தீபாவளி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தீபாவளி, ஐப்பசி அமாவாசை அன்று இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.
தீபம் என்றால் ஒளி, விளக்கு. ஆவளி என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்வாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர் பின் எண்ணெய்க் குளியல் (கங்கா ஸ்நானம்) செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டு காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.
பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்டிர் புடவையிலும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆடவர் வேட்டியிலும் தென்படுவர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதஸ்வரம் ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபாவளி லேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு.
தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணையில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும். அந்த நீராடலைத்தான் "கங்கா ஸ்நானம் ஆச்சா" என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர். அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.
[தொகு] இலங்கைத் தீபாவளி
இலங்கையில் இந்தியா போன்று தீபங்களை தீபங்கள் பெருமளவு தீபங்கள் ஏற்றுவது கிடையாது இதை விளக்கீடு என்ற திருவிழாக்காலத்திலேயே செய்கின்றார்கள்.
[தொகு] மேற்குநாடுகளில் தீபாவளி
மேற்குநாடுகளில் தீபாவளிக்கு முக்கியத்துவம் உண்டு. மற்றபல இந்து விழாக்கள் போல் அல்லாமல் அனைத்து இந்துக்களும் எதோ ஒரு வழியில் தீபாவளியை கொண்டாடுவதாலும், கிறிஸ்மஸ், இட் போன்ற கொண்டாட்ட காலங்களில் வருவதாலும், வட இந்திய இந்துக்களுக்கு இப்பண்டிகை அதிமுக்கியத்துவம் கொண்டதாக அமைவதாலும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இங்கு இது "Festival of Lights" என்று அறியப்படுகின்றது. தீபாவளி பல்லினப்பண்பாட்டின் கொண்டாட்டங்களில் ஒன்றாக மருவி வருகின்றது.