Ebooks, Audobooks and Classical Music from Liber Liber
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z





Web - Amazon

We provide Linux to the World


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
அய்யாவழி - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

அய்யாவழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

அய்யாவழி, Ayyavazhi (தமிழ்:அய்யா+வழி --> தந்தையின் வழி, இறைவன் வழி) பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், தென்னிந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தோன்றிய ஒருமை கோட்பாட்டு சமயமாகும்.

அய்யாவழி ஒரு தனி சமயமாக அரசால் அங்கீகரிக்கப்படாத போதிலும் அய்யாவழி சமயத்தினரால் அது தனி சமயமாக நிலை நிறுத்தப்படுகிறது. இது அரசால் அங்கீகரிக்கப்படாததால் அய்யாவழி மக்கள், மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது இந்துக்களாக கருதப்படுகிறார்கள்.

அய்யாவழியினர் மட்டுமல்லாமல் சில புற சமூக[1] சமய[2] ஆய்வலர்களும் அய்யாவழியை தனி சமயமாக அங்கீகரித்துள்ளனர். அய்யாவழி தமிழகத்தின் வெளியிலும் பின்பற்றப்படுகின்றபோதிலும் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் கேரளாவின் தென் மாவட்டங்களிலும் இதன் வளர்ச்சி மகத்தானதாகும். அப்பகுதிகளில் அய்யாவழியின் மகத்தான வளர்ச்சிக்கு கிறிஸ்தவ சபைகளின் ஆண்டறிக்கைகளே சிறந்த சான்று. இச்சமயத்தின் கொள்கைகள், போதனைகள், தத்துவக் கோட்பாடுகள், ஆகியன அய்யாவழி புனித நூற்களான அகிலத்திரட்டு அம்மானை, அருள் நூல் ஆகியவற்றிலும் அய்யா வைகுண்டரின் போதனைகளிலும் வெளிப்படுகின்றன.

அய்யாவழியின் முதன்மை புனித நூலான அகிலத்திரட்டின் படி அய்யா வைகுண்டர் கலியை அழிக்க இறைவனால் எடுக்கப்பட்ட மனு அவதாரமாகும். இவ்வழிபாட்டின் புராணத்தின் சில பகுதிகளும் , சில சமயச் சடங்குகளும் இந்து சமயதுடன் ஒத்திருக்கின்ற போதிலும், பெரும்பாலும் வேறுபட்ட கருத்துக்களே அதிகமாக வெளிப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக தீய சக்தி, தர்மக் கோட்பாடு போன்றவற்றில் அய்யாவழி இந்து சமயத்திடமிருந்து வெகுவாக வேறுபடுகிறது.

இது சார்பு கட்டுரைகளின் பாகமான
அய்யாவழி
அய்யாவழியின் வரலாறு
கோட்பாடுகள்

ஏகம்- அடிப்படை ஒருமை
வேதன்-படைப்பாளர்
திருமால்-காப்பாளர்
சிவன்-அழிப்பவர்
வைகுண்டர்-அவதாரம்
அய்யாவழி மும்மை

புனித நூல்கள்

அகிலத்திரட்டு அம்மானை
விஞ்சையருளல்
திருக்கல்யாண இகனை
அருள் நூல்

வழிபாட்டுத்தலங்கள்

சுவாமிதோப்பு பதி
பதிகள்
நிழல் தாங்கல்கள்

சமயவியல்

அய்யாவழி புத்தகங்கள்
அய்யாவழி அமைப்புகள்

சமயச்சடங்குகள்

முதன்மை போதனைகள்

சார்ந்த நம்பிக்கைகள்

அத்வைதம்
சுமார்த்தம்

பொருளடக்கம்

[தொகு] பெயர் காரணம்

இச்சமயத்திற்கு அய்யாவழி என்ற பெயர் எப்போழுது யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்பது தெளிவு இல்லை. பெயர் காரணத்துக்கு பல கோணப்பார்வைகள் இருக்கின்ற போதும் அவைகளை பொருள் கொள்ளுமிடத்து பெரும்பாலும் அவையனைத்தும் ஒத்த கருத்துடையனவாகவே இருக்கின்றன. மிகவும் நுட்பமாக பொருள்கொள்ளும் போது வேறுபடுகின்றன. ஆவை:

  • தந்தையின் பாதை - இச்சமயம் தோன்றிய சுவாமிதோப்பு பகுதியின் தமிழ் பேச்சு மொழியில், அய்யா (தந்தை) + வழி (பாதை). எனில், தந்தையை மிகவும் நேசத்தோடு அழைக்கும் 'ஐயா' என்னும் பதத்தை இறைவனை அழைக்க பயன்படுத்தி, 'அன்புத் தந்தையின் பாதை' என்று பொருள்கொள்ளப்படுகிறது.
  • தலைவனின் ஒப்புயர்வற்ற வாய்மை - அய்யா (தலைவன்) + வழி (ஒப்புயர்வற்ற வாய்மை) என இப்பதங்களின் இலக்கியப் பயன்பாடுகளிலிருந்து பொருள்கொள்ளப்படுகிறது.
  • குருவின் வழிபாடு - அய்யா (குரு) + வழி (வழிபாடு) என கொள்ளப்படுகிறது.
  • இறைவனின் பாதத்தை சேரும் வழி - அய்யா என்பது (இறைவன்) + வழி என்பது (சேரும் வழி) எனவும்

பக்தி முறையாக பொருள் கொள்ளப்படுகிறது.

மேலும் அய்யா என்னும் பதம் தமிழில், தந்தை, குரு, உயர்ந்தவர், சிறந்தவர், மதிக்கத்தக்கவர், தலைவர், அரசர், போதகர் என்றெல்லாம் பொருள்படுவதாலும், வழி என்னும் பதம் தமிழ் மொழியில், பாதை, விதம், முறை, செயல்வகை, கருத்து, இலக்கு, நோக்கம், என்றெல்லாம் பலவாறாக பொருள்படுவதாலும் இப்பதங்களின் பயன்பாடு இங்கே வரையறைக்குட்பட்டதல்ல.

[தொகு] வரலாறு

சுவாமிதோப்பு பதியின் பள்ளியறைக் காட்சி
சுவாமிதோப்பு பதியின் பள்ளியறைக் காட்சி

அய்யாவழி சமயத்தின் தோற்றம் முதன்முதலாக நாட்டின் ஒரு அமைப்பு மக்களிடத்தும், அய்யா வைகுண்டர் முன்பு அவர்களின் சங்கமத்தாலும் உணரப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் சமூகத்தின் மிக பின்தங்கிய நிலையில் உள்ளவர்களாக இருந்தார்கள். ஆரம்பம் முதலேயே அய்யாவழியின் வளர்ச்சி கிறிஸ்தவ போதகர்களுக்கு அவர்களது பணியில் ஒரு பெரிய தடைக்கல்லாகவே திகழ்ந்தது. அய்யாவழியை பின்பற்றியவர்களில் பெரும்பலானோர் சாணார் இனத்தவர்களாக இருந்த போதும் மற்ற சாதியினரும் இச்சமயத்தை பின்பற்றியமைக்கு சான்றுகள் உள்ளன.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலெல்லாம் அய்யாவழி ஒரு சமயமாக அங்கீகரிக்குமளவு தன்னை நிலைபடுத்திக்கொண்டு விட்டது. அவ்வமயம் அதன் இருப்பு திருநெல்வேலியின் தென்பகுதியிலும் திருவிதாங்கூரின் தென்பகுதியிலும் கணிசமாக உணரப்பட்டது. ஆயிரத்து எண்ணூறுகளில் அதன் வளர்ச்சி மேலும் அதிகரித்தது. குறிப்பாக அந்நூற்றாண்டின் நாற்பதுகளிலிருந்து, தொடர்ந்து வரும் ஒவ்வொரு பத்தாண்டுகளும் அய்யாவழி அசாதாரண வளர்ச்சியைக்கண்டது. அய்யா வைகுண்டர் வைகுண்டம் சென்ற பிறகு அய்யாவழி, வைகுண்டரின் போதனைகள், மற்றும் அய்யாவழியின் புனித நூல்களின் அடிப்படையிலும் பரப்பப்பட்டது. அய்யாவழியின் போதனைகளை அய்யாவின் ஐந்து சீடர்கள் நாட்டின் பல பகுதிகளுகும் சென்று பரப்பினர். இது இவ்வாறிருக்க பால் பையன் சுவாமிதோப்பு பதியை நிர்வகிக்கத்தொடங்கினார். மற்ற பதிகளை அந்தந்த பகுதிகளில் வாழ்ந்த அய்யாவழியினர் நிர்வாகம் செய்ய ஆரம்பித்தார்கள். மற்றொருபுறம் நாடு முழுவதுமாக நூற்றுக்கணக்கான நிழல் தாங்கல்கள் எழுந்தன. இவ்வகையில் அய்யாவழியின் தற்போதைய தலைவர்களுள் ஒருவரான பால பிரஜாபதி அடிகளார், பால் பையன் வழி வந்த பையன் வாரிசுகளில் ஒருவராவார். அய்யாவழியின் கடந்த இரு பத்தாண்டுகள் வளர்ச்சியில் இவருக்கு மகத்தான பங்கு உண்டு.

கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் வைகுண்டர் அவதார தினமான மாசி 20, குமரி மாவட்டத்துக்கு விடுமுறையாக இருந்துவருகிறது. தற்போது, இந்த ஆண்டு (2006) முதல் தமிழக அரசு நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கும் இவ்விடுமுறையை நீட்டித்திருக்கிறது.[3]

[தொகு] புனித தலங்கள் மற்றும் நூல்கள்

சுவாமிதோப்பு பதியின் கொடியேற்றுக் காட்சி : ஆவணித் திருநாள் (8/19/2006)
சுவாமிதோப்பு பதியின் கொடியேற்றுக் காட்சி : ஆவணித் திருநாள் (8/19/2006)

அகிலத்திரட்டு அம்மானை மற்றும் அருள் நூல் அய்யாவழியின் புனித நூல்கள் ஆகும். இவற்றுள் அகிலத்திரட்டு அம்மானை முதன்மை புனித நூலாகவும், அருள் நூல் இரண்டாம் நிலை புனித நூலாகவும் கருதப்படுகிறது. அய்யாவழி புராணத்தின் அடிப்படையில், உலகம் உண்டானது முதல் தற்போது நடப்பவைகளும், இனி நடக்கப்போவதுமான முக்கால சம்பவங்களை, நாராயணர் லட்சுமி தேவியிடம் கூறுவதை அய்யாவின் சீடர்களுள் ஒருவரான அரி கோபாலன் சீடர் கேட்டு, இங்கே அவைகளுக்கு எழுத்து வடிவம் கொடுப்பதாக அகிலத்திரட்டு அமைந்திருக்கிறது. இது கலியை அழிக்க இறைவன் உலகில் எடுத்த அவதாரத்தை மையப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. ஆனால் அருள் நூலின் வரலாறு தெளிவு இல்லை. ஆனால் இது அய்யாவின் சீடர்களாலும், அருளாளர்களாலும் எழுதப்பட்டவைகளாக நம்பப்படுகிறது. இன்னூலில் அய்யாவழி வழிபாட்டு-வணக்க முறைகள், சடங்கு முறைகள், அருளாளர்கள் மற்றும் சீடர்களின் தீர்க்க தரிசனங்கள், அய்யாவழி சட்டங்கள் ஆகியன அடங்கும்.

அய்யாவழி மக்களுக்கு ஐந்து முக்கிய புனிதத் தலங்கள் உள்ளன. அவைகள் ஐம்பதிகள், பஞ்சப்பதி என்றெல்லாம் அழைக்கப்படுகின்றன. அவற்றுள் சுவாமிதோப்பு பதி தலைமைப் பதியாகும். இவையல்லாமல் வாகைப்பதி மற்றும் அவதாரப்பதி ஆகியனவும் அகிலத்திரட்டில் பதி என்ற தகுதியை பெறுவதாலும் இவை ஏழும் முக்கிய புனிதத் தலங்களாகவே கருதப்படுகின்றன. ஆனால் வாகைப்பதி மற்றும் அவதாரப்பதி ஆகியவற்றை சில உட்பிரிவுகள், ஏற்றுக்கொள்வதில்லை. குறிப்பாக தற்போதைய அவதாரப்பதி எனப்படுவது, வைகுண்டர் அவதாரம் எடுத்த இடத்தில் இல்லை இன்பது அவர்கள் துணிபு. ஆனால் அவர்களும் திருச்செந்தூரை இரண்டாம் நிலை புனித நூலாக ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் தலைமைப்பதி வெளியிடும் பதிகளின் பட்டியலில் பஞ்சப்பதிகள் தவிர்த்து மற்றவைகள் இடம்பெறவில்லை.

அவதாரப்பதி தவிர பதிகள் அனைத்தும் குமரி மாவட்டத்துள்ளேயே இருப்பதால், மொத்த மாவட்டமே அகில இந்திய அளவில் உள்ள அய்யாவழியினரால் புனிதமானதாக கருதப்படுகிறது.

[தொகு] சின்னம்

அய்யாவழியில் 'நாமம் ஏந்தும் தாமரை' யாக உருவகிக்கப்பட்டிருக்கும் சகஸ்ரார தளம்
அய்யாவழியில் 'நாமம் ஏந்தும் தாமரை' யாக உருவகிக்கப்பட்டிருக்கும் சகஸ்ரார தளம்

அய்யாவழியின் சமயச்சின்னமாவது சுடரை தாங்கும் தாமரையாகும். இதில் தாமரை, 1008 இதழ்களை உடைய சஹஸ்ரார தள (லாடம்) பகுதியையும், சுடர் ஆன்மாவையும் குறிக்கும். அய்யாவழியின் புனித நூல்களான அகிலத்திரட்டு அம்மானையிலும் அருள் நூலிலும் திருநாமம் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆனால் இவைகளை ஆராயுமிடத்து அய்யாவழியின் சின்னமான நாமம் ஏந்தும் தாமரை சார்புடைய கருத்துக்கள் வெளிப்படுகின்றனவேயன்றி இச்சின்னம் பற்றிய நேரடிக்குறிப்புகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் சில வரலாற்றுக்குறிப்புகள் வாயிலாக இச்சின்னம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாற்பதுகளிலிருந்து அய்யாவழியில் பயன்படுத்தப்பாட்டு வருகின்றது என்பது ஏற்கும் விதமாக உள்ளது.

[தொகு] வழிபாட்டுத்தலங்கள்

பதிகளும் நிழல் தாங்களும் அய்யாவழி சமயத்தின் வழிபாட்டுத்தலங்களாக விளங்குகின்றன. இவைகளுள் நாட்டின் பல பகுதிகளில் அய்யாவழி பக்த்தர்களால் அமைக்கப்பட்டுள்ள நிழல் தாங்கல்கள் அய்யாவழி சமய பாடசாலைகளாகவும் திகழ்கின்றன. இவற்றுள் சில அய்யா வைகுண்டர் சச்சுருவமாக இருந்த போதே அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. 1997-ஆம் கணக்கீட்டின் படி தென்னிந்திய முழுவதுமாக 7000 நிழல் தாங்கல்கள் செயல்பட்டு வருகின்றன. அய்யாவழி ஒருங்கிணைக்கப்படாத சமயமாக இருப்பதால், சுவாமிதோப்பு பதி சமய ரீதியாக மட்டுமே தலைமைப்பதியாக விளங்குகிறது. ஆட்சி ரீதியாக அல்ல.

[தொகு] பதிகள்

அய்யாவழியின் சமயத்தலைமையகம் ஆகிய சுவாமிதோப்பு பதி
அய்யாவழியின் சமயத்தலைமையகம் ஆகிய சுவாமிதோப்பு பதி

பதிகள் அய்யாவழியின் முக்கியமான கூட்டுவழிபாட்டு தலமாக விளங்குகின்றன. இவைகள் கோயில்களை பொன்ற பெரிய அமைப்புடையதாகும். இவற்றின் சிறப்பெனப்படுவது, அய்யா வைகுண்டரின், அவதார இகனைகள் அனைத்தும் வரலாற்றுபூர்வமாக பதிகளுடன் தொடர்புடையதாகும். இவை ஐந்து ஆகும்.

[தொகு] நிழல் தாங்கல்கள்

நிழல் தங்கல்கள் பதிகளை போல் அல்லாமல் சிறிய அளவுடையதாக இருக்கும். இவற்றுள் பல அகிலத்திரட்டு பாடசாலைகளாகவும் திகழ்கின்றன. இவைகளில் அன்னதர்மமும் ஏனைய உதவிகளும் செய்யப்படுகின்றன. தமிழ்நாடு மற்றும் கேரளப் பகுதிகளிலுமாக, 8000 - க்கும் மேற்பட்ட தாங்கல்கள் செயல் பட்டு வருவதாக சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.[4]

[தொகு] பதி - தாங்கல்

அய்யாவழியில் பதிகள் மற்றும் தாங்கல்களில் வேறுபாடு அகிலத்தின் அடிப்படையில் பகுக்கப்படுகிறது. ஒரு பகுதியை பதி என்று அழைக்க இரண்டு விதிமுறைகள் உள்ளன. அவை,

  • அது அகிலத்திரட்டில் பதி என்ற தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
  • அது அய்யாவின் அவதார இகனையுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.

[தொகு] நம்பிக்கைகள்

அய்யாவழியின் புனித சின்னம், திருநாமம் ஏந்தும் தாமரை
அய்யாவழியின் புனித சின்னம், திருநாமம் ஏந்தும் தாமரை

அய்யாவழி மறுபிறவி கொள்கையையும் தர்ம யுகத்தையும் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் இந்து சமயத்தில் பின்பற்றப்படும் ஜாதி முறையை இவ்வுகத்துக்கு பொருந்தாதது என நிராகரிக்கிறது. மூர்த்தி வழிபாட்டையும் அய்யாவழி ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் பாமார மக்களும் வழிபட ஒரு உருவத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அய்யாவழியில் இறைவன் அமர்வதர்க்கான இருக்கையாக, பள்ளியறையில் ஆசனம் அமைக்கப்பட்டு, அவ்வாசனத்தில் அய்யா அரூபமாக அமர்ந்திருப்பதாக உணர்த்தப்படுகிறது. அய்யாவழி, சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளையும் ஒப்பற்ற ஒரே கடவுளின் மாறுபட்ட வடிவங்களாக காண்கிறது. இவ்வகையில் அய்யாவழி அத்வைதம் மற்றும் சுமார்த்தம் ஆகியவைகளை ஒத்திருக்கிறது. அய்யாவழி துவைதம் மற்றும் விசிஷ்டா துவைதம் ஆகிய கோட்பாடுகளுடன் ஒத்திருப்பதாகவும் கருத்துகள் உள்ளன. மேலும் அய்யாவழி ஏகத்துவத்தை வலியுறுத்துகிறது.

அய்யாவழி தீய சக்தியின் மொத்த ஒருங்கிணைந்த உருவமாக குறோணி என்னும் அசுரனை உருவகிப்பதன் மூலம் இந்து மதத்திடமிருந்து வெகுவாக வேறுபடுகிறது. ஆறு துண்டுகளாக வெட்டி அழிக்கப்பட்ட குறோணி, பின்வரும் ஒவ்வொரு யுகங்களிலும் ராவணன், துரியோதனன் என அசுரப்பிறவிகளாகப் பிறக்கிறான். அவர்களை அழிக்க விஷ்ணு, அந்தந்த யுகங்களில் ராமன், கிருஷ்ணன் மற்றும் கடைசியாக வைகுண்டராக அவதரிக்கிறார்.

தற்போதைய கலியுகத்தில் குறோணியின் ஆறாவது துண்டான கலி மாயையாக உலகத்தில் பிறக்கிறான். அக்கலியனை அழிக்க ஏகப்பரம்பொருளான இறைவன் வைகுண்ட அவதாரம் கொள்கிறார். ஆக வைகுண்டர் அவதாரம் எடுத்த உடனேயே கலி அழியத்தொடங்கி தற்பொது அழிந்துகொண்டிருப்பதாக அகிலம் கூறுகிறது.

அன்ன தர்மம் அய்யாவழியில் முக்கிய பங்கு வகிக்கிறது. பெருவாரியான நிழல் தாங்கல்களில் மாதத்துக்கு ஒரு முறையாவது அன்ன தர்மம் செய்கிறார்கள்.

[தொகு] இறைவன்

Main article:அய்யாவழி மும்மை

அய்யாவழியின் இறையியல் மற்ற ஏகத்துவ சமயங்களிலிருந்து வேறுபடுகிறது. அது ஏகம் என்னும் அடிப்படை ஒருமையையும், பல்வேறு மாற்றங்களுக்கு பின்னால் ஒரு ஒற்றுமை இருப்பதாகவும் கூறுகிறது. மேலும் பிரபஞ்சத்தை சிவம் என்றும் இதை இயக்கும் சக்தியை (force) சக்தி என்றும் கூறுகிறது. மேலும் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளை பற்றியும் கூறுவதுடன் மேலும் பல கீழ்நிலை தெய்வ சக்திகளையும் கூறுகிறது. ஆனால் கலியன் கேட்ட கொடிய வரங்கள் காரணமாக நாராயணரால் குறோணியின் ஆறாவது துண்டான கலியை நேரடியாக அழிக்க இயலாது. அதனால், அனைத்து தெய்வ சக்திகளும் ஏகத்துள் ஒடுங்கி, அந்த ஏகம் உலகில் கலியை அழிக்கும் பொருட்டு மூன்றின் தொகுதியாக வைகுண்டம் என அவதரிக்கிறது.

மேலும் வைகுண்டர் மறு மன்னர் எதிரியில்லாமல் ஆளும் எட்டாவது யுகமாக ஒரு தர்ம யுகத்தையும் அகிலம் கூறுகிறது. அனைத்து தெய்வ சக்திகளும் ஒடுங்கி வைகுண்டமாக அவதரிப்பதால் கலி யுகத்தில் அய்யா வைகுண்டர் ஒருவரையே வழிபடக்கூடிய கடவுளாக அகிலம் கூறுகிறது. இதன் அடிப்படையில் அய்யாவழி ஓரிறைக்கோட்பாட்டு சமயமாகவும் உருவம் பெறுகிறது.

[தொகு] எழுவாய் - சான்றோர்

பட்டத்து அய்யா, பையன் செல்லவடிவு, அவர்களின் இருபதாம் நூற்றாண்டின் வரைபடம்
பட்டத்து அய்யா, பையன் செல்லவடிவு, அவர்களின் இருபதாம் நூற்றாண்டின் வரைபடம்

அய்யாவழியின் படி சான்றோரின் சகாப்தம் துவாபர யுகத்தின் நிறைவுடன் துவங்குகிறது. அயோத அமிர்தவனத்தில் சப்த கன்னியருக்கு பிறந்த ஏழு பிள்ளைகளும் அவர்களது வம்சாவளியினரும் இவ்வாறு சான்றோர் என அழைக்கப்படுகின்றனர்.

அகிலத்திரட்டின் படி இச்சான்றோர் என்னும் பதம் தற்போது அய்யாவழியில் சமய ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் இரு கோணத்தில் பயணிக்கிறது. இன்று பெரும்பாலும் அய்யாவழியினரின் பார்வை சான்றோர் விடயத்தில் சமய ரீதியாகவே இருக்கிறது. இப்பார்வை மூலம், தமிழ் இலக்கியங்களில் இப்பதத்தின் பயன்பாடுகளைக் கொண்டும், அகிலத்தின் சில அடிகளை மையமாகக் கொண்டும், "எவர் ஒருவர் நீதியாக வாழ்கிறாரோ", "எவர் ஒருவர் (அனுபவத்தில்) இறைவனை காணும் தகுதி பெறுகிறாரோ" அவர் சான்றவர் என்னும் பரந்த அடிப்படையினாலான உலகளாவிய பார்வையை முன்வைக்கப்படுகிறது. மறுபுறம், இப்பார்வையில் அய்யாவழியை பின்பற்றும் எவரும் சான்றவர் என்னும் கருத்தும் கொள்ளப்படுகிறது. ஆனால் அகிலத்தின் பரவலான பார்வை மேலோட்டமாக இவ்வாறல்லாமல் பெரும்பாலும், இப்பதத்தின் சமுதாய கோணத்தையே வலியுறுத்துவதாக தெரிகிறது. இதனிமித்தம் இப்பார்வை சாணார் இனத்தையே மையப்படுத்துகிறது.

ஆனால் இச்சான்றோர் இவ்வுகத்தின் முதல் மக்களினம் என்னும் கருத்து அகிலத்தில் மேலோங்குவதால், இப்பார்வையில் சாணார் எனப்படுபவர்கள், தற்போது தமிழகத்தில் வாழும் நாடார் இனம் என்னும் பார்வை ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. ஆனால் ஆதி காலத்தில் வாழ்ந்த, அரேபியர்களால் அல் ஹிந்த் என்றும் விவிலிய காலகட்டங்களில் பஞ்ச நதிகளின் மக்களினம் என்றும் அழைக்கப்பட்டவர்களும், 250 மேல் பிரிவுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் இன்று சிதறுண்டு கிடக்கும் மக்கள் என்று கொள்ளுதலே பொருத்தமானதாகும். அகிலத்தின் ஆதிச்சாதி போன்ற பயன்பாடுகள் இதற்குச் சான்று.

ஆனால் மறுபுறம் அய்யாவின் போதனைகளும், அகிலத்தின் செய்திகளும் சாதி முறையை கடுமையாக கண்டிப்பதாலும் இக்கோணத்தாலான சமுதாய்ப் பார்வையை அகிலம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றே பரவலாக கருதப்படுகிறது.

[தொகு] தத்துவப் பின்புலம்

அகிலத்திரட்டு அம்மானை, அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எழிய நடையில் உயர்ந்த தத்துவங்களை கதை ரூபத்தில் வளிப்படுத்தியிருக்கும் நூல் என்னும் கருத்தும் உள்ளது. அகிலத்திரட்டு முழுவதையும் - குறோணி முதல் தர்மயுகம் வரை அனைத்தையும், மனித உடலுக்குள்ளேயே விளக்கி அதை, யோக சித்தி அடையச் செய்யும் நூல் என்பது சில கல்வியாளர்கள் துணிபு. மேலும் அகிலம் சித்தர் பரிபாஷையில் இயற்றப்பட்ட நூலாகும். அகிலத்திரட்டில் காணப்படும் 'ஏரணியும் மாயோன்', உச்சிச் சுழி', 'மூக்குச் சுழி', 'முச்சுழி', 'லலாடம்', 'மேலக்கால் மண்டபம்', 'கொண்டையமுது', 'அகங்காணும் பாந்தள்' போன்ற பயன்பாடுகள் இதற்கு சிறந்த சான்றுகளாகும்.

ஆறு துண்டுகளாக வெட்டப்படும் குறோணி எனப்படுவது, மனித உடலின் ஆறு அகப்பகைகள் எனவும், அவைகளை கடந்து சகஸ்ராரப் பகுதியில் இறைவனை முழுமையாக உணர்வது தான் தர்மயுகம் என்பது அய்யாவழி தத்துவ வாதிகளின் கருத்து. மேலும் அய்யாவழி ஒரு அடிப்படை ஒருமை கோட்பாட்டையும் கொண்டுள்ளது. இதன் மூலம் நாம் காணும் அனைத்தும் ஒன்று என்றும், இங்கு காணப்படும் அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பால் ஒரு ஒருமை என்னும் முழுமுதற்பொருள் இருப்பதாகவும் அகிலம் கூறுகிறது. அகிலத்தின் இரண்டாம் திருவாசகம் இவ்வொருமையிலிருந்து பிரபஞ்சத்தின் அனைத்தும் உருவானதாகக் கூறுகிறது. மேலும் அகிலம் மனிதப் பிறவிக்கும் ஏனைய பிரபஞ்சத்திற்கும் ஒரே உற்பத்தி விதியை கூறுவதாகத் தெரிகிறது.

[தொகு] அய்யாவழியில் இருபொருள் வாதம்

நீடிய யுகத்தில் தோன்றிய குறோணி, ஆறு துண்டுகளாக வெட்டப்பட்டு, பின்வரும் யுகங்களில் அவை ஆறும் அழிக்கப்பட்டு இறுதியில் கலியன் நடுத்தீர்வை செய்யப்பட்டு நரகத்தில் தள்ளி கதவடைக்கப்படுவதாக அகிலம் கூறுகிறது. இதன் மூலம் அய்யாவழி இருபொருள் வாதத்தை வலியுறுத்துவது போன்றதொரு தோற்றத்தை அளிக்கிறது. ஆனால் கலி என்பது மாயை என்று வர்ணிக்கப்படுவதால் மாயையின் அழிவே அவ்வாறு கூறப்படுவதாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும் அகிலம் தொடக்கம் முதலேயே அடிப்படை ஒருமையாகிய ஏகத்தை கூறி வருவதால், இது இருபொருள் வாதக் கோட்பாட்டை மங்கச்செய்கிறது.

அது மட்டுமல்லாமல் அய்யாவின் சீடர்களாலோ அருளாளர்களாலோ எழுதப்பட்டவைகளாக நம்பப்படும் அருள் நூலின் பெருவாரியான பகுதிகளும் ஒருமைக்கோட்பாட்டை வலியுறுத்துவதாக அமைந்திருப்பதும் இருபொருள் வாதம் பற்றிய கூற்றுகளை அய்யாவழியிநின்று புறந்தள்ளுகிறது.

[தொகு] புராணம்

(முக்கிய கட்டுரை: அய்யாவழி புராணம்)

நாராயண வைகுண்டர்
நாராயண வைகுண்டர்

அய்யாவழியின் புராண வரலாறு இந்து சமயத்தின் புராணங்களுடன் நெருங்கிய தொடர்புடையதாக உள்ளது. அகிலத்திரட்டின் முதற்பகுதியான முந்திய யுகங்களைப்பற்றி கூறும் பகுதி இந்து புராணங்களுடன் நிறைய சம்பவங்களை பகிர்ந்து கொள்கிறது. மேலும் பல கடவுளர்களையும், கொட்பாடுகளையும் பகிர்ந்து கொள்கிறது. ஆனால் பெருவாரியானவைகளை திருத்தியமைத்திருக்கிறது. அய்யாவழியின் யுகங்களும், அவதாரங்களும் எண்ணிக்கையில் இந்து சமயத்திலிருந்து மாறுபடுகிறது. அய்யாவழியில் கலி உருவகப்படுத்தப்படுகிறது. ஆனால் இந்து சமயத்தில் இல்லை. இதைப்பற்றி கூறும் பொழுது அகிலத்திரட்டு அம்மானை, இவை சார்ந்த உண்மைகள் மறைக்கப்பட்டதாகவும் அதனால் அவை (பழைய புராணங்கள்) சாரம் கெட்டுவிட்டதாகவும் கூறுகிறது.

அகிலத்தின் இரண்டாம் பகுதி, கலி யுகத்தில் கலியை அழிக்க இறைவன் அவதரித்த செய்தியை உலகுக்கு கூறுவதாக அமைக்கப்பட்டுள்ளது. ஏகாபரன், வைகுண்டராக அவதரிக்கிறார். வைகுண்ட அவதாரம் மிகவும் பிந்திய காலகட்டத்தில் நிகழ்ந்திருப்பதாததால் அவர் வரலாற்றில் வெகுவாக அறியப்படுகிறார். அவர் நிகழ்த்திய பெரும்பாலான அவதார இகனைகள் வரலாற்றில் இடம்பெறுகின்றன. இதனிமித்தம் அகிலத்திரட்டின் இரண்டாம் பகுதி வரலாறு மற்றும் புராணச்செய்திகளின் கலப்பாக அமைந்துள்ளது.

[தொகு] சமயச்சடங்குகள்

முக்கியக் கட்டுரை:அய்யாவழி சமயச்சடங்குகள்

புராணம் மற்றும் கோட்பாடுகளைப்போன்று சமயச்சடங்குகளிலும் அய்யாவழி, தனக்கு இனமான புதுப்பாதையிலேயே பயணிக்கிறது. அது ஒடுக்கப்படுபவர்களையும், புறக்கணிக்கப்படுகிறவர்களையும் இறையியல் ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும், வெகுவாக தேற்றி தைரியமளிப்பதாக உள்ளது. இதற்கு சான்றுகளாக; புற மற்றும் அகத்தூய்மையை உணர்த்தும் துவையல் தவசு, தீண்டாமையை துரத்தும் முறையான தொட்டு நாமம், சுயமரியாதை மற்றும் உறுதியை அளிக்கும் முறையான தலைப்பாகை அணிதல், சாதி முறைகளைக்களையும் விதமாக அமைக்கப்பட்ட முத்திரிக்கிணறு, ஆகிய சடங்குகள் விளங்குகின்றன. அய்யாவழியில் சமயச்சடங்குகளுக்கு இறையியல் ரீதியாக பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்ற போதும், அவை சமுதாய ரீதியாக ஜாதிப் பிரிவினைகளை புறந்தள்ளி, அனைத்து மக்களும் ஒன்று என்னும் கோட்பாட்டை வலியுறுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது. இவற்றுள் மிகச்சில இந்து சமயச்சடங்குகளை ஒத்து இருக்கின்றன.

[தொகு] புது வழிபாட்டு முறை

சுவாமிதோப்பு பகுதியின் வரைபடம்
சுவாமிதோப்பு பகுதியின் வரைபடம்

அய்யாவழி உதயமாகி 170 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அது ஒரு மாற்று சமய-சமுதாய அமைப்பு முறையாக விளங்குகிறது. மற்ற சமயங்களுக்கு மத்தியில் - வண்ணமயமான வரலாற்றை பெற்றுள்ள இந்து சமயம், புதிதாக அறிமுகமாயிருக்கும் கிறிஸ்தவம், அவ்வளவாக அறியப்படாத இஸ்லாம், ஆழமாக வேரூன்றியுள்ள சிறு தெய்வ வழிபடுகள் - இவைகளுக்கு மத்தியில் அய்யாவழி ஒரு மாற்று சமய-சமுதாய அமைப்பாக அதன் பிறப்பிடத்தில் உருவெடுத்து நிற்கிறது.

அய்யாவழியினர் ஒரு முனையில் தாங்கள் பிற சமயங்களிலிருந்து கடைந்து எடுக்கப்பட்ட வெண்ணையாகவும் மறு முனையில் மற்ற சமயங்களில் இருந்து மாறுபட்ட புதிய சமயமாக கருதுகின்றனர். அவர்கள் ஒரு முனையில் வைகுண்டர் அனைத்து பிற சக்திகளையும் தன்னுள் ஐக்கியப்படுத்திவிட்டதாகவும், மறு முனையில் அவை அனைத்தும் வைகுண்டரின் வருகையோடு சாரம் கெட்டு விட்டதாகவும் கருதுகின்றனர். மேலும் அய்யாவழி இந்து சமயத்தின் ஆதரவொடு வளரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்லமல் சமுதாயப்பார்வை மூலம் பார்த்தால் பொதுவாக சீர்திருத்த அமைப்புகள் இந்தியாவில் ஆங்கிலேயர்களால் ஆதரிக்கப்பட்டிருக்கும். ஆனால் அய்யாவழியோ அவ்வாறல்ல. அது தான்னக எழுந்து தன்னம் தன்னால் நிலைபடுத்திக்கொண்டது.

[தொகு] ஆதாரங்கள்

  • அகிலத்திரட்டு அம்மானை, பதிப்பாளர் பாலராமசந்திரன் நாடார், ஒன்பதாம் பதிப்பு 1989
  • அருள் நூல், பதிப்பாளர் பாலராமசந்திரன் நாடார், பதிமூன்றாம் பதிப்பு 1990
  • வே.தி. செல்லம், தமிழக வரலாறும் பண்பாடும், பாகம் 12
  • ஆ.அரிசுந்தர மணி, அகிலத்திரட்டு அம்மானை பாராயண உரை, அய்யா வைகுண்டர் திருக்குடும்ப வெளியீடு
  • சாமுவேல் மாடீர், தி லான்ட் ஆப் சாரிட்டி
  • பின்வரும் ஆண்டுகளுக்கான லண்டன் சமயப் பணிப்பரப்பு சமூகத்தின் ஆண்டறிக்கைகள்:1838, 1843, 1847, 1872, 1892.
  • 1862, 1863, ஆகிய ஆண்டுகளுக்கான ஜெம்ஸ்டவுன் பணிப்பரப்பு மாவட்ட ஆண்டறிக்கைகள்.
  • 1858, 1859, 1863, 1864, ஆகிய ஆண்டுகளுக்கான சாந்தாபுரம் பணிப்பரப்பு மாவட்ட ஆண்டறிக்கைகள்.
  • 1864, 1866, 1871, 1880, ஆகிய ஆண்டுகளுக்கான நாகர்கோயில் பணிப்பரப்பு மாவட்ட ஆண்டறிக்கைகள்.
  • 1863, 1869, 1871, 1872, ஆகிய ஆண்டுகளுக்கான நெய்யூர் பணிப்பரப்பு மாவட்ட ஆண்டறிக்கைகள்.
  • 1867, 1869, ஆகிய ஆண்டுகளுக்கான திட்டுவிளை பணிப்பரப்பு மாவட்ட ஆண்டறிக்கைகள்.
  • 1871, ஆண்டுக்கான கொட்டாரம் பணிப்பரப்பு மாவட்ட ஆண்டறிக்கை.
  • என்.அமலன், வைகுண்டர் பிள்ளைத் தமிழ், சாமிதோப்பு வைகுண்ட குருகுல சேவாதள வெளியீடு, 1984.
  • அருணன், தமிழகத்தில் சமூக சீருதிருத்தம் - இரு நூற்றாண்டு வரலாறு

[தொகு] குறிப்புகள்

  1. வே.தி. செல்லம் தமிழக வர்ரலாறும் பண்பாடும் பகுதி 12, பக்கம் 493 தலைப்பு "வைகுண்ட சாமிகள் (1810 - 1851) " வரி 11 "அய்யாவழி சமயம் உதயமாகியது".
  2. சாமுவேல் மாட்டீர், லான்ட் ஆப் சாரிட்டி (ஆங்கிலம்), பக்கம் :222-223
  3. தினத்தந்தி, நாகர்கோவில் பதிப்பு, 4/3/2006,பக்கம் - 17.
  4. த.கிருஷ்ணநாதன், அய்யா வைகுண்டரின் வாழ்வும் சிந்தனையும், பகுதி - 4, பக்கம் 83.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

Wikimedia Commons logo
விக்கிமீடியா காமன்ஸ் -ல் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
விக்கி மேற்கோள்களில் பின் வரும் நபர் அல்லது தலைப்பு தொடர்பான மேற்கோள்கள் தொகுக்கப்பட்டுள்ளன:
விக்கிமூலத்தில் பின் வரும் தலைப்புக்கான மூலம் தொகுக்கப்பட்டுள்ளது:

[தொகு] புற இணைப்புகள்





Our "Network":

Project Gutenberg
https://gutenberg.classicistranieri.com

Encyclopaedia Britannica 1911
https://encyclopaediabritannica.classicistranieri.com

Librivox Audiobooks
https://librivox.classicistranieri.com

Linux Distributions
https://old.classicistranieri.com

Magnatune (MP3 Music)
https://magnatune.classicistranieri.com

Static Wikipedia (June 2008)
https://wikipedia.classicistranieri.com

Static Wikipedia (March 2008)
https://wikipedia2007.classicistranieri.com/mar2008/

Static Wikipedia (2007)
https://wikipedia2007.classicistranieri.com

Static Wikipedia (2006)
https://wikipedia2006.classicistranieri.com

Liber Liber
https://liberliber.classicistranieri.com

ZIM Files for Kiwix
https://zim.classicistranieri.com


Other Websites:

Bach - Goldberg Variations
https://www.goldbergvariations.org

Lazarillo de Tormes
https://www.lazarillodetormes.org

Madame Bovary
https://www.madamebovary.org

Il Fu Mattia Pascal
https://www.mattiapascal.it

The Voice in the Desert
https://www.thevoiceinthedesert.org

Confessione d'un amore fascista
https://www.amorefascista.it

Malinverno
https://www.malinverno.org

Debito formativo
https://www.debitoformativo.it

Adina Spire
https://www.adinaspire.com