தாய்மொழி (சஞ்சிகை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாய்மொழி
ஈழத்தின் ஊடகத்துறையில் எண்ணற்ற பத்திரிகைகள், சஞ்சிகைகள் காலூன்றின, பல கால வெள்ளோட்டத்தில் சிக்குண்டு காணாமல் போக, சில நாணற்புல் போன்று தலை நீட்டி நிற்கின்றன. 1999ம் வருடம் சித்திரைப் புதுவருடத்தைத் தொடர்ந்து ஈழத்தின் ஊடக வரலாற்றில் தடம் பதித்தது தாய்மொழி. இந்தியாவின் தலை சிறந்த தமிழ் சஞ்சிகைகளான குமுதம், ஆனந்தவிகடன் சாயலில் தாய்மொழி பிரசவமானது, மாதாந்தம் இரு இதழ்களுடன் ஆசிரியர் உமாபாஸ்கரன், இணையாசிரியர் கா.தேவேந்திரராசா இருவரினதும் பங்களிப்பில் தாய்மொழி உருவானது, காத்திரமான அரசியற் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள், பொது அறிவு, போட்டி மற்றும் சினிமா விடயங்களைத் தாங்கி வந்தது தாய்மொழி. இலங்கையின் பத்திரிகைப் பரிமாணத்தில் தாய்மொழியைப் போன்று சகல அம்சங்களையும் கொண்ட சஞ்சிகையைக் காணவில்லையென யாழ்ப்பாண பல்கலைக் கழக பதிவாளர் செங்கை ஆழியான் க.குணராசா ஒரு தடவை குறிப்பிட்டிருந்தார். இதில் வெளிவந்த அரசியற் கட்டுரைகள்,கார்டூன் சித்திரங்கள் பலராலும் வெகுவாகப் பேசப்பட்டன. தாய்மொழி பதிவு செய்த பல அரசியற் கட்டுரைகள் பலத்த தாக்கங்களை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அரசியல்வாதிகளின் எச்சரிக்கையினால் தொடர முடியாமல் மூச்சையாகிற்று. தாய்மொழிக்குத் தடா எனத் தலைப்பிட்டு சரிநிகர் பத்திரிகை தனது ஆதங்கத்தினை கவலையுடன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பீதியற்ற ஜனநாயக சூழலில் தாய்மொழி என்றோ ஒரு நாள் மீண்டும் ஜனிக்கும்.