வீடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பொதுவான பயன்பாட்டில், வீடு என்பது, மனிதர்கள் வாழ்வதற்காக உருவாக்கப்படும் கட்டிடங்கள் அல்லது அமைப்புக்களைக் குறிக்கும். இங்கே வாழ்வது என்பது, உணவு சமைத்தல், சாப்பிடுதல், இளைப்பாறுதல், தூங்குதல், விருந்தினர்களை வரவேற்றல், வருமானந்தரும் செயற்பாடுகளில் ஈடுபடல் போன்றவற்றை உள்ளடக்கும். இது தனியாகவோ, குடும்பத்துடனோ பல குடும்பங்கள் சேர்ந்து கூட்டாகவோ மேற்கூறியவற்றில் ஈடுபடுவதையும் குறிக்கும்.
மிகப் பழங்கால மனிதர்கள் குகைகளிலே வாழ்ந்தனர். பல்வேறு காரணங்களால் குகைகள் இருக்குமிடங்களை விட்டு நெடுந்தூரத்தில் குடியேற நிர்ப்பந்தம் ஏற்பட்டபோது, வெய்யில், மழை போன்ற இயற்கை மூலங்களிடமிருந்தும், காட்டு விலங்குகள் முதலியவற்றிடமிருந்தும், தங்களைப் பாதுகாத்துக் கொண்டு, முன்னர் கூறிய செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு, உகந்த அமைப்புகளின் தேவை ஏற்பட்டது. உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள், தங்கள் சுற்றாடலில் கிடைத்த பொருள்களைப் பயன்படுத்தி, வீடுகளை அமைக்கக் கற்றுக்கொண்டனர். இப்பரந்த உலகில், காலநிலை, நில அமைப்பு, கிடைக்கக் கூடிய பொருட்கள், தாவரவர்க்கம் போன்ற இன்னோரன்ன அம்சங்களில் பெருமளவு வேறுபாடுகள் காணப்படுவதாலும், மக்களின் தேவைகளும், முன்னுரிமைகளும் இடத்துக்கிடம் மாறுபடுவதாலும், அவர்களால் அமைக்கப்பட்ட வீடுகளும் பல்வேறு விதமாக அமைந்தன.
வளமான பிரதேசங்களில், விவசாயத்தின் அறிமுகத்தோடு, நிரந்தரமாக ஓரிடத்தில் குடியேற முற்பட்டவர்கள், அயலில் இலகுவாகக் கிடைத்த, மரம், இலை குழை போன்றவற்றை உபயோகித்து, வீடுகளை அமைக்கக் கற்றுக்கொண்டனர். வரண்ட பிரதேசங்களில் மேய்ப்புத் தொழிலில் ஈடுபட்டுக் காலத்துக்குக் காலம் இடம் மாறவேண்டிய நிலையிலிருந்தவர்கள், விலங்குத் தோலைப் பயன்படுத்தி இடத்துக்கிடம் எடுத்துச் செல்லக்கூடிய கூடாரங்களை அமைக்கப் பழகினர். பனிபடர்ந்த துருவப் பகுதிகளில் வாழ்ந்த எஸ்கிமோக்கள், பனிக்கட்டிகளை உபயோகித்தே தங்கள் வீடுகளை அமைத்துக் கொண்டனர். இவ்வாறு எண்ணற்றவகை வீடுகள் உலகம் முழுதும் பரந்து கிடக்கின்றன.
மனித இனத்தின் அனுபவம், தேவைகளின் அதிகரிப்பு, வாழ்க்கை முறைகளில் சிக்கல் தன்மை அதிகரிப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, நாகரிக வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புக்கள் என்பன வீடுகளின் அமைப்புக்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தத் தவறவில்லை. சமூகத்தில் மனிதரிடையே சமமற்ற தன்மை, அதிகார வர்க்கத்தின் வளர்ச்சி, அரசு இயந்திரத்தின் தோற்றம், நகராக்கம் என்பனவும், வீடுகளின் வேறுபாடான வளர்ச்சிக்கு வித்திட்டன. பல்பயன்பாட்டுக்குரிய ஓரிரு அறைகளை மட்டும் கொண்டிருந்த வீடுகள், சமுதாயத்தின் உயர்மட்ட மனிதர்களுக்காகச் சிறப்புப் பயன்பாடுகளுடன் கூடிய பல அறைகள் கொண்டதாக வளர்ந்தன.
முற்காலத்திலும், தற்காலத்தில், நகராக்கத்தின் தாக்கம் இல்லாத பல இடங்களிலும், பொதுமக்களுடைய வீடுகள் அடிப்படையில் ஒரேவிதமாகவே அமைந்திருக்கும். இத்தகைய வீடுகளை, சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு காலங்காலமாக கைக்கொள்ளப்பட்டு வருகின்ற வடிவமைப்புகளின் அடிப்படையில் தாங்களே கட்டிக்கொள்வார்கள். இவ்வடிவமைப்புகள், அவ்வப்பகுதி மக்களின் கலாச்சாரத்தைப் பெருமளவு பிரதிபலிப்பவையாக உள்ளன.
தற்காலத்தில் மேற்கத்திய கலாச்சாரத்தின் அதிக ஆதிக்கத்தின் காரணமாக, வளமான, சொந்தக் கலாச்சாரப் பாரம்பரியங்களைக் கொண்ட சமுதாயங்களிற் கூட, மேற்கத்திய பாணி வீடுகளே பிரபலம் பெற்றுள்ளன.
நகர்ப்புறங்களில் பல பெரிய வீடுகள் கட்டிடக்கலைஞர்களினால் வடிவமைப்புச் செய்யப்படுகின்றன. தற்காலத்தின் சிக்கல்மிக்க வாழ்க்கைமுறையின் தேவைகளுக்கு ஏற்பப் பல்வேறு அம்சங்களையும் கருத்திலெடுத்து, வீடுகள் வடிவமைக்கப்படுகின்றன. வீட்டு உரிமையாளரின் பொருளாதாரம், தகுதி, வாழ்க்கைமுறை, கலாச்சாரம் என்பவற்றைப் பொறுத்து, வீடுகள் பின்வருவனவற்றில் பொருத்தமானவற்றைக் கொண்டிருக்கும்.
- வரவேற்பு அறை
- குடும்ப இருக்கை அறை
- தொலைக்காட்சி அறை
- சாப்பாட்டு அறை
- சமையலறை
- பிரதான படுக்கை அறை
- பாதுகாப்பு அறை
- உடுத்தும் அறை
- படுக்கை அறை
- விருந்தினர் படுக்கை அறை
- அலுவலக அறை
- சிறுவர் அறை
- படிப்பு அறை
- நூலக அறை
- வணங்கும் அறை
- உடற்பயிற்சி அறை
- உள்ளக விளையாட்டு அறை
- களஞ்சிய அறை
- வேலையாட்களுக்கான அறை
- குளியல் அறை
- சலவை அறை
- விறாந்தை
- நீச்சல் குளம்
- நீச்சல்குள உடைமாற்று அறை
- வாகனத் தரிப்பிடம்
- வீட்டு மிருகங்களுக்கான கொட்டகை
- பூங்கா
- பூங்கா உபகரணக் களஞ்சியம்
- பாதுகாவல் அறை
[தொகு] இவருவனவற்றையும் பார்க்கவும்
- வீடுகளின் வடிவங்களும் தீர்மானிக்கும் காரணிகளும்
- வீடுகளும் அதன் கூறுகளும்
- பலவகை வீடுகளின் பட்டியல்
- இக்லூ - எஸ்கிமோவர் வீடு
- நாற்சார் வீடு