பண்பாடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பண்பாடு என்பது மிகவும் பரந்த பொருளுடன் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாக இருக்கிறது. ஆங்கிலத்தில் culture (கல்ச்சர்) என்னும் சொல்லுக்கு இணையான பொருளில் இச் சொல் தமிழில் பயன்படுத்தப்படுகிறது எனலாம். கலாச்சாரம் என்ற சொல்லும் பண்பாட்டுக்கு ஒத்தசொல்லாக பயன்படுகின்றது.
பொதுவாக இது மனிதரின் நடவடிக்கைகளைக் குறிக்கிறது எனலாம். பண்பாட்டின் வெவ்வேறு வரைவிலக்கணங்கள், மனிதச் செயல்பாடுகளை விளங்கிக்கொள்வதற்கான அல்லது அவற்றை மதிப்பிடுவதற்குரிய அளபுருக்களுக்கான வெவ்வேறு கோட்பாடுகளைப் பிரதிபலிக்கின்றனவெனலாம். 1952ல் அல்பிரட் எல். குறோபெர் என்பாரும் கிளைட் குளுக்ஹோனும் பண்பாடு என்பதற்குக் கூறப்படும் 200க்கு மேற்பட்ட வரைவிலக்கணங்களைத் தாங்கள் எழுதிய பண்பாடு: எண்ணக்கருக்களும் வரைவிலக்கணங்களும், ஒரு விமர்சன மீள்பார்வை (Culture: A Critical Review of Concepts and Definitions) என்னும் நூலில் பட்டியலிட்டுள்ளார்கள்.
பொருளடக்கம் |
[தொகு] வரலாற்று ரீதியில் வரைவிலக்கணங்கள்
18ஆம் 19ஆம் நூற்றாண்டுகளின் மேலைத்தேச அறிஞர்களும், இன்றும்கூடச் சிலரும் பண்பாடு என்பதை நாகரிகம் (civilization) என்பதோடு அடையாளம்கண்டு அதை ஒரு இயற்கைக்கு எதிரான ஒன்றாகக் கருதினார்கள். "உயர் பண்பாட்டை"க் குறைவாகக் கொண்டுள்ளவர்கள் கூடுதல் இயல்பானவர்களாகக் கருதப்பட்டது. அத்துடன் உயர் பண்பாட்டின் சில அம்சங்கள் மனித இயல்புகளை அமுக்கிவிடுவதாகவும் சிலரால் விமர்சிக்கப்பட்டது.
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மனிதவியலாளர், பல் வேறுபட்ட சமூகங்களுக்கும் பயன்படுத்தத்தக்க வகையிலான, பண்பாடு என்பதன் பரந்த வரைவிலக்கணமொன்றின் தேவையை உணர்ந்தார்கள். பண்பாடு என்பது மனித இயல்பு என்றும், அது அநுபவங்களைப் பகுத்து குறீயீடாக்கி, குறியீட்டு ரீதியில் வெளிப்படுத்துவதற்கான உலகம் தழுவிய மனிதனுடைய தகுதியை மூலவேராகக் கொண்டது எனவும் அவர்கள் வாதித்தார்கள். விளைவாக ஒன்றிலிருந்து ஒன்று விலகி வாழுகின்ற மக்கள் குழுக்கள், தங்களுக்கெனத் தனித்துவமான பண்பாடுகளை உருவாக்கிக் கொள்ளுகின்றன. எனினும் வெவ்வேறு பண்பாடுகளின் அம்சங்கள் ஒரு குழுவிலிருந்து இன்னொன்றுக்கு இலகுவாகப் பரவ முடியும்.
எனவே வழிமுறை ரீதியாகவும், கோட்பாட்டு ரீதியாகவும் பயனுள்ள வரைவிலக்கணங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டிய தேவை மனிதவியலாளருக்கு ஏற்பட்டது. அவர்கள் பொருள்சார் பண்பாடு என்பதற்கும் குறியீடுசார் பண்பாடு என்பதற்குமிடையே வேறுபாடு கண்டார்கள். இவையிரண்டும் வெவ்வேறு வகையான மனித செயற்பாடுகளை வெளிப்படுத்துவது மட்டுமன்றி, இரண்டும் வெவ்வேறு வகையான வழிமுறைகள் தேவைப்படும் வெவ்வேறுவகைத் தரவுகளையும் உள்ளடக்கியுள்ள காரணத்தால் இந்தப்பகுப்புத் தேவையாக இருந்தது.
பண்பாடு என்பதை விளங்கிக்கொள்ளும் இன்னொரு பொதுவான முறை மூன்று மூலகங்களை உள்ளடக்கியுள்ளது: பெறுமானம் (எண்ணங்கள்), நெறிமுறைகள் (நடத்தை), மற்றும் பொருட்கள் (அல்லது பொருள்சார் பண்பாடு). வாழ்வில் முக்கியமானது எது என்பது பற்றிய எண்ணங்களே பெறுமானங்களாகும். அவை பண்பாட்டின் ஏனைய அம்சங்களை வழிநடத்துகின்றன. நெறிமுறைகள் (Norms) என்பன, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆகும். ஒவ்வொரு பண்பாட்டுக் குழுவும் இந்த norm களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கொண்டுள்ளது. சமூகம் நடைமுறைப்படுத்தும் இந்த நெறிமுறைகள் சட்டங்கள் எனப் பொதுவாக வழங்கப்படுகின்றன. மூறாவது அம்சமான "பொருட்கள்" பண்பாட்டின் "பெறுமானங்கள்", நெறிமுறைகள் என்பவற்றிலிருந்து பெறப்படுகின்றது.
[தொகு] தொடர்புள்ள தலைப்புக்கள்
[தொகு] நாடுகளின் பண்பாடுகள்
- அல்பேனியா
- அவுஸ்திரேலியா
- பெல்ஜியம்
- பிரேசில்
- கனடா
- சிலி
- சீனா
- டென்மார்க்
- எகிப்து
- பிரான்ஸ்
- இந்தியா
- ஜப்பான்
- கொரியா
- மெக்ஸிக்கோ
- நெதர்லாந்து
- நியூசிலாந்து
- பெரு
- போர்த்துக்கல்
- ஐக்கிய இராச்சியம்
- வேல்ஸ்
- ஐக்கிய அமெரிக்கா