டயான் ஃவாசி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டயான் ஃவாசி, Diane Fossey, (ஜனவரி 16, 1932 – டிசம்பர் 26, 1985) என்னும் அமெரிக்க பெண்மணி கொரில்லாவைப் பற்றி சிறந்த ஆய்வுகள் நடத்தியிருக்கிறார். நீண்டகாலம் ஆப்பிரி்க்காவில் உள்ள ருவாண்டா என்னும் நாட்டில் கொரில்லாக்களோடேயே வாழ்ந்து கொரில்லாவை பற்றி நுணுக்கமாக முறைப்படி குறிப்புகள தொகுத்து ஆய்ந்து வந்தார். புகழ் பெற்ற பழைய இறந்துபட்ட உயிரின ஆய்வாளராகிய லூயி லீக்கி என்பாரால் ஊக்குவிக்கப்பட்டு இவர் கொரில்லாவைப்பற்றிய ஆய்வுகள் செய்தார். இவருடைய ஆய்வுகள் சேன் குட்டால் அவர்கள் சிம்ப்பன்சி பற்றி நடத்திய அரிய ஆய்வைப்போல முதன்மையானது.
[தொகு] வாழ்க்கை
டயான் ஃவாசி அவர்கள் கலிஃவோர்னியாவில் ஃவேர்ஃவாக்சு (Fairfax) என்னும் இடத்தில் பிறந்து கலிஃவோர்னியாவில் உள்ள சான் ஃவிரான்சிஸ்க்கோவில் வளர்ந்தார். 1954ல் இளநிலை பட்டமும், பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1974ல் உயிரின அறிவியலில் (Zoology) முனைவர் (Ph.D.) பட்டமும் பெற்றார். 1963 ஆம் ஆண்டுக்குள் கொரில்லாவைப்பற்றி ஆய்வு செய்ய போதிய ஆய்வுப்பணம் திரட்டிய பின் ஆப்பிரிக்காவிற்கு சென்றார். அங்கு முனைவர் லீக்கி அவர்களையும் சந்தித்தார். காட்டு விலங்காகிய கொரில்லாக்களிடம் எப்படியோ இவர் போதிய நம்பிக்கையைப் பெற்று அவைகளோடு நெருங்கி இருந்து ஆய்வு செய்யப் பழகினார். 1967ல் இவர் ருவாண்டாவிலே ருஃகெங்கேரி என்னும் மாநிலத்தில், விருங்கா மலைப்பகுதிகளில் கரிசோக் ஆய்வு நடுவணகம் நிறுவினார்.
[தொகு] எதிர்பாரா வகையில் இறப்பு
டயான் வாசி அவர்கள் எதிர்பாராத விதமாக தன் இருப்பிடத்தில் டிசம்பர் 26, 1985ல் கொடூரமாக கொல்லப்பட்டார். இவருடைய ஆய்வுகளால் தம்முடைய தொழில் கெடுவதாக நினைத்த சில கொள்ளைக்காரர்களோ மற்றவர்களோ இக்கொலையை செய்ததாக கருதப்படுகிறது. பரவலாக அறியப்பட்ட வார்லி மொவாட் என்னும் எழுத்தாளர், இந்நிலங்களை சுற்றுலாவுக்காக பயன்படுத்த ஆவலாய் இருந்த யாரோ சிலர் இக்கொலையை செய்திருக்க வேண்டும் என்னும் கருத்தை முன் வைக்கிறார்.