாளர்களின் நெஞ்சங்களில் இடம் பெற்று விட்ட அல்ட்ஜெல்ட், ஒருமுறை அமெரிக்க இரயில்வே தொழிலாளர்கள் போராட்டத்தின் போது அவர்கள் மீது அடக்குமுறை ஏவுவதற்கும் மறுத்து விட்டார். பின்னர் இவர் அமெரிக்க அரசியலில் இருந்தே ஓரங்கட்டப்பட்டார். இருப்பினும் அமெரிக்க தொழிலாளர்களின் அன்புக்குரியவராக திகழ்வதில் இருந்து யாராலும் ஓரங்கட்ட முடியவில்லை. அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது. இச்சம்வத்திற்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் மே முதல் நாள் அமெரிக்க ஆளும் வர்க்கத்தை உலுக்கிக் கொண்டிருந்தது. அதை வரலாற்றின் பக்கங்களில் இருந்து மறைக்க அமெரிக்காவின் ஆளும் வர்க்கம் தொடர்ந்து முயன்று வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் 1947 இல் மே முதல் நாளை “விசுவாச நாளாக” அறிவித்தது; இன்றைக்கும் அது தொடர்கிறது. முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதிகளும், அதிகார வர்க்கமும் வேண்டுமானால் மே 1ஆம் நாளை விசுவாச நாளாக கொண்டாடலாம். ஆனால் அமெரிக்க வரலாறு தெரிந்த தொழிலாளிகளுக்கு சிகாகோ தியாகிகள் மீதும், தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலையின் மீதும் மட்டுமே விசுவாசம் இருக்கும்.

[தொகு] சர்வதேச நாளான மே தினம்

1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலி°ட் தொழிலாளர்களின் ‘சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது” 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். ஏங்கெல்ஸூம், பிரபல சோசலி°ட் தலைவர்களான ஆக°ட் பெல், வில்லியம் லீப்னெக்ட் உட்பட பலர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டமே இரண்டாவது அகிலத்தின் துவக்கமாக அமைந்தது. முதலாவது அகிலத்தின் போது காரல் மார்க்° வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிகாகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று சர்வதேச அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது. இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.

[தொகு] இந்தியாவில் மே தினம்

இந்தியாவில் தொழில் வளர்ச்சி பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் வருகைக்குப் பின்பே துவங்கியது. ஆரம்பத்தில் பஞ்சாலை, சணல், தேயிலை எ°டேட்°, இரயில்வே, நிலக்கரி போன்ற குறிப்பிடத்தக்க சில தொழில்களிலிருந்தே ஆரம்பமாயின. இந்தியாவின் முதல் துணி ஆலை கல்கத்தாவில் 1818இல் பட்டரியாவில் துவங்கப்பட்டது. 1839ல் அசாமில் முதன் முதலாக தேயிலை தோட்டங்கள் துவங்கப்பட்டன. அதே காலகட்டத்தில் கல்கத்தாவில் சணல் தொழிற்சாலையும் அமைக்கப்பட்டது. 1853இல் இந்தியாவின் முதல் இரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது. பம்பாய்க்கும் - தாணாவிற்கும் இடையே முதலாவது இரயில் பாதை அமைக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை தங்களது சரக்குகளை வெவ்வேறு இடங்களுக்கு துரிதமாக கொண்டு செல்வதற்கும், நாடு முழுவதும் ஆங்காங்கே எழக்கூடிய போராட்டங்களை விரைந்து ஒடுக்குவதற்கும் பயன்படுத்திடவே இரயில்வே துறையை துவக்கினர். எப்படியிருந்தபோதிலும் நிலப்பிரபுத்துவ இந்தியாவில் இரயில் தொழிலுக்குத் தேவையான நிலக்கரி உற்பத்திக்கும், இரும்பின் பயன்பாட்டிற்கும் தேவையான துணைத் தொழில்களை சேர்த்தே வளர்ந்தது. இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியது இரயில்வேதுறை. 8 மணி நேர வேலைக்கான முதல் வேலை நிறுத்தம் இந்தக் காலகட்டத்தில் இரயில்வே கட்டுமானப் பணிகளில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். இத்தொழிலாளர்கள் தினமும் 10 மணி நேரத்திற்கு மேல் உழைக்கவேண்டி இருந்தது. இந்நிலையில் 1862 ஏப்ரல் - மே மாதங்களில் ஹெராவில் உள்ள இரயில்வே தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதில் 1200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். இதுவே இந்தியாவில் நடைபெற்ற முதல் தொழிலாளர் வேலை நிறுத்தம். 1886இல் சிகாகோவில் நடைபெற்ற 8 மணி நேர கோரிக்கைக்கான வேலை நிறுத்தம் நடைபெறுவதற்கு 24 ஆண்டுகளுக்கு முன்பே, இந்திய தொழிலாளர்கள் இவ்வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உலகத் தொழிலாளர் வரலாற்றில் தங்களது பங்களிப்பையும் பதிவு செய்துள்ளனர். நாடு முழுவதிலும் மாட்டு வண்டித் தொழிலாளர்கள், செங்கற் சூளைத் தொழிலாளர்கள், மில் தொழிலாளர்கள் என பல்வேறு தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்கள் ஆங்காங்கே சிறு சிறு அளவில் நடைபெற்றாலும் இதற்கு பயன் கிடைக்காமல் இல்லை. 1881இல் முதல் “தொழிலாளர் சட்டம்” கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முன்னால் தொழிலாளர் நிலைமை குறித்து ஆராயப்பட்ட கமிஷனில், தொழிலாளர்கள் விடியற்காலை 4.00 மணிக்கு ஆலைக்குச் சென்று இரவு 10.00 மணிக்கு திரும்ப வேண்டும். 18 மணிநேர வேலை என்பது கட்டாயமாகவே இருந்ததை பதிவு செய்துள்ளது. * அதேபோல் 1893ஆம் ஆண்டு பெரம்பூர் இரயில்வே பணிமனையைச் சேர்ந்த தொழிலாளர்கள் 3000 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதிகரித்து வரும் இரயில்வே வேலை நிறுத்தங்களை உடைப்பதற்கு பிரிட்டிஷ் அரசு பல தந்திரங்களை கையாண்டது. அதன் ஒரு பகுதியாக இராணுவத்தில் இருந்தவர்களுக்கு இரயில்வே பிரிவில் இருந்த அனைத்து வேலைகளையும் கற்றுக் கொடுக்கும் திட்டத்தையும் அமுலாக்கியது. 1882-1890க்குள் பம்பாய் மற்றும் சென்னை மாகாணங்களில் 25க்கும் மேற்பட்ட தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன. தொடர்ந்து நீடித்த வேலை நிறுத்தம் மற்றும் பல போராட்டங்களின் காரணமாக மீண்டும் 1891ல் புதிய தொழிலாளர் சட்டத்தை கொண்டு வந்தது. இச்சட்டத்தில், 9வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தை தொழிலாளர்கள் 9 மணிநேரமும், பெண் தொழிலாளர்கள் 11 மணி நேரமும் உழைக்க வேண்டும் என்று இச்சட்டம் கூறியது. ஆனால், ஆண் தொழிலாளர்களின் வேலை நேரம் குறித்து பெரும் மௌனமே சாதித்தது*

[தொகு] சதி வழக்கு

வளர்ந்து வரும் தொழிலாளர் வேலை நிறுத்தங்களை கண்டு அஞ்சிய பிரிட்டிஷ் அரசு, தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கும், தொழிற்சங்க செயல்பாட்டை கடுமையாக முடக்குவதற்கும் கடுமையாக முயற்சித்தது. அதன் விளைவே மீரட் சதி வழக்கு. இவ்வழக்கின் முக்கிய அம்சமே, தொழிற்சங்க போராட்டத்தை முடக்குவது. 1928ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு, ‘வேலை நிறுத்தத்தை சட்ட விரோதமாக்கும் மசோதாவை கொண்டு வந்தது. அதோடு, தொழிலாளர் தலைவர்களை விசாரணையின்றி காவலில் வைக்க அதிகாரம் வழங்கும் பொது பாதுகாப்பு சட்ட மசோதாவையும் தாக்கல் செய்தது’** இந்த இரண்டு மசோதாவும் பண்டித மோதிலால் நேரு, லாலா லஜபதிராய் மற்றும் பலரது எதிர்ப்பினால் தோல்வியில் முடிந்தது. இருப்பினும் இச்சட்டம் கொண்டுவருவதை கைவிட விரும்பாத ஆங்கில அரசு “அவசர சட்டமாக” 1929 ஏப்ரலில் கொண்டு வந்தது. அந்த நேரத்தில்தான் பகத்சிங்கும், பட்டுகோ°வரத்தத்தும் யாரையும் காயப்படுத்தாத வெடிகுண்டை பாராளுமன்றத்தில் வீசினர். இதைத் தொடர்ந்து கம்யூனி°ட்டுகளையும், தொழிற்சங்கத் தலைவர்களையும் நாடு முழுவதும் வேட்டையாடியது. இதில் பிரபலத் தலைவர்களான எ°.ஏ. டாங்கே, முஸாபர் அகமது, பி.சி. ஜோசி உட்பட 32 பேர் மீது வழக்குத் தொடுத்தது. இதுவே மீரத் சதி வழக்காகும்.

[தொகு] தமிழகத்தில் தொழிலாளர் போராட்டங்கள்

தமிழகத்தில் சுதந்திரப்போராட்டத்தோடு இணைந்ததாக தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் அமைந்தது. இதில் வ.உ. சிதம்பரம் பெரும் பங்கு வகித்தார். 1908இல் தூத்துக்குடியில் நடைபெற்ற கோரல் மில் தொழிலாளர்கள் போராட்டம் குறிப்பிடத்தக்கது. 1695 தொழிலாளர்கள் இந்நிறுவனத்தில் வேலை செய்தனர். இவர்களில் பெரும் பகுதியினர் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள். அதுமட்டுமின்றி தினமும் 14 மணி நேரம் கடுமையாக உழைக்க வேண்டும், சம்பளம் மிகக் குறைவாகவே வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி கம்பெனிக்குள் சுற்றுச் சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது சுவாசிப்பதற்கே தொழிலாளர்கள் சிரமப்படவேண்டியிருந்தது. இந்நிலையில் வ.உ.சி. பிப்ரவரி 23ஆம் தேதி தொழிலாளர் களிடையே உரையாற்றினார். அவரது எழுச்சிமிக்க உரையைக் கேட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இவ்வேலை நிறுத்தத்தால் தொழிலாளர்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாயினர். ஆனால், தொழிலாளர்களின் உறுதியான போராட்டத்திற்கு பின் நிர்வாகம் வ.உ.சி.யுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்டது. இதன் பின் வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை, சம்பள உயர்வு, வேலை நேரம் குறைப்பு என உரிமைகளை வென்றெடுத்தனர். இது தொழிலாளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. முதல் தொழிற்சங்கம் சென்னையில் பல்வேறு தொழிற்சாலைகள் தோன்றின. குறிப்பாக பெரம்பூரில் இரயில்வே பணிமனையும், பக்கிங்காம் கர்னாட்டிக் மில்லும் புகழ் பெற்றதாக இருந்தன. பி.அண்ட்.சி. மில்லில் மட்டும் 10,000 தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். பஞ்சாலைத் தொழில்களில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களின் நிலைமை மிக மோசமாக இருந்தது. இது குறித்து சென்னை தொழிலாளர் சங்கத்தின் பொன்விழா மலரில் இடம் பெற்றுள்ள வரிகளை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். “பக்கிங்காம், கர்னாடிக் ஆலைகளில் பணிபுரிந்த தொழிலாளிகள் காலையிலே கோழி கூவுவதற்கு முன்பு எழுந்து, வேலைக்குச் சென்று, இரவில் கோட்டான் கூவும்போது வீடு திரும்பினர். தினம் பனிரெண்டு மணி நேரம் இயந்திரத்தோடு, இயந்திரமாக எலும்பு நோக, இரத்தம் சுண்ட உழைத்தனர்....” இத்தொழிலாளிகள் கடுமையாக வேலை வாங்கப்பட்டனர். ஆனால், இவர்களின் மதிய சாப்பாட்டு இடைவேளை நேரம் மிக குறைவானதாக இருந்தது, வெறும் 30 நிமிடம் மட்டுமே. இந்த நேரம் கம்பெனியில் இருந்து பக்கத்தில் உள்ள வீடுகளுக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு திரும்புவதற்கு போதுமானதாக இருக்கவில்லை. உண்பதற்கு கூட இயந்திரத்தோடு போட்டி போடக்கூடிய அளவிற்கு அவர்கள் வேகவேகமாக சாப்பிட வேண்டியிருந்தது. தொழிலாளிகளின் இத்தகைய மோசமான நிலைமைகளை தினமும் கவனித்துக் கொண்டிருந்த இரண்டு வியாபாரிகள் ஜி. இராமாஞ்சலு நாயுடுவும், ஜி. செல்வபதி செட்டியாரும் மனம் நொந்தனர். தொழிலாளர் நிலைமை குறித்து கடிதங்களை நிர்வாகத்திற்கு தொடர்ந்து எழுதினர். அதில் சிறிது பயனும் கிடைத்தது. இதைத் தொடர்ந்து 1918 ஏப்ரல் 27ஆம் தேதி “மெட்ரா° லேபர் யூனியன்” என்ற தொழிற்சங்கத்தை துவக்கினர். இதுவே தமிழகத்தில் அமைப்புரீதியாக அமைக்கப்பட்ட முதல் தொழிற்சங்கமாகும். இதன் தலைவராக வாடியா அவர்களும், செல்வபதி செட்டியார் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர், இவர்களுடன் திரு.வி.க., சர்க்கரை செட்டியார் உட்பட பலர் உதவினர். தோழர் சிங்காரவேலர் பி.அண்ட்.சி. மில் தொழிலாளிகளிடையே பல்வேறு தருணங்களில் எழுச்சிமிக்க உரையாற்றி ஊக்குவித்து வந்தார். இந்த தொழிற்சங்கத்தில் சென்னை நகரத்தில் உள்ள அனைத்து தொழில்களிலும் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் உறுப்பினராக இணைந்தனர். இவர்களின் முதல் கோரிக்கையே 30 நிமிடமாக இருந்த சாப்பாட்டு நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே என்றால் அன்றைய தொழிலாளர் நிலை எப்படி இருந்திருக்கும் என்று உணரலாம்.

[தொகு] இந்தியாவில் முதல் மேதினம்

தென்னிந்தியாவின் முதல் கம்யூனி°ட் தோழர் சிங்காரவேலர். பிரிட்டிஷ் இந்தியாவிலேயே முதன் முதலில் 1923இல் மேதினத்தை கொண்டாட திட்டமிட்டார். அந்த அடிப்படையில் மே 1, 1923 அன்று சென்னையில் உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள கடற்கரையில் தோழர் சிங்காரவேலர் தலைமையிலும், திருவல்லிக்கேணி கடற்கரையில் திரு. கிருஷ்ணசாமிசர்மா தலைமையிலும் மே தினக் கூட்டங்கள் நடைபெற்றது. உயர்நீதிமன்ற கடற்கரை கூட்டத்தில் உரையாற்றிய சிங்காரவேலர், “மே தினம் தொழிலாளர்கள் தினம், இத்தினத்தை இந்தியத் தொழிலாளர்கள் கொண்டாட வேண்டும். தொழிலாளர்களால் மட்டுமே மே தினம் கொண்டாடப் படுவதால், தொழிலாளிகள் மேலும் உரம் பெறுவார்கள். இது தேசத்தின் வளர்ச்சிக்கும் பயனளிக்கும்!” என்று முழங்கியதோடு, செங்கொடியை ஏற்றி வைத்த சிங்காரவேலர், “தொழிலாளர் - விவசாயிகள்” கட்சியை துவக்குவதாக அறிவித்தார். அக்கட்சியின் எதிர்கால திட்டங்களை விளக்கும் போது, 8 மணி நேர வேலையை சட்டமாக்கவேண்டும் என்றும் அறைகூவினார். மேலும் மே முதல் நாளை தேசிய அளவில் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். அத்துடன் தொழிலாளர்களுக்காக “லேபர் கிஸான் கெஜட்!” என்ற ஆங்கில ஏட்டினையும், “தொழிலாளன்” என்ற தமிழ் வார இதழையும் நடத்தினார். தொழிலாளர் நிலைமைகளை பற்றி பல்வேறு கட்டுரைகளையும், சொற்பொழிவுகளையும் ஆற்றி விழிப்புணர்வு அடையச் செய்தார் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் என்பது குறிப்பிடத்தக்கது.

[தொகு] மே தினத்தின் இன்றைய தேவை

உலகமயமாக்கல் சூழலில் மே தினத்தின் தேவை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. 1886ல் மே தினத் தியாகிகள் இரத்தம் சிந்தி பெற்றெடுத்த 8 மணி நேர வேலை இன்றைக்கு பெரும் கேள்விக்குறியாக வருகிறது. அதேபோல் உலகத் தொழிலாளர் களின் நீண்ட நெடிய போராட்டத்தில் பெற்றெடுத்த வேலை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலத் திட்டங்கள் இன்றைக்கு சுக்குநூறாக்கப்படுகிறது. அனைத்து தொழில்களிலும் இதுதான் நிலைமை! அதிலும் குறிப்பாக இன்றைய நவீன தொழில்நுட்பத் தொழில்களாக விளங்கும் கணிணித்துறையில் - தொழிற்சங்கங்களோ அல்லது அவர்களது உரிமைகளுக்காக போராடும் அமைப்புகளோ பெரியதாக இல்லாத சூழலில், நவீன இளம் தொழிலாளிகள் கடுமையாக சுரண்டப்படுகின்றனர். இது குறித்து சமீபத்தில் வெளியான பெங்களூரை தலைமையகமாக கொண்ட “மித்ரன் பவுண்டேஷன்” அறிக்கை விளக்குகிறது. 6 பேரை கொன்ற சாப்ட்வேர் துறை டாக்டர் துவாரகநாத் தலைமையில் இயங்கும் மித்ரன் பவுண்டேசன் என்கின்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் சென்னையில் உள்ள 40 மென்பொருள் நிறுவனங்களை ஆய்வுக்கு உட்படுத்தியது. இந்த ஆய்வு பல்வேறு திடுக்கிடும் விஷயங்களை வெளிப் படுத்தியுள்ளது.* குறிப்பாக 27 வயது முதல் 33 வயதுக்கு உட்பட்ட மென்பொருள் வல்லுநர்கள் 6 பேர் இதய நோய் மற்றும் முடக்குவாதத்திற்கு உள்ளாகி மரணமடைந்துள்ளனர் என்பது தான். (குறிப்பாக மரண மடைந்த வர்களது குடும்பங்களில் இது போன்ற நோய்கள் யாருக்கும் இல்லை என்பது குறிப்படத்துக்கது) அமெரிக்காவில் 1880இல் தொழிலாளர்களின் ஆயுட்காலம் 30 வருடம் மட்டுமே என்று குறிப்பிடும் போது வியப்பாக இருந்திருக்கும்; ஆனால் நம்முடைய தற்கால சூழலிலேயே இது நிஜமாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது குறித்து இந்நிறுவனம் பல்வேறு தகவல்களை வெளி யிட்டுள்ளது, “குறிப்பாக சாப்ட்வேர் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளிகளிடையே தற்கொலை அதிகரித்திருக்கிறது; விவாகரத்து, இருதய நோய்கள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் மன அழுத்தம் உட்பட பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர் என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. மேலும் நீண்ட நேர வேலை, தொடர்ந்து ஒரே மாதிரியான வாழ்க்கை முறை, உணவு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் - பீசா போன்ற நவீன உணவு வகைகளை உட்கொள்வது, உடற்பயிற்சி மருந்துக்கும் கிடையாது. மற்றும் கணிணி முன்னே நீண்ட நேரம் வேலை செய்வதால் ஏற்படும், கழுத்து வலி, முதுகு வலி, கண்ணெரிச்சல், கைவிரல்களில் ஏற்படும் வலி என்று பல்வேறு உபாதைகளுக்கு உள்ளாகின்றனர். இத்தகைய விஷயங்கள் அவர்களை பெரும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன. இதுதான் இன்றைய நிலை; உண்மையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்° போன்ற நாடுகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் இன்றைக்கு நம்முடைய நாட்டில் அவுட் சோர்ஸிங்* என்ற முறையில் வேலைகளைக் கொடுத்து வாங்குகின்றனர். இது சுரண்டலிலேயே பெரும் சுரண்டலாக உருவெடுத்துள்ளது. உண்மையில் அவர்களது நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு கொடுக்கப்படும் சம்பளத்தில் 10இல் ஒரு பங்கை மட்டுமே இத்தகைய தொழிலாளிகளுக்கு கொடுத்து விட்டு தங்களது ஏகபோக லாபத்தை சம்பாதித்துக் கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக இன்றைக்கு ஐ.டி. பார்க் என்று அழைக்கப்படும் பல இடங்களில் நடைபெறும் மெடிக்கல் டிரான்° கிரிப்ஷன், டேட்டா என்டிரி, சேவைத்துறைகளில் ஈடுபடுபவர்கள் 12 மணி நேர வேலை என்று தந்திரமாக மாற்றி விட்டார்கள். மேற்கண்ட நிறுவனத்தின் புள்ளி விவரப்படி தற்போது சென்னையில் மட்டும் 50,000 தொழிலாளிகள் இத்துறையில் பணிபுரிவதாகவும், இன்னும் சில ஆண்டுகளில் மேலும் 75,000 பேராக இது அதிகரிக்கக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். எனவே நவீனத் தொழிலாளிகளாக இருக்கும் இவர்களுக்கும் - தொழிலாளி வர்க்க உணர்வை ஊட்டுவதும், சுரண்டலில் இருந்து மட்டுமின்றி அவர்களது இளமையான வாழ்வை மீட்டெடுப்பதும் மே தினச் சூளுரைகளின் கடமையாகிறது. கணிணித்துறையில் மட்டுமின்றி, தொழிலாளி வர்க்க இயக்கத்தின் அடிப்படை வர்க்கமான ஆலைத் தொழிலாளிகளின் நிலைமை மிக மோசமான அளவிற்கு மாறியுள்ளது. தொழிலாளிகளின் நீண்ட, நெடிய போராட்டத்தின் மூலமும், ரஷ்யப் புரட்சியின் வெற்றிக்குப் பின்னாலும் தொழிலாளிகளுக்கு சட்டபூர்வமாக கிடைத்த வேலை நிறுத்த உரிமை, போராடும் உரிமை, அவர்களது வாழ்க்கைத்தரத்தை பாதுகாத்திட மேற்கொள்ளப்பட்ட பல்வேறு உரிமைகள் - சலுகைகள் இன்றைக்கு ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் மூலம் தகர்த்ததெறியப்படுகிறது. வி.ஆர்.எ°., சி.ஆர்.எ°. என்ற பெயரில் தொழிலாளிகளை வீட்டுக்கு அனுப்பி விட்டு, நிறுவனத்தின் பெயர்களைக் கூட மாற்றிக் கொண்டு, அதே வேலையை காண்ட்டிராக்ட் என்ற பெயரில் பழைய தொழிலாளிகளை மிக குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்திக் கொண்டு செயல்படும் நீசத்தனமான போக்கு இன்றைக்கு அதிகரித்துக் கொண்டு வருகிறது. இது ஒரு பக்கம் என்றால், முறைசாரா தொழிலாளர் எண்ணிக்கை நாடுமுழுவதும் பல்கிப்பெருகியுள்ளது. இவர்களது வேலை நேரம் பெருமளவில் கேள்விக்குறியாகவே உள்ளது. அதிலும் பெரும் நிறுவனங்களில் கூட காண்டிராக்ட் என்ற பெயரில் 8 மணி நேரம் வேலை + 4 மணி நேரம் ஓ.டி. (ஓவர் டைம்) என்று கூறி கட்டாயமாக 12 மணி நேர வேலையை வாங்கும் தந்திரப் போக்கே அதிகரித்துள்ளது. அதே போல் இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளில் பணிபுரியும் தொழிலாளர் நிலைமையும் இதே நிலையில்தான் உள்ளது. எனவே மேதின முழக்கமான 8 மணி நேர வேலை உத்திரவாதம் என்பது சமூக மாற்றத்தோடு இணைக்கக்கூடிய பணியாகவே உள்ளது. இவற்றை வென்றெடுப்பதே நமது கடமையாக அமையட்டும். மார்க்° - ஏங்கெல்சின் “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்ற முழக்கம் நாளுக்கு நாள் உறுதிப்பட்டுக் கொண்டு வருகிறது. உலகமயமாக்கல் சூழலில், பன்னாட்டு நிறுவனங்களின் - ஏகாதிபத்திய நாடுகளின் சுரண்டல் முகத்திரையை கிழித்தெறிய, உலக வங்கி, உலக வர்த்தக °தாபனத்திற்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள தொழிலாளிகள் அணிதிரண்டு எழுச்சியோடு போராடி வருவதை உலகம் கண்டு வருகிறது. ஒவ்வொரு மே தினமும் உலகத் தொழிலாளிகளை எழுச்சிக் கொள்ளச் செய்யும் - உலகத் தொழிலாளிகளை அடிமை விலங்குகளில் இருந்து விடுவிக்கும் எழுச்சிகரமான நாளாக மாற்றுவோம்! வாழ்க மே தினம்! வளர்க தொழிலாளர் ஒற்றுமை!! ஓங்குக மேதின தியாகிகள் புகழ்!!!

[தொகு] ஆதாரங்கள்

  • மே தினம் நூற்றண்டு வரலாறு, (ஆங்கிலம்) சோவியத் வெளியீடு, மா°கோ 1990
  • சாசன இயக்கம், உலகின் முதல் தொழிலாளர் இயக்கம், என். ராமகிருஷ்ணன்.
  • சென்னை தொழிலாளர் சங்கம், 60வது ஆண்டு மலர்.

Static Wikipedia (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2006 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Static Wikipedia February 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu