கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சென்னையில் இருந்து சுமார் 45 மைல்கள் தூரத்தில் அமைந்திருப்பதுதான் காஞ்சிபுரம், பல்லவ நாட்டின் பண்டைய தலைநகரம். இங்கே அமைந்துள்ள பல காலகட்டங்களையும் சேர்ந்த கோயில்களில் சிறப்பு வாய்ந்த ஒன்றுதான் கைலாசநாதர் கோயில். இது காஞ்சிபுரம் நகர மத்தியிலிருந்து ஏறத்தாள ஒரு மைல் தூரத்தில் அமைந்துள்ளது. தென்திசைக் கைலாயம் என்றும் அழைக்கப்படுகின்ற இக்கோயில் திராவிடக் கட்டிடக்கலையின் ஆரம்ப காலகட்டத்துக்குரிய திருப்பு முனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பொருளடக்கம் |
[தொகு] வரலாற்றுப் பின்னணி
தமிழ் நாட்டின் கட்டிடக்கலை வரலாற்றில், நீடித்திருக்கக் கூடிய கட்டிடங்களாகக் கற் கோயில்களை அமைத்துத் திராவிடக் கட்டிடக்கலை வளர்ச்சிக்கு உத்வேகம் கொடுத்தது பல்லவர்கள் ஆகும். தொடக்கத்தில் குடைவரைகளையும், பின்னர் ஒற்றைக் கற்றளிகளையும் அமைத்த இவர்கள் தொடர்ந்து கட்டுமானக் கோயில்களை அமைப்பதிலும் முன்னோடிகளாக அமைந்தார்கள். இவற்றில் இறுதியாகக் குறிப்பிடப்பட்ட கட்டுமானக் கோயில்கள் கட்டும் தொழில் நுட்பம், தமிழ் நாட்டில், பல்லவ மன்னனான இராஜசிம்மனால் கட்டப்பட்ட மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கட்டப்பட்டது தான் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்.
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் கி.பி 700 ஆம் ஆண்டளவில் இராஜசிம்மனால் கட்டத் தொடங்கப் பட்டதெனினும் இவனது மகனான மூன்றாம் மகேந்திரவர்மனே கட்டிடப் பணிகளை நிறைவேற்றி வைத்ததாகத் தெரிகிறது. பின்னரும் 14 ஆம் நூற்றாண்டளவில், விஜயநகரக் காலத்தில், சில பகுதிகள் சேர்க்கப்பட்டதுடன், திருத்த வேலைகளும் செய்யப் பட்டிருப்பதாக அறியக் கூடியதாக உள்ளது.
[தொகு] கட்டிட அமைப்பு
தொடக்கத்தில் இக் கோயில் விமானத்துடன் கூடிய கருவறையையும், அதற்கு முன்பக்கம் தூண்களுடன் கூடிய ஒரு மண்டபத்தையும் கொண்டிருந்தது. இவ்விரு கட்டிடங்களும் உயர்ந்த சுற்று மதிலால் சூழப்பட்டிருந்தன.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
தமிழ் நாட்டு ஓவியக் கலை
[தொகு] உசாத்துணைகள்
- சந்திரமூர்த்தி. மா., தமிழ்நாட்டுச் சிவாலயங்கள் தொகுதி-1, மணிவாசகர் பதிப்பகம், 2003
- Percy Brown, Indian Architecture (Buddhist and Hindu), D.B.Taraporevala & co. Private Ltd.,Bombay, 1971