பைக்கால் ஏரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
![பைக்கால் பேரேரியின் நடுவே உள்ள ஓல்க்கான் என்னும் தீவு](../../../upload/shared/thumb/5/5c/Olchon1.jpg/250px-Olchon1.jpg)
பைக்கால் ஏரி உருசியாவில் (ரஷ்யாவில்) உள்ள நன்னீர்ப் பேரேரி (மிகப்பெரிய ஏரி). உலகில் உள்ள ஏரிகள் யாவற்றினும் மிக ஆழமும் (1637 மீட்டர்), மிக அதிகளவு (23,600 கன கிலோமீட்டர்) நீரும் கொண்ட ஏரி இதுவே. உலகில் உள்ள ஏரிகள் யாவற்றினும் மிகப்பழைய ஏரியும் ஆகும். உலகில் நீர்ம வடிவில் நிலத்தின் மேற்புறத்தில் உள்ள நீரில் 20% இந்த ஓர் ஏரியில் உள்ளது. உருசியாவின் நன்னீரில் 90% இவ்வேரியில் உள்ளது. இது ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால் உலக வரலாற்றுச்சிறப்பு இடம் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது. இப் பேரேரி உருசியாவில் தென் சைபீரியாவில் உள்ளது.
பைக்கால் ஏரியில் உள்ள நீரின் அளவானது அமெரிககாவில் உள்ள ஐந்து பேரேரிகளில் உள்ள மொத்த நீரின் அளவைக்காட்டிலும் அதிகமானது, ஆனால் அமெரிக்கப் பேரேரிகளின் ஆழம் குறைவானதால், அமெரிக்கப் பேரேரிகளை ஒப்பிடும்பொழுது பைக்கால் ஏரியின் நீர்ப்பரப்பின் அளவு குறைவு. பைக்கால் ஏரியானது 636 கிலோமீட்டர் நீளமும், அதிக அளவாக 80 கிலோ மீட்டர் அகலமும் கொண்டுள்ளது. மொத்தப் பரப்பளவு 31,494 சதுர கிலோ மீட்டர் கொண்டது. பெரிதும் சிறிதுமாய் சுமார் 300 ஆறுகள் இவ்வேரிக்கு நீர் கொண்டு வருகின்றன. இவற்றுள் ஆறு பெரிய ஆறுகள் குறிப்பிடத்தக்கன. அவையாவன: சிக்கோய் (Chikoy), கில்லோ (Khiloh), உடா (Uda), பார்குசின் (Barguzin) வட அங்காரா (Upper Angara). இவ்வேரியில் சுமார் 22 சிறு தீவுகளும் உண்டு. இத்தீவுகளுள் பெரியது ஒல்க்கோன் என்னும் தீவு ஆகும். இத்தீவு 72 கி.மீ நீளம் கொண்டதாகும்.
பைக்கால் பேரேரி சுமார் 25-30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றயதாகக் கருத்தப்படுகின்றது. இவ்வேரியில் வாழும் உயிரினங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தன. இங்குள்ள உயிரினங்களில் 80% வேறெங்கும் காண இயலாதன. இப் பேரேரியில் 1085 வகையான நீர்வாழ்ச் செடிகொடி இனங்களும் 1550 நீர்வாழ் விலங்கினங்களும் இருப்பதாக அறிந்துள்ளனர். மிகப்பழைய ஏரியாகையால் உயிரின வளர்ச்சியின் வரலாற்றை அறிய பெருந்துணையாய் இருப்பது என்று பேணப்படுகின்றது.