வா. செ. குழந்தைசாமி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வா.செ. குழந்தைசாமி (V.C. Kulandaiswamy) [பிறப்பு:ஜூலை 14, 1929] ஒரு புகழ் பெற்ற இந்திய பொறியியல் (நீரியல்துறை) அறிஞரும், கல்வியாளரும் மற்றும் கவிஞரும் எழுத்தாளரரும் ஆவார். தற்போது தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் நிறுவனத் தலைவராக உள்ள இவர்[1] இன்றைய கரூர் மாவட்டத்திலுள்ள வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர்.
[தொகு] கல்வி
கரக்பூரிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், ஜெர்மனியிலும் அமெரிக்காவிலும் உயர்படிப்பைத் தொடர்ந்தார். இவரது ஆய்விற்காக இல்லினாயிஸ் பல்கலைக்கழகத்திடமிருந்து நீர்வளத்துறையில் முனைவர் பட்டம் பெற்றார். நீர்வளத்துறை இலக்கியத்தில் இவரது கண்டுபிடிப்பு குழந்தைசாமி மாதிரியம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது.
[தொகு] வகித்த பதவிகள் மற்றும் பெற்ற விருதுகள்
இவர் உலக அளவில் நீர்வளத்துறையில் பல குறிப்பிடத்தக்க பதவிகள் வகித்துள்ளார். பல ஆய்வுக்குழுக்களிலும், திட்டக்குழுக்களிலும் பங்கேற்றுள்ளார். பொறியியல் கல்வியில் ஆர்வம் கொண்ட இவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மற்றும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தராகவும் பதவி வகித்துள்ளார்.
இவர் குலோத்துங்கன் என்ற புனைப்பெயரில் பல கவிதைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவைதவிர ஆங்கிலத்திலும், தமிழிலும், பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்திற்கு இவரது பங்களிப்புகளைப் பாராட்டி சாகித்ய அகாடமி விருது வழங்கியுள்ளது. மேலும், கல்வி மற்றும் அறிவியல் துறைகளில் இவரது பங்களிப்பிற்காக பத்ம ஸ்ரீ விருது 1992-ம் ஆண்டும், பத்ம பூசன் விருது 2002-ம் ஆண்டும் வழங்கப்பட்டது.[2] இவரது தமிழ்ப் படைப்புகளுக்காக யாழ்ப்பானப் பல்கலைக்கழகம் இவருக்கு 1980-ம் ஆண்டு கௌரவ முனைவர் பட்டமளித்தது.
இவர் தனது ஆறு கவிதைத் தொகுப்புகள் மற்றும் ஏழு கட்டுரைகளுக்காக 1999-ம் ஆண்டு தமிழக அரசின் திருவள்ளுவர் விருது பெற்றார். தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தலைவர் பதவியோடு சென்னை ஆசியக் கல்வி நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் இவர் உள்ளார்.