புறத்திணை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பழந் தமிழ் இலக்கியங்கள் அகத்திணை, புறத்திணை என இரு வகைகளுக்குள் அடங்குகின்றன. பழந் தமிழர் வாழ்வியலில் போர், அரசியல் முதலியவை தொடர்பான வாழ்வு புற வாழ்வு எனப்படுகின்றது. மேற்படி புற வாழ்வு தொடர்பான ஒழுக்கம் புறத்திணை என வழங்கப்படுகின்றது. புற வாழ்வு அம்சங்களைக் கருப்பொருளாகக் கொண்டு ஆக்கப்படும் இலக்கியங்களைப் புறத்திணை இலக்கியங்கள் என வகைப்படுத்துவது தமிழ் இலக்கிய மரபு.
[தொகு] புறத்திணைப் பிரிவுகள்
பண்டைத் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் அதன் பொருளதிகாரத்தில் அகத்திணை, புறத்திணை பற்றி விரிவாக விளக்கம் தருகின்றது. இதன்படி புறத்திணை பின்வருமாறு ஏழு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.
- வெட்சித் திணை
- வஞ்சித் திணை
- உழிஞைத் திணை
- தும்பைத் திணை
- வாகைத் திணை
- காஞ்சித் திணை
- பாடாண் திணை
ஒரு நாட்டின் மீது போர் தொடுக்க விரும்பும் ஒரு மன்னன் அந் நாட்டு எல்லையூடு புகுந்து ஆநிரைகளைக் (பசுக் கூட்டம்) கவர்ந்து செல்வதையும். அவ்வாறு களவாடிச் செல்லப்படும் ஆநிரைகளை மீட்டு வருவதையும் கருப்பொருளாகக் கொண்டவை வெட்சித் திணையுள் அடங்கும். மன்னனொருவன் வேற்று நாட்டின் மீது படை நடத்திச் செல்வது, அதனைப் பகை அரசன் எதிர்ப்பது ஆகிய செய்திகளைக் கூறுவது வஞ்சித் திணை. படை நடத்திச் செல்லும் அரசன் வேற்று நாட்டுக் கோட்டையை முற்றுகை இடுவதையும், அக் கோட்டையைப் பாதுகாத்து நிற்கும் பகை அரசன் நடவடிக்கைகளையும் பற்றிக் கூறுவது உழிஞைத் திணையாகும். படையெடுத்து வந்த வேற்று நாட்டு அரசனுடன் போர் செய்து அவனை வெல்வது பற்றிக் கூறுதல் தும்பைத் திணையுள் அடங்கும். மன்னனுடைய வெற்றி பற்றிய செய்திகளைக் கூறுதல் வாகைத் திணையைச் சாரும். உலகத்தின் நிலையாமை தொடர்பான கருப்பொருள் கொண்டவை காஞ்சித் திணையுள்ளும், பாடல் தலைவனின் நல்லியல்புகள் பற்றிக் கூறுவது பாடாண் திணையுள்ளும் அடங்குகின்றன.