உருக்கு (கட்டிடப் பொருள்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உருக்கு, முக்கிய பாகமாக இரும்பைக் கொண்ட ஒரு கலப்புலோகமாகும். காபன் உருக்கே பரவலாகப் பயன்படுகின்ற கலப்புலோகமாயினும், அவற்றின் சிறப்பியல்புகளுக்காகப் பயன்படுத்தப்படும் கலப்புலோகங்கள் பல உள்ளன. ஒரு பழைய வரைவிலக்கணத்தின்படி, உருக்கு என்பது 2.1% வரை காபனைக் கொண்ட கலப்புலோகமாகும். தற்காலத்தில், காபன் ஒரு விரும்பப்படாத கலப்புலோகக் கூறாகக் கருதப்படும் சிலவகையான உருக்குகளும் உண்டு. ஒரு அண்மைய வரைவிலக்கணம், உருக்கு என்பது plastically வார்க்கக்கூடிய ஒரு இரும்பை அடிப்படையாகக் கொண்ட கலப்புலோகம் என்கிறது. உருக்கில் காபனின் முக்கியத்துவம், உருக்கின் இயல்புகளிலும், அதன் நிலை மாற்றத்திலும், காபன் கொண்டிருக்கும் தாக்கத்தின் விளைவுகளினாலேயே உருவாகிறது. காபனின் அளவு அதிகரிக்க, உருக்கின் கடினத்தன்மையும், இழுவைப் பலமும் அதிகரிக்கின்றது. ஆனால்ம் அதன் நொருங்கக்கூடிய தன்மையும் அதிகரிக்கவே செய்கிறது.
தற்காலக் கட்டுமானத்துறையிலே உருக்கு மிக முக்கியமான பங்கை வகிக்கின்றது. தூண்கள், உத்தரங்கள், கூரைச் சட்டகங்கள், தள அமைப்புகள், கூரைத் தகடுகள் மற்றும் பலவகையான அமைப்பு சம்பந்தப்பட்ட மற்றும் அலங்காரத்துக்கான கட்டிடக் கூறுகள் உருக்கினால் ஆக்கப்படுகின்றன. இவற்றைவிட வலிதாக்கப்பட்ட காங்கிறீற்று அமைப்புக்களில் பெருமளவு உருக்கு, கம்பிகள் வடிவில் பயன்படுத்தப்படுகின்றது.