சரஸ்வதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சரஸ்வதி இந்து சமயத்தினர் வணங்கும் முக்கியமான பெண் கடவுளரில் ஒருவர். படைப்புக் கடவுளான பிரம்மாவின் சக்தியாகக் கொள்ளப்படுகிறார். சரஸ்வதி என்னும் சமஸ்கிருதச் சொல் நகர்தல், ஆற்றொழுக்காகச் செல்லல் ஆகிய பொருள்களைக் கொண்ட ஸ்ர் என்னும் வேரின் அடியாகப் பிறந்தது. இருக்கு வேதத்தில் சரஸ்வதி ஒரு ஆறாக உருவகிக்கப்பட்டு உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. நீர், இந்துக்களின் பார்வையில் வளமை, படைப்பு, தூய்மைப்படுத்தல் முதலியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதனால்தான் சரஸ்வதியும் இத்தகைய கருத்துருக்களோடு தொடர்புபடுத்தப் பட்டுள்ளாள்.
இந்துக்கள், சரஸ்வதியைக் கல்விக் கடவுளாகவும், எல்லாக் கலைகளுக்கும் தலைவியாகவும் கருதுகிறார்கள். அறிவு, ஒளியாகவும், அறியாமை இருளாகவும் கருதப்படுகின்றது. இதனால்தான் சரஸ்வதியை வெண்மை நிறத்தோடு தொடர்பு படுத்துகிறார்கள். வெள்ளை ஆடை அணிந்தவளாகவும், வெள்ளைத் தாமரைப் பூவில் அமர்ந்திருப்பவளாகவும், சரஸ்வதியைச் சமய நூல்கள் வர்ணிக்கின்றன.
[தொகு] தோற்றமும் குறியீடும்
அழகிய தோற்றம் கொண்டவளாகவும், நான்கு கைகளைக் கொண்டவளாகவும், வெள்ளை உடை உடுத்து, வெண் தாமரையில் அமர்ந்திருப்பவளாகவும், நான்கு கைகளில் ஒன்றில் ஜபமாலையும், மற்றொன்றில் ஏடும், இருக்க, முன் கைகள் இரண்டிலும் வீணையை வைத்து மீட்டுபவளாகச் சரஸ்வதி உருவகப்படுத்தப்படுகிறாள். ஜபமாலை ஆன்மீகத்தையும், ஏடு அறிவையும், வீணை கலைகளையும் குறிப்பதாகக் கொள்ளப்படுகின்றது.