யாழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
யாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். யா+ழ் = யாழ், நரம்புகளால் யாக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள்.
பொருளடக்கம் |
[தொகு] இலக்கியத்தில் யாழ்
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல்காப்பியர், யாழ் சிந்து வெளி நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடுகின்றார். அகநானூறு, புறநானூறு, நற்றிணை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பரிபாடல், மலைபடுகடாம் முதலிய இலக்கியங்களில் யாழ் வாசிப்பு, பல்வகை யாழ்கள் மற்றும் யாழின் உறுப்பமைதி தொடர்பான குறிப்புகள் பல இருக்கின்றன. சிலப்பதிகாரத்தில் யாழ் வகைகளும், யாழின் உறுப்புகள் பற்றியும், யாழ் நரம்புகளை பரிசோதித்து சுருதி கூட்டிப் பின்னர் யாழை எப்படி இசைப்பது என்பதற்கான இலக்கணங்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சீவக சிந்தாமணியில் காந்தர்வதத்தை என்னும் இசையில் தேர்ந்த பெண்ணுக்கும் சீவகனுக்கும் இடையில் நடக்கும் யாழிசைப் போட்டி பற்றிய பாடல்களில், யாழுக்கு நேரக்கூடிய குற்றங்கள், யாழுடன் சேர்ந்து பாடுவதற்கான இலக்கணம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. திருமுறையாசிரியர்களின் பதிகங்களில் யாழ் இறையாடலுக்குப் பயன்பட்ட இசைக்கருவியெனப் பல இடங்களில் குறிக்கிறார்கள். திருஞான சம்பந்தர் இயற்றிய தேவாரப்பதிகங்களைத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் அழகாக யாழில் வாசித்திருக்கின்றார்.
1947 இல் ஈழத்தவரான சுவாமி விபுலாநந்தர் யாழ் நூல் என்னும் தமது இசைத் தமிழ் நூலில் யாழைப் பற்றி பல விரிவான ஆய்வுகளைத் தொகுத்துள்ளார்.
[தொகு] வரலாறு
அக்காலத்தில் வேடன் விலங்குகளைக் கொல்ல வில்லையும் அம்பையும் பயன்படுத்தினான். அவன் அம்பைச் செலுத்தும்போது, வில்லில் வெவ்வேறு நீளமுடைய நாண்களைக் கட்டி, அவற்றை மீட்டும் பொழுது பல இனிய ஒலிகளும் சுரங்களும் உண்டானதை உணர்ந்தான். அதன்மூலம் ஒரு இசைக்கருவியை அமைக்க முனைந்ததன் பயனாய் பிறந்ததே வில்யாழ் என்ற இசைக்கருவியாகும்.
[தொகு] யாழின் அமைப்பு
யாழ் ஒரு மீட்டு வாசிக்கக்கூடிய நரம்புக்கருவி. இதன் இசையொலி பெருக்கி (resonator) தணக்கு எனும் மரத்தால் செய்யப்பட்டது. இது படகு வடிவமாய் இருக்கும். மேலே தோலால் மூடப்பட்டிருக்கும். இந்தத் தோலுக்குப் போர்வைத்தோல் என்று பெயர். போர்வைத்தோலின் நடுவிலுள்ள மெல்லிய குச்சியின் வழியாக நரம்புகள் கிளம்பி மேலே உள்ள தண்டியுடன் பிணைக்கப்பட்டிருக்கும். சில யாழ்களில் மாடகம் அல்லது முறுக்காணிகள் இருந்தன. அத்தகைய யாழ்களில் நரம்புகள் தண்டியின் துவாரங்களின் வழியாகச் சென்று முறுக்காணிகளில் சுற்றப்பட்டிருக்கும். சிலவற்றில் நரம்புக்கட்டு அல்லது வார்க்கட்டு தண்டியில் வரிசையாகக் காணப்படும். வார்க்கட்டுகளை மேலும் கீழுமாக நகர்த்தி நரம்புகளைச் சுருதி கூட்டினர்.[1]
பல்லவர் காலக் கோயிலான காஞ்சி கைலாசநாதர் கோயில் (இராஜசிம்மன் மற்றும் சோழர் காலக் கோயில்களான பொன்செய் நல்துணையீஸ்வரம் கோயில் (பராந்தகன்), திருமங்கலம் கோயில் (உத்தம சோழன்) ஆகியவற்றில் யாழ்ச் சிற்பங்கள் காணப்படுகின்றன.[2]
[தொகு] யாழ் வகைகள்
- பேரியாழ் (21 நரம்புகளை உடையது)
- மகரயாழ் (17 நரம்புகளை உடையது)
- சகோடயாழ் (16 நரம்புகளை உடையது)
- செங்கோட்டியாழ் (7 நரம்புகளை உடையது)
இவற்றைவிட நாரதயாழ், தும்புருயாழ், கீசகயாழ், சீரியாழ், மருத்துவயாழ், ஆதியாழ் எனப்பல வகைகள் இருந்ததாக பண்டைய நூல்கள் கூறுகின்றன.
[தொகு] யாழ் வாசிக்கும் முறை
யாழில் உள்ள ஒவ்வொரு நரம்பும் ஒவ்வொரு சுரத்துக்குச் சுருதி கூட்டப்பட்டிருக்கும். சுத்தசுரங்களே அதில் வாசிக்கமுடியும். யாழைச் சுத்த மேளமாகிய செம்பாலை அல்லது ஹரிகாம்போஜி மேளத்துக்கு முதலில் சுருதி கூட்டி, பின்னர் வேறு இராகங்களைக் கிரகபேதம் செய்து வாசித்தனர்.
[தொகு] யாழின் வீழ்ச்சி
யாழ் தற்போது செல்வாக்கிழந்து வழக்கொழிந்தும் விட்டது. வீணையின் வரவே யாழின் செல்வாக்கையழித்தது என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். யாழ் பல நூற்றாண்டுகள் உருவத்தில் முன்னேற்றம் அடைந்து வீணையாக மாறியது என்ற கருத்தையும் இவர்கள் தெரிவிக்கிறார்கள். நுட்ப சுருதிகளை வாசிக்கக்கூடியது வீணை. அத்துடன் உலோகத் தந்திகளோடு கூடிய மெட்டுக்கள் உள்ளது வீணை. யாழைக் காட்டிலும் வாசிப்பதற்குச் சுலபமானதும் அதே சமயத்தில் ஒலிக்கும் நாதம் அற்புதமாகவும் இருந்ததால், வீணையின் வரவு யாழின் செல்வாக்கைக் குறைத்தாலும், வீணையும் யாழும் சேர்ந்தே பல நூற்றாண்டுகள் இருந்திருக்கின்றன எனக் கருதப்படுகின்றது.
[தொகு] உசாத்துணை
- ↑ செல்லத்துரை, சே.ச., தென்னக இசையியல், ப: 103, 1984, வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல்
- ↑ யாழ் என்னும் இசைக்கருவி - ஒரு பார்வை