அனைத்துலகக் கட்டிடக்கலைப் பாணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அனைத்துலகப் பாணி என்பது 1920 களிலும் 1930 களிலும் கட்டிடக்கலையில் முக்கியமானதாக இருந்த ஒரு பாணியாகும். இப் பாணியின் அடிப்படையான வடிவமைப்புக் கொள்கைகள் நவீனத்துவப் பாணியில் கொள்கைகளோடு ஒத்தவை. எனினும், அனைத்துலகப் பாணி எனும்போது அது நவீனத்துவத்தின் ஆரம்ப காலத்தை, பொதுவாக இரண்டாம் உலகப்போருக்கு முந்திய காலத்தைச் சேர்ந்த கட்டிடங்களையும், அவற்றை உருவாக்கிய கட்டிடக்கலைஞர்களையும் குறிக்கின்றது.
பொருளடக்கம் |
[தொகு] ஐரோப்பா
1900 ஆம் ஆண்டளவில் உலகின் பல பகுதிகளிலும் கட்டிடக்கலைஞர் பலர், மரபுவழி முன்னுதாரணங்களையும், புதிய சமூகத் தேவைகளையும், தொழில்நுட்பச் சாத்தியப்பாடுகளையும் ஒருங்கிணைத்துப் புது முறையான கட்டிடக்கலைத் தீர்வுகளை உருவாக்கினார்கள். பிரசல்ஸ் (Brussels) நகரில் விக்டர் ஹோட்டாவினதும் (Victor Horta), பார்சிலோனாவில் அந்தோனியோ கௌடியினதும் (Antoni Gaudi), வியன்னாவில் (Vienna) ஓட்டோ வாக்னரதும் (Otto Wagner), கிளாஸ்கோவில் (Glasgow), சார்ல்ஸ் ரென்னி மக்கின்டோசினதும் ஆக்கங்கள் புதுமைக்கும் பழமைக்கும் இடையிலான பொதுப் போராட்டமாகக் கருதப்படக்கூடியவை.
அனைத்துலகப் பாணி 1920 களில் மேற்கு ஐரோப்பாவில் பிரபலமாக இருந்தது. அனைத்துலகப் பாணியானது, ஒல்லாந்தில் உருவான டி ஸ்டைல் (de Stijl) இயக்கம், பிரபல கட்டிடக்கலைஞர் லெ கொபூசியே (Le Corbusier) அவர்களின் ஆக்கங்கள் மற்றும் டியூச்சர் வேர்க்பண்ட் எனப்படும் ஜெர்மன் தொழிலாளர் கூட்டமைப்பு உருவாகக் காரணமாக இருந்த அந்நாட்டில் நடைபெற்ற பல்வேறு கைப்பணி மரபுகளைத் தொழில் மயமாக்கும் முயற்சிகள், பிராங்போர்டிலும், ஸ்ரட்கார்ட்டிலும், கட்டப்பட்ட பாரிய தொழிலாளர் வீடமைப்புத் திட்டங்கள், எல்லாவற்றிலும் மேலாக பௌஹவ்ஸ் (Bauhaus) இயக்கம் போன்றவற்றோடு பொது அடிப்படைகளைக் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 1920 களில், நவீன கட்டிடக்கலையின் முக்கியமானவர்கள் தங்கள் பெயரை நிலை நிறுத்திக் கொண்டனர். இவர்களுள் மிகக் கூடுதலாக அறியப்பட்டவர்கள் பிரான்சில் லெ கொபூசியேயும், ஜெர்மனியில் லுட்விக் மீஸ் வான் டெர் ரோ (Ludwig Mies van der Rohe) மற்றும் வால்டர் குரோப்பியஸ் (Walter Gropius) என்போராவர்.
அனைத்துலகக் கட்டிடக்கலைப் பாணியின் பொது இயல்புகள் இலகுவாக அடையாளம் காணப்படக் கூடியவையாகும். கட்டிடங்களின் எளிமையான உருவமைப்பு, அலங்காரங்களைத் தவிர்த்தல், கண்ணாடி, உருக்கு, காங்கிறீற்று என்பவற்றின் பயன்பாடு, கட்டிடங்களின் உட்பகுதிகளைக் காட்டும் தன்மையும் அதனால் அதன் அமைப்புமுறைகளை வெளிப்படுத்தும் தன்மையும், தொழில் மயப்படுத்தப்பட்ட பெரும்படித் தயாரிப்பு நுணுக்கங்களை ஏற்றுக்கொண்டமை, இயந்திர அழகியல், கட்டிடங்களின் செயற்பாடுகளோடு ஒட்டிய வடிவமைப்பு என்பன இத்தகைய இயல்புகளுட் சிலவாகும்.
அலங்காரம் ஒரு குற்றச்செயல் (ornament is a crime), செயற்பாடுகளைத் தொடந்தே உருவம் அமைகின்றது (form follows function) போன்ற அக்காலத்தில் பிரபலமான தொடர்களும், லெ கொபூசியேயின், வீடு என்பது வாழ்வதற்குரிய இயந்திரம் என்னும் விளக்கமும் இப்பாணியின் கொள்கைகளைச் சுருக்கமாக விளக்குகின்றன.
[தொகு] கட்டிடக்கலைஞர்
- வால்டர் குரோப்பியஸ்
- லுட்விக் மீஸ் வான் டெர் ரோ
- ஆல்வார் ஆல்ட்டோ (Alvar Aalto)
- லெ கொபூசியே (Le Corbusier)
- பிலிப் ஜோன்சன் (Philip Johnson)
- ருடோல்வ்ப் ஷிண்ட்லெர் (Rudolf Schindler)
- ரிச்சர்ட் நியூட்ரா (Richard Neutra)
- வெல்ட்டன் பெக்கெட் (Welton Becket)
[தொகு] அனைத்துலகப் பாணிக்கு எடுத்துக்காட்டுகள்
- சீக்ரம் கட்டிடம், நியூ யார்க் நகரம்
- உலக வர்த்தக மையம், நியூ யார்க் நகரம் (அழிந்துவிட்டது)
- சியர்ஸ் கோபுரம், சிக்காகோ
- ஒன்று வில்ஷயர், லாஸ் ஏஞ்சலிஸ்
- சிஎன்ஏ பிளாசா, சிக்காகோ
- வில்லா சவோய், Poissy-sur-Seine, பிரான்ஸ்
- கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகம், லோங் பீச் வளாகம்